தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் சிறுகதை – வாசிப்பும் படைப்பும் பயிற்சிப் பட்டறை

352views
தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் பொருநை இலக்கியத் திருவிழா, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் அக்கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் புதிய இளைய தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்கும் நோக்கில், சிறுகதை – வாசிப்பும் படைப்பும் என்னும் பொருண்மையில் மாணவ, மாணவியர்களுக்கான ஆறு நாட்கள் தங்கிப் பங்கேற்கும் பயிற்சிப்பட்டறை டிசம்பர் 29, 2024 முதல் ஜனவரி 03, 2025 வரை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் இ.ஆ.ப., அவர்கள் சிறுகதை குறித்து மாணவர்களுடன் சிறப்புரை ஆற்றி கலந்துரையாடினார். தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் இராமதாஸ் தலைமையுரை ஆற்றினார். பல்கலைக்கழகக் கல்லூரிகளின் இயக்குநர் வெளியப்பன் சிறப்புரை ஆற்றினார். பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் வரவேற்றுப் பேசினார். இணை ஒருங்கிணைப்பாளர் பவானி நன்றி கூறினார்.
10 பகுதிகளாக பயிற்சிப்பட்டறை பிரிக்கப்பட்டு முதல் நாள் பயிற்சிப்பட்டறையில் குருவிகுளம் வளனார் கல்லூரி முதல்வர் காசிராஜன் கதை சொல்லும் மரபும் கேட்கும் மரபும் பற்றி பேசினார். சாகித்ய பால புரஸ்கார் விருதாளர் உதயசங்கர் சிறுகதை எழுதுவது எப்படி? என்று விளக்கினார்.
இரண்டாவது நாள் பயிற்சிப்பட்டறையில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறு பற்றி கூறினார். தமிழ்ச்சூழலில் சிறுகதைப் படைப்பாளர்கள் என்ற தலைப்பில் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி முதல்வர் அன்பரசு விவரித்தார்.
மூன்றாவது நாள், பயிற்சிப்பட்டறையில் எழுத்தாளர் நாறும்பூநாதன் கதை சொல்லும் உத்திகள் பற்றி பேசினார். சிறுகதையின் கூறுகளும் ஆக்கமும் பற்றி பேராசிரியர் ராமசாமி எடுத்துரைத்தார்.
நான்காவது நாள், பயிற்சிப்பட்டறையில் சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளின் போக்குகள் பற்றி எழுத்தாளர் மணிமாறன் விளக்கினார். சங்கரன்கோவில் ப.மு.தே. கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஹரிஹரன் கால வரிசையில் கரிசல் எழுத்தாளர்கள்  பற்றி பேசினார்.
ஐந்தாவது நாள், பயிற்சிப்பட்டறையில் எழுத்தாளர் லட்சுமணப்பெருமாள் நானும் என் கதைகளும் என்னும் தலைப்பில் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் பூமிச்செல்வம் தமிழ்ச்சூழலில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் பற்றி விவரித்தார்.
ஆறாவது நாள், பொருநை இலக்கியத் திருவிழாவில் கலந்து கொண்டு சிறுகதை, படைப்பாளர்கள் மற்றும் பண்பாடுகள் பற்றி 28 மாணவ, மாணவியர் பேசினர்.
பயிற்சிப்பட்டறையில் கவிஞர் தேவதேவன், தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா, சென்னை அண்ணா நூலகத்தின் முதன்மை நூலகர் காமாட்சி மற்றும் கவின்மலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பயணி சுதாகர் மற்றும் படைப்பாளர் முருகபூபதி மாணவர்களின் கதைகளை மீள் பார்வை செய்தனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சென்னை, கோயம்புத்தூர், நாமக்கல், சேலம், ராமநாதபுரம், திருச்சி, திருப்பூர், பெரம்பலூர், மதுரை ஆகிய தமிழகத்தின் 13 மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இளங்கலை/இளநிலை அறிவியல், முதுகலை பயிலக்கூடிய 60 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. செல்பேசி, சிறுகதை வாசிப்பிற்கும் படைப்பிற்கும் பயிற்சிக்கும் இடையூறாக இருக்கும் என்பதால் ஆறு நாட்களும் கல்லூரியில் செல்பேசியை ஒப்படைத்து பயிற்சி முடிந்து செல்லும் போது பெற்றுக்கொண்டனர். மிகச்சிறந்த 54 தமிழ் மற்றும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுத்து வழங்கப்பட்டன. இம்மாணவர்களின் சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. பட்டறைக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், இணை ஒருங்கிணைப்பாளர் பவானி மற்றும் பயணி சுதாகர், கல்லூரி பேராசிரியர்கள் சிவசுப்பிரமணியன், சிவகுமார், கணேசன், ரவிநாராயணன், அலுவலகப் பணியாளர் கணேசன் ஆகியோர் உடனிருந்து செய்தனர். பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும், தூத்துக்குடியில் நடைபெற்ற பொருநை இலக்கியத் திருவிழாவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திருமிகு க. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் சான்றிதழ், சிறுகதைத்தொகுப்பு நூல் மற்றும் பரிசினை வழங்கினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!