தமிழகம்

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றுபெற்ற சகோதரிகளுக்கு தமிழக முதல்வர் பாராட்டு

24views
சென்னை ;
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய தேர்வில் ஒரே வீட்டிலிருந்து வெற்றிபெற்ற சகோதரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர்கள் மு.முருகேஷ்-அ.வெண்ணிலா. இவர்களுக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் மு.வெ.கவின்மொழி. அடுத்து இரட்டையர்களான மு.வெ.நிலாபாரதி – மு.வெ.அன்புபாரதி. மூவருமே 11, 12-ஆம் வகுப்பு வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப் பள்ளியில் படித்துவிட்டு, இளங்கலை வேளாண்மை பட்டப் படிப்பை முடித்தவர்கள். யுபிஎஸ்சி தேர்வுக்காகச் சென்னையில் பயிற்சி பெற்று வந்தனர். பின்னர் தமிழக அரசு தொடங்கிய ‘நான் முதல்வன்’ திட்டத்திலும் இணைந்து, தங்களது பயிற்சியைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில், கவின்மொழி, நிலாபாரதி இருவரும் 2024-ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்று, நேர்காணலுக்காகப் புதுடெல்லிக்குச் சென்றனர். கடந்த ஏப்ரல் 22 அன்று வெளியான தேர்வு முடிவில் கவின்மொழி, அகில இந்திய அளவில் 546- ஆவது ரேங்கில் தேர்வுபெற்றார். மே 19 அன்று வெளியான யுபிஎஸ்சி வனப்பணிக்கான தேர்வு முடிவில், அகில இந்திய அளவில் 24-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்று நிலாபாரதி தேர்வானார்ர். ஒரே வீட்டில் அக்கா ஐபிஎஸ் அதிகாரியாகவும், தங்கை ஐஎஃப்எஸ் அதிகாரியாகத் தேர்வான செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற இருவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மாணவிகள் இருவரும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக, தங்களது வெற்றிக்கு உதவியாக இருந்த முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
படக்குறிப்பு:
யுபிஎஸ்சி தேர்வில் ஒரே வீட்டில் அக்கா ஐபிஎஸ் அதிகாரியாகவும், தங்கை ஐஎஃப்எஸ் அதிகாரியாகவும் தேர்வான கவின்மொழி, நிலாபாரதி இருவரும் ‘நான் முதல்வன்’ திட்டத்தைத் தொடங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். முதல்வர் இருவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். உடன் பெற்றோர் மு.முருகேஷ் & அ.வெண்ணிலா.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!