தமிழகம்

கடையநல்லூர் அரசு மருத்துவ மனையில் செவிலியர் தின விழா; தன்னலமற்ற சேவை செய்வோம் என செவிலியர்கள் உறுதி ஏற்பு

64views
“கை விளக்கேந்திய காரிகை” என மக்களால் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினம் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மனித சமூகத்திற்கு தன்னலமற்ற சேவை புரிவோம் என்ற உறுதி மொழியை நைட்டிங்கேல் அம்மையார் நினைவாக கைகளில் விளக்கு ஏந்தி ஏற்றுக் கொள்கின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் மே.12 வெள்ளிக் கிழமை நடைபெற்ற செவிலியர் தின விழாவிற்கு தலைமை மருத்துவர் அனிதா பாலின் தலைமை தாங்கினார். மருத்துவர்கள் மீனாட்சி சித்திரை கண்ணு ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைச் செவிலியர் ஸ்டெல்லா வரவேற்புரை ஆற்றினார். உலக செவிலியர் தின நிகழ்ச்சியை முன்னிட்டு அனைத்து செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டு நைட்டிங்கேல் அம்மையார் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி தன்னலமற்ற சேவையை பொதுமக்களுக்கு தொடர்ந்து செய்வோம் என உறுதி மொழி ஏற்றனர்.
மேலும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெரும் உள் நோயாளிகள், வந்து செல்லும் வெளி நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் உலக செவிலியர் தினம் குறித்து மருத்துவர் மீனாட்சி சித்திரை கண்ணு எடுத்துரைத்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, பெற்றோர்கள் கூட தொட்டு கவனித்து கொள்ளும் பெரும் நோய் வாய்பட்டவர்களை தங்களது திருக்கரங்களால் தொட்டு பணிவிடை செய்து காப்பாற்றும் உன்னதமான பணியை செய்பவர்கள் செவிலியர்கள். அவர்களுக்கான நாளாக அவர்களின் சேவைகள், தியாகங்கள் மற்றும் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக 1965 முதல் சர்வதேசிய செவிலியர்கள் அமைப்பால் உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. செவிலியர்களின் முன்னோடியாக போற்றப்படும் இத்தாலியை சேர்ந்த ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இந்த தினம் 1974 ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1900 கால கட்டங்களில் எங்கெல்லாம் போர் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று கைவிளக்கை தூக்கி கொண்டு காயம் பட்டவர்களுக்கு சேவை செய்தார் நைட்டிங்கேல் அம்மையார். அது மட்டுமின்றி நவீன செவிலியர் சேவையை உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் அவரே. அந்த காலத்திலேயே செவிலியர்களுக்கு இருக்கும் வசதி குறைபாடுகள் குறித்து குரல் கொடுத்தவர். செவிலியர் பயிற்சி பள்ளியை துவங்கி நவீன செவிலியர் சேவையை பரப்பவியரும் இவரே. இவரை தொடர்ந்தே இன்றளவும் செவிலியர் பயிற்சி முடித்தவர்கள் தங்கள் கைகளில் விளக்கேந்தி சமூகத்திற்கு தன்னலமற்ற சேவையாற்ற சபதம் ஏற்று கொள்கின்றனர். என தெரிவித்தார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!