தமிழகம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஹீமோபிலியா தினம் அனுசரிப்பு

136views
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக ஹீமோபிலியா தினம் அனுசரிக்கப்பட்டது. இத்தினத்தின் சிறப்பு நிகழ்ச்சி தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர் பி. பிரேமலதா MD,DGO மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் D.ORTHO ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா DGO ஹீமோபிலியா தின நிகழ்ச்சியை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட ஹீமோபிலியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் DEIC நோடல் ஆபீசர் மருத்துவர் கி.கீதா DCH மற்றும் பொதுநல மருத்துவர் மருத்துவர் அரவிந்த் ராம்.MD,GENDRAL MEDICINE ஆகியோர் நோயின் தன்மை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பு, முன்னெச்சரிக்கை, முதலுதவி சிகிச்சை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பயனாளர்கள் அனைவருக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா ஆகியோரால் மாற்றுத்திறனாளி சான்று அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும் தளிர் கிளினிக் தென்காசியில் 13 ஹீமோபிலியா நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்கும் விதமாக பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் சண்முகவேல், இந்த நோய் பற்றியும் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும், தன்னைப் போன்ற நோயாளிகள் படும் கஷ்டத்தை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். அவர் கூறும் போது, தற்போது தமிழக அரசின் சீரிய முயற்சியில் இந்த மருந்துகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தாராளமாக கிடைக்கிறது. அதனால் நாங்கள் மருந்துகள் தேவைப்படும் போது உடனுக்குடன் சிகிச்சை பெற்று எங்களுடைய பணிகளை செய்து வருகிறோம். முந்தைய காலங்களில் இந்த மருந்துகள் கிடைக்காமல் நாங்கள் எங்களுடைய பணிகளை செய்ய முடியாமல் தவித்தோம். இந்த மருந்துகள் தாராளமாக எங்களுக்கு கிடைக்க வசதிகள் ஏற்படுத்தித் தந்த தமிழக அரசுக்கு எங்கள் அனைவரும் சார்பாக நன்றி என கூறினார்.

உலக ஹீமோபிலியா தினத்தை சிறப்பாக நடத்திய குழந்தை நல மருத்துவர் மற்றும் பொதுநல மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள், அனைவரையும் இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா வெகுவாக பாராட்டினார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா. ஜெஸ்லின் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் தற்போது சுமார் 70 லிருந்து 80 ஹீமோபிலியா நோயாளிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் திருநெல்வேலி சென்று அதற்கான சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் வண்ணம் தென்காசி அரசு மருத்துவமனையிலேயே ஹீமோபிலியா சென்டர் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாடு அரசு ஹீமோபிலியா நோயாளிகளை மாற்றுத்திறனாளிகள் வகையில் தற்போது சேர்த்துள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து ஹீமோபிலியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அடுத்த வாரத்திற்குள் மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். நிகழ்ச்சியின் நிறைவாக மருத்துவர் சி. மோனிகா நன்றி கூறினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!