தமிழகம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட மிகப்பெரும் அறுவை சிகிச்சை; அரசு மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

284views
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இரண்டு மிகப்பெரிய எலும்பு முறிவு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும், மிகப்பெரும் அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்துள்ள மருத்துவர்களையும், மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. ரவிச்சந்திரன் பாராட்டினார்.
தென்காசி மாவட்டம் சிவகிரியை சார்ந்த 45 வயது வேம்பு என்ற பெண்மணி ஏழு வருடங்களாக இடது மூட்டு வலியில் அவதிப்பட்டு வந்தார். நடக்கவும் படி ஏறி இறங்குவும், தரையில் அமரவும் முடியாமல் மிகவும் வலியுடன் இருந்து வந்தார். அவரை புளியங்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தென்காசி அரசு மருத்துவமனை எலும்பு முறிவு பிரிவிற்கு பரிந்துரை செய்திருந்தனர். இந்நிலையில், தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவர் மது, முத்துராமன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் ஆகியோரின் ஆலோசனையின் படி அனைத்து பரிசோதனைகளும் செய்து, அவருக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

நோயாளி வேம்புவிற்கு 29.03.2023 காலை மாவட்ட தலைமை மருத்துவமனையில் வைத்து இடது கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. மேலும் 33 வயது கணேஷ்குமார் என்ற வாலிபருக்கு வாகன விபத்தில் வலது கால் மூட்டிற்கு கீழே உள்ள எலும்பு முறிந்து அனுமதிக்கப்பட்டவருக்கும், கம்பி பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த இரண்டு நோயாளிகளுக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், மருத்துவர்கள் மது, முத்துராமன், திருமலை குமார், இம்ரான் மயக்க மருத்துவர்கள் சுரேஷ் மில்லர், ராஜேஸ்வரி, நீத்து, பிரியதர்ஷினி மற்றும் அறுவை அரங்கு செவிலியர்கள், அறுவை அரங்க உதவியாளர்கள் கொண்ட குழு வெற்றிகரமாக செய்து முடித்தது. மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜெஸ்லின் அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனையின் பணியாளர்களை பாராட்டினார்.
இணை இயக்குனர் நலப்பணிகள் பிரேமலதா கூறும் போது தொடர்ந்து தென்காசி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தென்காசி மருத்துவமனை, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் எஸ் எஸ் ராஜேஷ், இருவரின் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது என கூறினார். தென்காசி மருத்துவமனை மகப்பேறு, அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், அவசர சிகிச்சை பிரிவு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம், கண் புறை அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, மருந்தகம், ஆய்வகம், நுண் கதிர் பிரிவு, குடும்ப நலம் என அனைத்து பிரிவுகளும் சிகிச்சை அளிக்கும் குறியீடுகளிலும் முன்னேற்றத்துடன் செயல்படுகிறது என்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. மருத்துவர்கள் திறம்பட மிகப்பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்குகிறார்கள். சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகக் கூடிய இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், தென்காசி மருத்துவமனையில் சிறப்பாக செய்துள்ளனர். தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தென்காசி மருத்துவமனையில் செய்யப்படும் இந்த அனைத்து சேவைகளையும், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!