தமிழகம்

சிவகாசியில் பரபரப்பு பிரசித்திபெற்ற கோவிலின் கோபுரத்தில் திடீர் தீ விபத்து

133views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கோவிலில் உள்ள சன்னதிகள் மற்றும் கோபுரத்தில் வர்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகிறது.
கோபுரத்தில் வர்ணம் தீட்டுவதற்காக சாரம் கட்டப்பட்டு, பணிகள் பாதுகாப்பாக நடைபெறுவதற்காக சாரத்தை சுற்றிலும் பச்சை வர்ண துணியால் மூடப்பட்டு, வர்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு எதிர்பாராத விதமாக, சாரத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த துணியில், கோபுரத்தின் மேல் பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரியத் துவங்கியது. சாரத்தின் துணியில் பற்றிய தீ மளமளவென்று கொளுந்துவிட்டு எரிந்தது. கோவிலின் மிக அருகிலேயே சிவகாசி தீயணைப்பு நிலையம் இருப்பதால், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் தீ விபத்தால் கோபுரத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த சாரமும், துணி பந்தலும் கடுமையாக சேதமடைந்தது. தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்று தீயணைப்பு வீரர்கள், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் கோபுரத்திற்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் கோபுர பணியில் ஆட்கள் யாரும் இல்லாததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
பிரசித்திபெற்ற கோவிலின் கோபுரத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம், சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!