அயர்லாந்து அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 107 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
ஐசிசி டி-20 உலகக் கோப்பை போட்டி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ஏ பிரிவில் உள்ள நெதர்லாந்து Vs அயர்லாந்து அணிகள் மோதியது. இப்போட்டி அபுதாபியில் நடைபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தனர்.
அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக மேக்ஸ் ஓடோட், பென் கூப்பர் இருவரும் களமிறங்கினர். பென் கூப்பர் சந்தித்த முதல் பந்திலே ரன் அவுட் ஆனார். பின்னர் இறங்கிய அக்கர்மன், ரியான் டோஸ்கேட், ஸ்காட் எட்வர்ட்ஸ் ,ரோலோபி வான் தொடர்ந்து 4 விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இறுதியாக நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தனர். நிதானமாக விளையாடி வந்த தொடக்க வீரர் மேக்ஸ் ஓடோட் 51 ரன் எடுத்தார். அயர்லாந்து அணியில் கர்டிஸ் கேம்பர் 4, மார்க் அடேர் 3 விக்கெட்டை பறித்தனர். இதனால், 107 ரன்கள் இலக்குடன் அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக பால் ஸ்டிர்லிங், கெவின் ஓ பிரையன் இருவரும் களமிறங்கினர்.
வந்த வேகத்தில் கெவின் ஓ பிரையன் 9 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.. அடுத்து இறங்கிய கேப்டன் ஆண்ட்ரூ பால்பர்னி 8 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களம் கண்ட கரேத் டெலானி, பால் ஸ்டிர்லிங் உடன் கூட்டணி அமைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் கூட்டணியில் 59 ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய கரேத் டெலானி 44 ரன்கள் எடுத்தார்.
இறுதியாக அயர்லாந்து அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 107 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.