தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி டி-20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. ஐசிசி டி-20 உலகக் கோப்பையின் இன்றைய பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா ஃபீல்டிங் தேர்வு செய்தனர். அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரிஸ்வான் மற்றும் பாபர் ஆஸம் இருவரும் களமிறங்கினர். மூன்றாவது ஓவரில் ரபாடா பந்துவீச்சில் 15 ரன்களில் பாபர் ஆஸம் விக்கெட்டை இழந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் நார்ட்ஜே பந்துவீச்சில் ரிஸ்வான் 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார். முகமது ஹபீஸ் 13 ரன்களில் அவுட் ஆனார். இதனால், பாகிஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 66 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் விளையாடிய ஃபகார் ஜமான், சோயிப் மாலிக் கூட்டணி 14 ஆவது ஓவரில் 114 ரன் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய ஜமான் (52*) ரன் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினர்.
இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணியின் ரபாடா 3, நார்ட்ஜே, மெஹராஜ் தலா 1 விக்கெட்டை பறித்தனர். 187 ரன்கள் இலக்குடன் தென்னாபிரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் குயின்டன் டி காக் 6 , ரீசா ஹென்ட்ரிக்ஸ் 7 என்ற சொற்ப ரன் எடுத்து வெளியேறினர்.
பின்னர் இறங்கிய ராசி வான் டெர் டுசென், கேப்டன் டெம்பா பாவுமா இருவரும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீண்டு கொண்டுவந்தனர். நிதானமாக விளையாடிய கேப்டன் டெம்பா பாவுமா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்னில் விக்கெட்டை இழந்தார். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய ராசி வான் டெர் 51 பந்தில் 101* ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் நின்றார். அதில், 10 பவுண்டரி , 4 சிக்ஸர் அடங்கும்.
இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.