சிறுகதை

காலம் நல்ல காலம்

207views
முனைவர் என் பத்ரி
அன்று காலை மணி 8 இருக்கும். சுரேஷ் அலறி அடித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தான். படுக்கைக்கு எதிரே சுவற்றில் இருந்த கடிகாரம் 8 மணியைக் காட்டியது. இதைப் பார்த்த அவன் கலக்கமடைந்தான்.
அன்று அவனுக்கு 9 மணிக்கு ஒரு நேர்காணல் இருந்தது. அதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டு அந்த அலுவலகத்தை அடைவதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் தேவைப்படும்.
அவனுக்கு அப்பா இல்லை. வயதான அம்மாதான் அவனுக்கு எல்லாமே. அவன் எப்பொழுதுமே நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு இரவு நேரம் கழித்துதான் வீட்டுக்கு வந்து இரவு உணவை உண்டு படுக்கப் போவான்.
நேற்று இரவும் அப்படித்தான் அவன் வீட்டுக்கு வந்து படுக்க நள்ளிரவு மணி 12 ஆகிவிட்டது. அவனுடைய அம்மா அவனிடம் பலமுறை சீக்கிரம் படுத்து சீக்கிரம் எழுந்திரு என்று சொல்லி சொல்லி அலுத்துவிட்டாள்.100 நாள் வேலை திட்டத்தில் அவள் உழைத்து வந்து கொண்டு வரும் பணத்தில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.
வரும் எல்லா நேர்கானல்களுக்கும் ஒழுங்கான முன் தயாரிப்பு இல்லாமலும், நேரம் கழித்து செல்வதாலும் இவனுக்கு நேர்காணல் வெற்றிகரமாக இதுவரை அமையவில்லை.இது குறித்து அவனுடைய வயதான அம்மாவுக்கு மிகுந்த கவலை.
அந்த நிலையில் இருக்கின்ற இந்த ஒரு மணி நேரத்தில் குளித்து சாப்பிட்டு பேருந்தினை பிடித்து சென்று நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.65 வயதிலும் அவனுடைய அம்மா காலையிலேயே எழுந்து அவனுக்கு காலை உணவையும் மதிய உணவை கையில் கொடுப்பதற்கும் தயாராக வைத்திருந்தாள்.
எழுந்தவுடன் சுரேஷ் அம்மாவை பார்த்து, ’ அம்மா, என்னை ஏன் எழுப்பவில்லை? இப்பொழுது நேரம் ஆகிவிட்டது. நான் எப்படி நேர்காணலுக்கு செல்வேன்’ என்று புலம்பித் தீர்த்து விட்டான்.
’ஒவ்வொரு முறையும் நானே உன்னை நேர்காணலுக்கு செல்ல அனுப்புவதென்றால் உனக்கு எப்பொழுதுதான் பொறுப்பு வரும்? அதனால் தான் நான் இந்த முறை எழுப்பவில்லை.’ என்று அமைதியாக அவனுடைய அம்மா பார்வதி பதில் சொன்னாள். அரைகுறையாக குளித்துவிட்டு அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு பேருந்தினை பிடிக்க விரைந்தான் சுரேஷ்.
இந்த நேர்காணலில் எப்படியும் வேலையை பெற்று விட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்தது.பேருந்தை பிடித்தான். நேர்காணல் அலுவலகத்திற்கு அருகிலிருந்த பேருந்து நிலையத்தில் இறங்கி அவன் மிக வேகமாக நேர்காணல் நடைபெறும் அலுவலகத்தை அடைந்தான் சுரேஷ். அவனிடம் இயல்பை விட இன்று சுறுசுறுப்பு அதிகமாகவே இருந்தது.
அலுவலகத்தை அடைந்த போதுதான் தன்னுடைய கைப்பேசியில் நேரத்தை பார்த்தான். மணி 9 ஆக இருந்தது. ’சரியான நேரத்திற்கு வந்து விட்டோம்’என்ற மன நிறைவு அவனுடைய மனதில் ஏற்பட்டது.
ஆனால், ’இது எப்படி? நமது கணக்குப்படி பார்த்தால் இப்பொழுது மணி 10ஆக இருக்க வேண்டுமே?’ என்று நினைத்தான் அப்பொழுதுதான் அம்மா அவனுக்கு திரும்பத் திரும்ப காலம் பொன் போன்றது. அதை உன்னால் எப்பொழுதும் வாங்க முடியாது. இளமை முக்கியமானது என்ற பல முறை சொல்லி வருவது நினைவுக்கு வந்தது.

அம்மாதான் இந்த வேலையை பண்ணி இருப்பாங்க. அவனுடைய சுவர் கடிகாரத்தில் ஒரு மணி நேரத்தை கூட்டி வைத்து இவனுடைய சுறுசுறுப்பையும் கூட்டி வைத்த அம்மாவுக்கு மனதால் நன்றியைச் சொன்னான். அம்மாவின் இந்தச் செய்கையால்தான் அவன் இன்று காலத்தின் அருமையை உணர்ந்து கொண்டான்.
நேர்காணலை ஒரு வழியாக முடித்த சுரேஷுக்கு, கண்டிப்பாக இந்த வேலை கிடைத்து விடும் என்னும் நம்பிக்கை இருந்தது. அப்படியே வெற்றியும் பெற்றான். நேரடியாக வீட்டிற்கு திரும்பி அம்மாவின் கால்களில் விழுந்து அவருடைய வாழ்த்துக்களை பெற்றான். இப்பொழுது கடிகாரத்தைப் பார்த்தான். அவனுடைய கைபேசி கடிகாரமும் அந்த சுவரின் கடிகாரமும் ஒரே நேரத்தை காட்டின.திருத்தப்பட்டது கடிகாரம் மட்டுமல்ல சுரேஷின் காலம் கருதி செயலாற்றும் திறமையும்தான். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய அம்மா அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே காஃபியை கொண்டு வந்து கொடுத்தாள்.அன்று முதல் சோம்பேறி சுரேஷ் சுறுசுறுப்பு சுரேஷானான். இனிமே சுரேஷுக்கு காலம் நல்ல காலம்தான்!

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!