சிறுகதை

லவ் டுமாரோ

83views
ஷோபி…
உன் உள்ளத்துக்கு குமுறலை சுமந்து வந்த கடிதம் கண்டேன். நீண்ட நேரம் சிந்தித்தேன்.
நம் காதல் போராட்டத்திற்கு ஒரு நீண்ட ஓய்வளிக்க சமயம் வந்துவிட்டது. அதற்காக சந்தோஷமடைவோம்.
இது கடிதம் அல்ல… அனுபவத்தின் பகிர்வுகள்.
என்னை பிரிந்த இந்த இரண்டு வருடங்களில் என் நினைவில் இருக்கும் வார்த்தைகள் எது தெரியுமா? நீ முதன் முதலில் என்னை பார்த்துச் சொன்ன “எக்ஸ்கியூஸ் மீ” எனும் வார்த்தை தான். இதுவே நம் காதல் அத்தியாயத்தின் கடைசி வார்த்தைகளாகவும் ஆகிவிட்டது.
நம் காதலுக்கு காரணமான விழிகளை மன்னித்து விடுவோம். இதமான நினைவுகளை மட்டுமே சுமந்து ஜெயித்து விட்டோம்.
அதை புரிந்து கொள்ளாத மதவெறி பிடித்த மனிதர்களுக்கிடையில் போராடி உயிர் பலி தந்து, முடிவில் பகையைச் சுமந்து எங்காவது பறந்து போய் தனிமைச் சிறையில் சிக்கி தவிக்க வேண்டாம்…
காதலில் ஜெயிப்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் தோற்றுவிடுவார்கள்.
உண்மையான காதல் என்பதை உணர்வுகளின் பரிமாற்றமே தவிர உணர்ச்சிகளின் இடமாற்றம் கிடையாது. நம்மை நாம் நன்றாகவே புரிந்து கொண்டோம்.

காதல் என்றால் என்ன?
கண்களில் துவங்கி இதயத்தில் முடிவதா..?
அல்ல.. உணர்வுகளில் துவங்கி மௌனமாய் வாழ்வதே.. காதல்..
நாம் நம் காதலுக்குள்ளேயே வாழ்வோம். காமத்திற்குள் வாழ வேண்டாம். இது நமக்கு பிரிவு அல்ல.. காரணம் ஏற்கனவே நாம் உறவல்ல..
நட்பெனும் பெயரில் ஈர்க்கப்பட்டு இரண்டு இதயங்கள் பேசிக் கொண்டது. அப்படி இருக்க பரிமாற்றங்களுக்கு மட்டுமே ஓய்வு.. நமக்கல்ல…
உண்மையான காதல் நினைவில் தான் வாழ்கிறது. அதில் தான் காதலின் முழுமையை நன்கு உணர முடிகிறது.
உறவுக்குள் அதை அழைத்தால் அர்த்தமின்றி போய்விடும்.
நாம் சராசரியிலிருந்து விலகி நின்று சற்று யோசிப்போம்.
“இந்த காதலில் வெற்றி அடைந்தால் சாதிப்பது என்ன?”
“தோல்வி அடைந்தால் இழக்கப்போவது என்ன?”
“ஒன்றுமில்லை”
காதலை நாம் உருவாக்கவில்லை… அது நம்மை விட்டுப் போனால் வருந்துவதற்கு…
தோல்விக்கு அடையாளமாய் ஒரு தாஜ்மஹாலை காண்கிறோம். வெற்றிக்கு அடையாளமாய் எதை காண்கிறோம்?
விட்டுக் கொடுப்பதும், விலகுவதும் மனங்களின் போக்கு…
ஆனால் நாமோ நம் காதலை விட்டு தரவுமில்லை… நம் நினைவுகளை விட்டு விலகமில்லை… மாறாக இது நம் காதலுக்கு விடுமுறை என நினைத்துக் கொள்வோம்.
பொன் முகில்
                                                                                                                                                                                                                                                                        ஓவியம்: ஆர்.அசோக்குமார்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!