தமிழகம்

மகான்களின் பாதம் பற்றினால் நமக்கு எல்லா நலனும் கிடைக்கும் ஆன்மிக சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேச்சு

74views
மகான்களின் பாதம் பற்றினால் நமக்கு வாழ்வில் எல்லா நலனும் கிடைக்கும் என்று பக்தி சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார் இது பற்றிய விவரம் வருமாறு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மகா பெரியவர் முக்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு மதுரை எஸ் எஸ் காலனி எஸ். எம்.கே. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தினமலர் ஆன்மீக மலரில் எழுதும் எழுத்தாளர் இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் *மகான்களின் மகிமை* என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் பேசியதாவது காஞ்சி மகா பெரியவர் முக்தி அடைந்த இந்த நல்ல நாளிலே அவரைப் பற்றி சிந்திக்கும் பேற்றினை நாம் பெற்று இருக்கின்றோம். மனிதன் மனிதனாக வாழ்வது எப்படி என்பதை தான் வாழ்ந்து காட்டிய ஒரு மகான் மகா பெரியவர். மனிதனை மனித நிலையிலே இருந்து புனித நிலைக்கு எடுத்துச் செல்லக்கூடிய மாபெரும் பணியை தன் தவத்தின் மூலமாக காஞ்சி மகா பெரியவர் இந்த உலகிற்கு தந்து அருளினார்கள். மனிதன் பல்வேறு கவலைகளில் தினம் உழன்று கொண்டு இருக்கிறான்.
இந்த சூழலில் மகான்களின் பாதங்களை பற்றுபவர்களுக்கு கவலைகள் பறந்து போகின்றன. காரணம் அவர்கள் தனக்கென வாழாமல் பிறக்கென வாழும் தவ சீலர்கள். தர்மம் ஒன்றே அவர்களின் வாழ்க்கை நெறியாகும். நூறு ஆண்டுகள் இந்த உலகத்திலே வாழ்ந்த மகா பெரியவர் தம்முடைய செய்தியாக இந்த உலகத்திற்கு தந்த செய்தி *எல்லோரும் ஹேமமாக இருங்கோ* என்று தனது வாழ்க்கையின் நிறைவில் இரண்டு முறை மேச்சேரி பட்டு சாஸ்திரிகள் அவர்கள் மூலமாக நமக்கு சொல்லி அருளினார்கள். தம் காலத்தில் வாழ்ந்த அத்தனை ஆன்மீக பெரியவர்களோடும் தொடர்பு கொண்டு தர்மத்தை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். இந்த மார்கழி மாதத்திலே நாம் இன்று பாடக்கூடிய திருப்பாவை திருவெம்பாவை பாடல்களை 1960 ஆம் ஆண்டுகளிலே எல்லா இடங்களிலும் திருப்பாவை திருவெம்பாவை மாநாடுகளை மிகச் சிறப்பாக நடத்தி இந்த பக்தி பாடல்கள் எல்லா இடத்திலும் பரவுவதற்கு காரணமாக இருந்தவர்கள் .தேவாரம் திருவாசகம் நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் அபிராமி அந்தாதி ஆகிய பாடல்களை பக்தர்களிடம் எப்பொழுதும் பாடச் சொல்லி அவர்களின் குறைகளை தீர்த்து அருளுவார்கள் .ஒரு மனநிலை சரியில்லாத பெண்மணி பற்றி அவரது உறவினர்கள் பரிகாரத்தை கேட்கிற பொழுது அந்த பெண்ணை அபிராமி அந்தாதி பாடச்சொன்னார்கள். அந்தப் பெண்ணுக்கு பாட முடியாவிட்டாலும் அவர்கள் காதிலே விழும்படி மற்றவர்களை படிக்கச் சொல்லி கேட்கச் சொன்னார்கள். சில நாட்களிலேயே அபிராமி அந்தாதி கேட்ட அந்த பெண் உடனடியாக நல்ல நிலைக்கு திரும்பிய செய்திகள் நம்மைப் பரவசப்படுத்துகின்றன. அதே போல பார்வை குறைபாடு உள்ள ஒரு பக்தர் மகானிடம் விண்ணப்பம் செய்த பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் காஞ்சிபுரத்தில் பாடி அருளிய தேவார திருப்பதிகத்தை பாடச் சொல்லி அவர்களுக்கு தீர்வு தந்தார்கள். அவர்கள் தொடர்ந்து *பற்றென இன்றி* என்று திருப்பாடலை பாடிய அளவிலே கண் பார்வையினை பெற்றார்கள். இவ்வாறு தமிழ் பாக்கள் மூலம் பக்தியையும் ஆன்மீகத்தையும் இந்த உலகத்திலே வளர்த்தவர் காஞ்சி மகா பெரியவர். நாமும் மகா பெரியவர் சொன்ன தர்ம நெறிகளை பின்பற்றி அவரின் அருளை பெறுவதுடன் சமுதாயம் நலம் பெற தினசரி பிரார்த்தனை செய்வோம் இவ்வாறு இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!