தமிழகம்

சிவகாசி பகுதியில், பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் துவங்கியது.. தொழிலாளர்கள் மகிழ்ச்சி

118views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணிகள் துவங்கியிருப்பதால், பட்டாசு தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 40 நாட்களுக்கு பின்பு, பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி பணிகள் துவங்கப்பட்டுள்ளது. வழக்கமாக தீபாவளி பண்டிகை முடிந்தபின்பு, பட்டாசு ஆலைகளில் கையிருப்பில் இருக்கும் பட்டாசுகள், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்ட பல்வேறு இடையூறுகள் காரணமாக, பட்டாசு உற்பத்தி பணிகள் சுமார் 40 சதவிகிதம் அளவிற்காக குறைவாக இருந்தது.
மேலும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளின் தேவை அதிகமாக இருந்ததால், பட்டாசு ஆலைகளில் தயாரான பட்டாசுகள் அனைத்தும் முழுமையாக விற்பனையாகி விட்டன. தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக, வெளி மாநிலங்களில் இருந்து பட்டாசு ஆர்டர்கள் வெகுவாக வந்துள்ளது. வழக்கமாக தீபாவளி பண்டிகை முடிந்தவுடன், வடகிழக்கு பருவமழை துவங்கிவிடுவதால் மழைக்காலத்திற்கு பின்பு, டிசம்பர் மாதம் இறுதியில் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் துவங்கப்படும்.

தற்போது பட்டாசுகள் கையிருப்பு இல்லாத காரணத்தால், பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் துவங்கியுள்ளது. கடந்த வாரம் சில பெரிய பட்டாசு ஆலைகளில் மட்டும் உற்பத்தி துவங்கிய நிலையில், இன்று பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் துவங்கின. இதனால் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!