உலகம்

சிங்கப்பூரில் “தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!” நிகழ்ச்சி!

97views
சிங்கப்பூர் தமிழ்மொழி விழா 2025ன் ஓர் அங்கமாக வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் ஏற்பாட்டில், 20-04-2025 அன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில் “தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!” எனும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழாசிரியரும் சிறந்தப் பேச்சாளருமான விஜய் தொலைக்காட்சிப் புகழ் கவிஞர் ஜோ. அருள் பிரகாஷ் தமிழின் இளமையை கருப்பொருளாய் கொண்டு சிறப்புரையாற்றினார். சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் டாக்டர் சையட் ஹாருன் அல்ஹாப்சி தாய்மொழியின் அவசியத்தை வலியுறுத்திப் பேசியத்தோடு, கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை 144 நிகழ்ச்சிகள் நடத்தி சாதனைப் படைத்திருக்கும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) ஆற்றி வரும் கல்வி சார்ந்த சமூக நலப் பணிகளைப் பாராட்டினார்.
வரவேற்புரை வழங்கிய சங்கத்தின் தலைவர், பட்டயக் கணக்காளர் முனைவர் மு. அ. காதர், இந்த ஆண்டு இறுதியில் சங்கத்தின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடவிருப்பதாக அறிவித்தார்.
சங்கத்தின் செயலவை உறுப்பினரும், பட்டிமன்றப் பேச்சாளருமான திரு. அப்துல் மாலிக் வழிநடத்த, “தமிழும் இளமையும்” என்ற தலைப்பில் மாணவர் அங்கம் இடம்பெற்றது. இதில் மாணவ மாணவிகள் இஷாக் இப்ராஹிம், ஆமினா ஜூனைரா, ஸ்ரீநிதி ரெங்கபிரசாத் ஆகியோரும் பெற்றோர்கள் திரு கோ.ரெங்கபிரசாத் மற்றும் திருமதி சாரதாமணியும் கலந்துகொண்டனர்.
மூத்த ஊடகவியலாளர் திரு. முஹம்மது அலி தமிழ்மொழியின் சிறப்புகளைப் பற்றி சிற்றுரையாற்றினார்.
இசை மணி திரு. பரசு கல்யாண் மற்றும் அவரது மாணவ மாணவிகளான ஷ்ருதி கார்த்திக், சாய் காத்யாயனி, பரசுராமன் ஷாய் சித்தாந்த், பரசுராமன் ஷாய் வேதாந்த், வியாசன் வெங்கடேஷ், இஷான் கார்த்திக், அக்க்ஷரா கார்த்திக் ஆகியோர் “அமுதே தமிழே!” என்ற பாடலை குழுவாக இணைந்துப் பாடினர்.
ஸ்ரீ நாராயண மிஷன் சிங்கப்பூர் அற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, திரு. எஸ் . தேவேந்திரன் JP அவர்களின் 40 ஆண்டு கால சமூக சேவையைப் பாராட்டி உயரிய “ஜமாலியன் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.

GCE O நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றதற்காக யீ சூன் டவுன் உயர்நிலைப் பள்ளி மாணவர் அப்துல் ரஹ்மானுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை சங்கத்தின் செயலவை உறுப்பினர் ரியாஜ் மிகச்சிறப்பாக வழிநடத்தினார். சமூகத் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட சுமார் 300 பேர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!