உலகம்

நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் அற நிறுவனங்களுக்கு சக்கர நாற்காலிகள் நன்கொடை

155views
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சனிக்கிழமை, 8 மார்ச் 2025 அன்று சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலில் நோன்புத் துறப்பு நல்லிணக்க நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியது.
சிங்கப்பூர் மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தென்கிழக்கு வட்டார மேயருமான முகம்மது ஃபாமி அலிமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரது சிறப்புரையில் “நாம் ஒன்றுபட்ட சமூகமாக என்றென்றும் திகழ வேண்டும் என்றும், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூரில் ஆற்றிவரும் கல்விசார்ந்த சமூக நலப்பணிகள் பாராட்டுக்குரியது” என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் முதியோர்களைப் பராமரித்து வரும் அற நிறுவனங்களாகிய ஶ்ரீ நாராயண மிஷன் மற்றும் ஜாமியா முதியோர் இல்லத்திற்கு 10 சக்கர நாற்காலிகளை இச்சங்கம் நன்கொடையாக வழங்கியது. இந்த நன்கொடையை ஶ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தின் பிரதிநிதி திரு சரவணன், ஜாமியா சிங்கப்பூர் அற நிறுவன சமய நல்லிணக்கப் பணி மூத்த இயக்குநர் முனைவர் எச். முஹம்மது சலீம் ஆகியோர் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர்.
பென்கூலன் பள்ளிவாசலின் இமாம் மௌலவி கலீல் அஹ்மது ஹசனி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அவசியத்தைப் பற்றி சிற்றுரையாற்றினார்.

வரவேற்புரை வழங்கிய சங்கத்தின் தலைவர் முனைவர் மு. அ. காதர், “இந்த ஆண்டு இறுதியில் சங்கத்தின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெறவிருப்பதாகவும், இந்நிகழ்வு சங்கத்தின் 143வது நிகழ்ச்சி” என்றும் குறிப்பிட்டார். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது ஹபீபுல்லா இந்நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினார்.
பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், தொழிலதிபர்கள், சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட சுமார் 200 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!