சிறுகதை

ஏமாற்றம் கண்டும் துவண்டு போகவில்லை

41views
அன்று ஒரு நாள் சனிக்கிழமை காலை பர்ஸானும் அவனது தாயும் கொழும்பு பஸ்ஸிற்காக காத்து நின்றனர்.
அப்போது அதிவேகப் பாதைகள்எதுவுமே இல்லாத காலம் காத்திருந்து காத்திருந்து ஒரு பஸ் வந்தது பர்ஸானும் தாயும் அதிலே ஏறி உள்ளே உட்கார்ந்து கொண்டனர்.
நல்ல கிராமத்து தயிர் சட்டி நான்கும் எடுத்துக் கொண்டு இருவரும் கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொண்டனர்.
அவர் முதல் முதலாக கொழும்பை நோக்கி பயணம் செய்வதால் உள்ளத்தில் பல அச்சங்கள் தோன்றி மறைந்தன. ஆனால் இதை தாயிடம் காட்டிக்கொள்ளாமல் அடிக்கடி தனது காட்சட்டைப்பையில் இருந்த முகவரியை சரிபார்த்துக் கொண்டார்.
நெடு நேரப் பயணம் என்பதால் பசி வயிற்றைக் கிள்ளியது.
தண்ணீர் போத்தலை எடுத்து அதை அருந்திக்கொண்டே பயணம் போக கொழும்பும் வந்தது.
பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி பர்ஸானின் நாநா வேலை செய்த கடை முதலாளியின் வீட்டை பல சிரமங்களுக்கு மத்தியில் தேடிக் கண்டுபிடித்து தாயும் அவனும் தயிர் சட்டிகளுடன் உள்ளே செல்ல முதலாளி அம்மாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி. இருவரையும் உள்ளே அழைத்து பலகாரங்கள் கொடுத்து குடிக்க தேநீர் கொடுத்து நல்ல உபசரிப்பு. இவர்களும் கொண்டு வந்த தயிரைக் கொடுக்க மிகுந்த மகிழ்ச்சி.
‘நீங்க இங்க வருவீங்க என்று நான் எதிர்பார்க்கல்ல வந்தது நல்ல சந்தோசம் ரெண்டு நாள் இங்க தங்கிட்டு போங்க’ என முதலாளி அம்மா கூறினார்.
பர்ஸானின் தாயார் ‘ஓ நோநா நான் ஒங்கல பாத்துட்டு போக வந்தேன். அதோட இவனும் ஒரு தொழில் விஷயமா ஒத்தர பாக்க வந்தான். என்னோட’
‘யாரப் பாக்க போரீங்க முதலாளி’ அம்மா கேட்க
‘எங்கட நெருங்கிய சொந்தக்காரர்’ என அவரின் பெயரைக்கூற,
‘என்ன நய்மா உம்மா அவங்க பெரிய பணக்காரர். அவங்க ஒங்கட சொந்தமா … பொய் ஓங்கட தூரத்து சொந்தமாய் க்கும்’. என்று முதலாளி அம்மா கூறினார்.
எதுவுமே பேசாத நய்மா உம்மா வேறு பேச்சுக்கள் பேசி பகல் உணவை முடித்த பின் ‘முதலாளி அம்மா நாங்க மகன் ட வேல விஷயமா ஹாஜிட வீட்டுக்கு போய் வாரோம்’ என்று கூறி இருவரும் எட்ரஸ் ஓட கிளம்பினர்.
தேடித் தேடி அலைந்து ஒரு மாதிரி வீட்டக் கண்டு பிடிச்சி அந்த வீட்டை அடைந்தனர்.
அந்த வீட்டின் கேட்டின் அருகே இருந்த பெல்லை அழுத்த காவல் கார்ன் எட்டிப்பார்த்து யார் வேணும் என்று கேட்க பரீத் ஹாஜியார் வீடா இது ஆம் என்று கேட் திறக்கப்பட்டு இருவரும் உள்ளே செல்ல என்ன ஒரு அழகான தோட்டம் என்று வீட்டின் ஹாலிங் பெல்லை அழுத்த உள்ளே இருந்த வேலைசெய்யும் பெண் கதவைத் திறக்க யார் என்று வினவ இவர்கள் விவரம் கூற உள்ளே போய் சொல்லி பரீத் ஹாஜியின் மனைவி வந்து எட்டிப் பார்த்து வாங்க மாமி வாங்க என உள்ளே அழைக்க இவர்களும் உள்ளே போய் அமர
‘என்ன விஷயம் மாமி எங்கட வீட்டுக்கு இது தான் முதல் தடவ வந்தீக்கிறீங்க எப்படி சுகமா ஓ ஸரீனா நாங்க சுகம் நீங்க எப்படி’
‘நாங்களும் சுகம்’
‘ஊருக்கு விசேஷங்களுக்கு அவசரமா வந்து அவசரமா போறதில ஒங்கட வீடுகளுக்கு வரவே கெடக்கிரல்ல’
‘ஆ அப்படித்தான் டய்ம் இல்லே’
‘ஓ மாமி என்று கூறி இறைச்சிக்கறியுடன் மரக்கறி வகைகளும் சமைத்து இரவு உணவு பரிமாற
இவர்களும் உணவு உண்டுவிட்டு ஹாஜி எப்போ வருவாரு’ எனத் தொடங்கி,
‘ஊர்ல எல்லாருக்கும் அரசாங்க வேல வாங்கி ஹாஜியார் குடுத்து ஈக்காம் எங்கட மகன் நல்ல ரிசல்ட் எடுத்தீக்கி அவருக்கும் அந்த வேல எடுத்து தர ஏலுமான்டு கேட்டு தான் நாங்க வந்த.’
‘ஓ இவர் எல்லாருக்கும் எடுத்து குடுத்த நான் அவர் கிட்ட செல்லுஏன் அவர் வர நல்லா லேட் ஆகும்.’
‘ஆ சரி நீங்க செல்லுங்க.’
என இவர்களுக்கு தூங்க இடமும் கொடுக்க இவர்கள் தூங்க சென்ற சமயம் அவரின் கார் சத்தம் கேட்டு வெளியே வந்தனர் இருவரும். உள்ளே வந்தவர் தலையை ஆட்டி விட்டு உள்ளே செல்ல அவரின் மனைவி ‘ஏய் ஒங்கட மாமியும் மகனும் வந்தீக்கிற’
‘ஓ நான் கண்ட என்ன விசயமாம் .’
‘நீங்க எல்லாருக்கும் வேல எடுத்து குடுத்தே அது மாதிரி அவங்களுக்கும் எடுத்து தரட்டாம்’
‘ஆ அந்த பொடியன கூப்பிடு’
‘ஆ சரிங்க’
என பர்ஸானை அழைக்க அவனும் சான்றிதழ்களுடன் வர அதை ஹாஜியார் பார்த்துவிட்டு ‘நாளைக்கு ஆறு மணிக்கு ரெடியாகி நில்லுங்க. நாங்க போய் இந்த வேலைக்கு சேருவோம்.’
என்று கூற சந்தோசமிகுதியில் அவனுக்கு தூக்கமே வரவில்லை.
அவர்களின் தோட்டத்தில் இரவு நேரம் வேலை நடந்து கொண்டு இருந்தது. அழகிய கற்கள் நிலத்திலே பதித்தனர்.
இதனைக் கண்ட அவன் சந்தோச மிகுதியில் அவர்களுக்கு உதவியும் செய்து கொடுத்தான். கற்களை எடுத்து கொடுத்தான்.
இதனை மேல் மாடியில் இருந்து ஹாஜியார் பார்த்துக் கொண்டு இருந்தார். இதை இவன் கடைக்கண்ணால் பார்த்தான் .
வேலை கன்போம் என அவனே உள்ளுக்குள் மலைக்கோட்டை கட்டி இரவு தூங்கி அதிகாலையில் எழுந்து அல்லாஹ்வை தொழுதுவிட்டு சான்றிதழ்களுடன் வெளி வாசலிலே அமர்ந்து இருந்தான்.
ஹாஜியார் காரில் ஏறுவதைக்கண்டு இவன் பினானாலே ஓடி காரின் அருகே சென்று ஹாஜியார் நான்
என இழுக்க, ‘ அதெல்லாம் முடியாது எனக்கு ஆயிரத்து எட்டு வேல இருக்கு போ போ ‘ என விரட்டி காரிலே ஏறி போனார்.
பர்ஸானுக்கு தாங்க முடியாத ஏமாற்றம் .அவனை அறியாமலே கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்க முடியவில்லை.
உள்ளே இருந்து பார்த்துக் கொண்டு இருந்த தாயிற்கு அதிர்ச்சி தாங்க முடியாவிட்டாலும் அவர் எதிர்பார்த்தது தான் நடந்தது.
ஏன் என்றால் பர்ஸானின் தாயார் வீட்டிலிருந்து வரமுன்னே பர்ஸானிடம் கூறினார்.
‘இங்க பாரு மகன் ஒங்கட வாப்ப மௌத்தாப்பைத்து இன்டகி பதினஞ்சு வருஷம் ஆச்சு ஆனா ஒரு நாளயில சொந்தம் அன்டு சொல்லி ஒரு கடுகு மணியும் தந்தது இல்ல. அப்படி இருந்தும் நீ கட்டாயப்படுத்தி கூப்புடுறதால நான் வரேன்.’
என்று கூறியது அவனின் காதுகளிலும் ஒலித்தது.
உள்ளே நுழைந்தவன் பையை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு ‘ உம்மா போமா’ எனக் கேட்க ‘ஓ மகன்’ என இருவரும் வெளியேற உள்ளே இருந்த ஹாஜியாரின் மனைவி வாயடைத்துப் போனாள்.
இருவரும் திரும்ப மகனின் முதலாளி வீட்டுக்கு வர முதலாளி அம்மா ‘ஆ நய்மா உம்மா போன காரியம் முடிஞ்சதா.’
‘இல்ல நோநா அவர் வந்து வெளிநாடு போனாராம் வர்ரதுக்கு நாலு மாசம் ஆகுமாம்.’
‘ஓ அப்படியா சரி நய்மா உம்மா’ என இருவரும் உரையாடிக்கொண்டு இருந்தனர்.
கவலை தாங்காத பர்ஸான் வெளியிலே அமர்ந்து இருந்தான்.
அவனருகே வந்த முதலாளி ‘என்ன தம்பி போன காரியம் முடிஞ்சதா’
‘இல்ல அன்கல் அவர் வெளிநாடு போய் இருக்கிறாராம்.’
‘ஆ சரி தம்பி நீங்க என்ன படிச்சீங்க’ எனக் கேட்க அனைத்தையும் சொன்னவன்’
‘சரி தம்பி ஒங்கட எல்லா டாக்மென்ட்ஸ் அ தாங்க நீங்க என்ன வேல பாக்க விருப்பம்’ எனக் கேட்டு குறித்து வைத்துக் கொண்டார்.
அடுத்த நாள் தாயும் மகனும் வீட்டுக்குப் போக ஒரு மாதம் கடந்து அவன் எதிர் பார்த்த வேலைக்கு அப்பய்ன்மன்ட் ஓடர் வீட்டுக்கு வர அவன் அகமகிழ்ந்தான்.
இறைவனுக்கு நன்றி கூறியபடி முதலாளிக்காக பிரார்த்தனை செய்தான்.
அவன் எதிர்பார்த்த வேலை கிடைத்து நேர்மையாக வாழ்ந்தான்.
எச். டீ. எச். பஹ்தா
கொழும்பு, இலங்கை

 

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!