சிறுகதை

முதுமையிலும் நேசம் வரும்…

185views
ஞானாம்பாள் வயது எழுபது இருக்கும்.  முகத்திற்கு மஞ்சள் பூசி, வட்ட பெரிய பொட்டியிட்டு, நரைத்த முடியினை கொண்டையிட்டு, சிறு பூ முடிந்து, நூல் புடவை கட்டி எளிமையான தோற்றமுஉடையவர். “மதியம் சாப்பாடு சமைத்து வை டவுனுக்கு போயிட்டு வந்துடுறேன்னு” சொல்லி விட்டுப் போன கணவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில்…
டிங்… டாங்… அழைப்பு மணி ஓசை ஒலித்தது.
“மணி 3.30 ஏன் இவ்வளவு நேரம்” என்று கேட்டுக் கொண்டே கதவை திறந்தார் ஞானம். ‘கடைக்கு சென்றேன் சிறிது கால தாமதம் ஆகிவிட்டது’ என்றார் சின்னத்தம்பி.
நல்ல உயரம், மாநிறம், நெசவாளர், உழைத்து வாழ்ந்தவர். ‘பசியோட இருப்பீங்க சாப்பிட்டு பேசலாம்’ என்று பரிமாறத் தொடங்கினார் ஞானம்.
சாப்பிட்டு முடித்தவுடன் ஞானத்தை உட்கார சொல்லி பையில் இருந்த புது புடவையை எடுத்து நீட்டினார்… பார்த்ததும் ஆச்சரியத்தில் வாயை பிளந்து பெரிதான கண்களில் ஆனந்தக் கண்ணீர்… சின்னத்தம்பி ஆரம்பித்தார்.
“உனக்கு ஞாபகம் இருக்கா? கரகாட்டக்காரன் படத்தில் கனகா கட்டிக் கொண்டு வரும் நீல நிற பார்டர் போட்ட பஞ்சு மிட்டாய் ரோஸ் கலரில் நீ பட்டுப் புடவை கேட்டாயே?” ஆனந்த அதிர்ச்சியில் தலையை ஆட்டினார். நீ கேட்டு கிட்டத்தட்ட 35 வருடங்கள் இருக்கும்.
அப்போது நான் உன் ஆசைகளுக்கோ உணர்வுகளுக்கோ செவி சாய்த்ததில்லை. இரண்டு பெண் பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் திருமணம், உறவினர்களுக்கு சீர் மற்றும் குடும்பம் என்று சமாளிக்கவே சரியாக இருந்தது என்றார் சின்னத்தம்பி.
‘ஆமாம் அப்போதெல்லாம் நீங்கள் சிடுசிடு என்று தான் பேசுவீங்க நான் அப்புறம் மறந்தே போய் விட்டேன்’ என்றார் ஞானம்.
‘சரி சரி புடவை எப்படி இருக்கிறது என்று பார்’ என்று விரித்துக் காட்டினார்.
சிறு சிறு தங்க நிற புட்டாக்கள் போட்ட நல்ல தரமான கைத்தறி பட்டுப் புடவை நண்பரின் மகன் உதவியுடன் பிரத்தியேகமாக உனக்காக நான் நெய்த சேலை. ‘மிகவும் அருமையாக இருக்கிறது’ என்று கூறினார் ஞானம் மன நிறைவாக.
அன்று இரவு ஞானத்தின் கையைப் பிடித்துக் கொண்டு ‘என்னை மன்னித்துவிடு’ என்றார் ‘ஏன்?’ என்று பார்வையால் வினவ தொடர்ந்தார்… எத்தனையோ தருணங்களில் உனக்கு என் மேல் கோபம் இருந்திருந்தாலும் பொறுமையாகவே இருந்திருக்கிறாய். இந்தத் தனிமை உன் பொறுமையை உணர வைத்தது எப்படியாவது இந்த தீபாவளிக்கு பட்டுப்புடவையை பரிசாக கொடுத்து விட வேண்டும் என்று நினைத்தேன் என்றார் நெகிழ்வாக.
இதுவரை காணாத அன்பும் பாசத்துடன் காதலும் அவர் கண்ணில் கண்டதால் இதுவரை வலித்திருந்த இதயம் வசந்தம் வருடியது போல் ஓர் உணர்வு. முதுமை மென்மையாக்கி விட்டதே என்று உணர்ந்தார். அப்போதுதான் விளங்கியது பெண்களுக்கு பரிசு முக்கியமில்லை கணவனின் பரிவு தான் முக்கியமென்று.
முதுமை தந்தது புரிதல், காதல், பிரியா உறவு….
கீதா அருண்ராஜ்

6 Comments

  1. கதை அருமை,,தோழி ஒரு வேண்டுகோள்.காலம் காலமாக பெண்கள் கணவனின் அன்பை பெருவதற்காகவே வாழ்கிறாளா?தன் இளமையில் கிடைக்காத சந்தோஷம்,முதுமையில் கிடைக்கும்போது தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறாளா?நான் இங்கு குறிப்பிட்ட சந்தோஷம் உடல் சார்ந்த தேவையைக்குறிப்பிடவில்லை.தன் உடலில் வலிமை இருக்கும்போது பெண்களை இழிவுப்படுத்தி வாழும் சில ஆண்களுக்கு(99.9% புரிந்து வாழாதவர்கள்)முதுமையில் மட்டும் மனைவியின் மேல் பாசம் வருகிறது எப்படி?
    பெண்களுக்கு தெரியும் இதுவும் நாடகம் என்று.பெண்கள் மனதளவில் மிகவும் தைரியம் உடையவர்கள்.மிக கேவலமாக நடந்து கொண்ட கணவனின் மாற்றம் எதற்கு என்று. முதுமையில் வரும் நேசம் மரண பயம் அது நேசம் இல்லை.எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லை.
    வரும் காலங்களிலாவது பெற்றோர்கள் தன் பெண்,ஆண் பிள்ளைகளிடம் வாழ்க்கை அழகானது.அதில் யாரும் யாருக்கும் அடிமையில்லை.அன்போடு பண்போடு வாழுவதுதான் வாழ்க்கை என்று.
    கீதா அவர்களே! தாங்கள் கதை அருமை,ஆனால் சில நெருடல் எனக்கு.அவ்வளவே.
    ஆண், பெண்ணையோ,பெண் ஆணையோ உதாசினப்படுத்தாமல்,தவறுகளை சுட்டிக்காட்டி சமநிலையோடு கதைகளை தங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன்.தங்களை புண்படுத்தும் நோக்கமல்ல..தங்கள் கதைகள் தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்.நன்றி

  2. காலத்தின் ஓட்டத்தில் பயணிக்கும் ஆண்கள் பொருள் ஈட்டியே ஆகவேண்டும் பெற்றோர்களுக்காக, சகோதர, சகோதரிகளுக்காக, மனைவிக்காக, பெற்ற பிள்ளைகளுக்காக. தான் பெற்ற அன்பை பொருளாதார ரீதியில் அவர் காலம் கடந்து தன் அன்பை வெளிப்படுத்துகிறார். தன் உணர்வு தன்னை மேன்மைப்படுத்தும். உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. 😊

  3. ஆமாம் அக்கா. என்ன தான் அணிகலன்கள் ஆடை வாங்கினாலும். நம்மளோட உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கும் தருணம் வேரறு எதுவும் ஈடாக முடியாது அக்கா.

    1. உண்மை உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவித்ததற்கு மிக்க நன்றி மா.

  4. நன்றி!அதே கால ஓட்டத்தில்தான் பெண் என்பவளூம் பயனிக்கிறாள்.பெண்ணின் வேலை பணம் சம்பாதிப்பதும்,கணவன், மாமியார்,மாமனார்,குழந்தை, என்ற குடும்பத்தை பாதுகாப்பதும்.அதை மகிழ்ச்சியாக செய்கிறாளே,ஆணைவிட பெண் இன்னும் சிறப்பாகவே செயல்படுகிறாள்.
    !

  5. உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவித்ததற்கு மிக்கs நன்றி மா.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!