399
நிறைமாத கர்ப்பிணியான பார்கவியை அவளது கணவர் வசீகரன் துரிதப்படுத்தினான். பார்கவி சீக்கிரம் கிளம்பும்மா, ஆஸ்பிட்டல் செக்கப் முடித்துவிட்டு அப்படியே சிறந்த பேச்சாளர் தேர்வுக்கான மீட்டிங் செல்லவேண்டும் மறந்துட்டியா என்றான். இதோ கிளம்பிட்டேங்க ஒரு அஞ்சு நிமிஷத்திலே ரெடியாயிடுவேன். ஒரு சின்ன ஹெல்ப் ஃப்ளாஸ்க்ல ‘கொஞ்சம் வெந்நீர் எடுத்து வைங்க வசி’ என்றாள் பார்கவி.
பார்கவி பெயருக்கு ஏற்றார் போல கவிதை நடையாலும் பேச்சுத்திறனாலும் உலகையே (பார்) வெல்லும் அளவிற்கு பெயர்பெற்றவள். அவள் முற்போக்கு சிந்தனை உடையவள் மற்றும் சமூக சீர்திருத்தவாதி, பெண் அடிமைக்கு எதிராக குரல் கொடுப்பவள். எந்த பெண்ணுக்காவது ஒரு பிரச்சினை என்றாலும் முதல் ஆளாக நின்று அதனை சரிசெய்பவள்.
வெளியில் தான் என்று இல்லாமல் வீட்டிலும், குடும்பத்திலும் எந்த விசேஷமாக இருந்தாலும் முகம் சுளிக்காமல் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்பவள்.
பார்கவி பொறியியலில் முதுகலைப்பட்டம் பயின்றவள். ஆனால் அதுசம்பந்தமான வேலைக்குச் செல்லாமல் அஞ்சல் துறையில் பணிபுரிகிறாள். மேலும் கவிதை, பெண் உரிமைக்காக குரல் கொடுத்தல், சமூகம் இவற்றிற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டாள். முப்பத்தைந்து வயதே ஆனாலும் அவ்வளவு எளிமை. கணவனே கண்கண்ட தெய்வம் என என்னும் ஒரு குடும்பப்பெண்.
அவளது கணவர் வசீகரன் பெயருக்கேற்றார்போல மிகவும் அழகானவன். பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் .பணியாற்றிக்கொண்டிருக்கிறார். மிகவும் அன்பானவர். தனது மனைவியும் தன்னை போன்று பணியாற்றவேண்டும் என்று நினைக்காமல் ஒரு பெண்ணுக்கு சுதந்திரம் தேவை, அவள் விருப்பம்போல் கவிதை, பெண்ணுரிமை, மேடைப்பேச்சையே தொடரட்டும் என்று நூறு சதவீதம் உறுதுணையாக இருப்பவர்.
பார்கவி – வசீகரன் தம்பதியருக்கு இரண்டு அழகான ஆண்குழந்தைகள், இனியன் மற்றும் பிரியன். இனியன் ஐந்தாம் வகுப்பும், பிரியன் இரண்டாம் வகுப்பும் படிக்கின்றனர். இவர்களும் பெயருக்கேற்றார்போல அனைவரிடமும் பிரியமாகவும் சிரித்து மகிழ்ந்தும் பேசுவர். பெற்றோர்களைப் போல இவர்களும் எல்லா திறமைகளையும் கொண்டுள்ளனர். தற்போது இவர்களிருவரும் மே மாத விடுமுறையில் சென்னையில் இருக்கும் தனது மாமா வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
தற்போது செக்கப் செய்த டாக்டர் குழந்தை நல்லாயிருக்கு, நல்லா வாக்கிங் போங்க, நிறைய தண்ணீர் குடிங்க, நிறைய ஜுஸ் குடிங்க, மனச ரிலாக்ஸ்சா வச்சிக்கணும், நல்லா குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்யணும். இன்னும், ஒரு வாரம் கழித்து வாங்க என்று சொல்லி, இது மூன்றாவது டெலிவரி தானே டென்ஷன் ஆகாம இருங்க வசீகரன் என்றார்.
அதற்கு வசி மூன்றாவது டெலிவரிதான் என்றாலும் இதற்கும் பத்து மாதம் தானே சுமக்க வேண்டும் என்று தாமஷாக கூற, மூவரும் வேகமாக சிரித்துவிட்டனர். இந்த பெரியவர்கள் சிரிப்பில் வயிற்றில் இருக்கும் குழந்தையும் கலந்துக்கொண்டது.
அவர்கள் டாக்டரிடம் விடைபெற்றுக் கொண்டு மீட்டிங்க்கு புறப்பட்டுச்சென்றனர். ஆடிட்டோரியம் வெகு தொலைவு என்பதால் அவர்கள் சென்றடைய இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. அதற்குள் அங்கு நிறைய பேச்சாளர்கள் வெவ்வேறு தலைப்பில் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் அங்கு சென்று சற்று இளைப்பாறியவுடன் பத்து நிமிடத்தில் பார்கவியை அழைத்தார்கள்.
அதற்குள்ளாக அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் தூக்கத்தின் எல்லைக்கே சென்று விட்டனர். இதை காலத்தால் உணர்ந்த பார்கவி மைக்கை பிடித்து,
“மாதமோ சித்திரை
மணியோ பத்தரை
உங்களை தழுவுவதோ நித்திரை
மறக்காமல் எனக்களிப்பீர் உமது முத்திரை”
என்ற அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு பேசத்தொடங்கியவுடன் மக்களனைவரும் உற்சாகமடைந்து கரகோஷம் எழப்பி கைத்தட்டி நிறுத்தவே ஐந்து நிமிடமாயிற்றது.
உடனே வந்திருந்த நீதிபதிகள் அனைவரும். ஒருமனதாக சிறந்த பேச்சாளர் பார்கவி வசீகரன் தான் என்று ஒருமனதாக முடிவு செய்துவிட்டனர். அதே சந்தோஷத்தோடு வீடு வந்து சேர்ந்தனர்.
பார்கவியின் கணவர் அவர் பணிபுரியும் கல்லூரியில் N.S.S ஒருங்கிணைப்பாளராகவும் இருந்திருக்கின்றார். எனவே அவரின் உதவியோடு அவர்களுக்கு அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் பேசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் தூய குடிநீர், தூய காற்று, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி இல்லாத இயற்கை காய்கறிகள், கீரைவகைகள் ஆகியவற்றின் தேவைகளையும், இயற்கை விவசாயத்தைப்பற்றியும் விழிப்புணர்வு ஏற்பாடு செய்து அதற்கான துண்டு பிரச்சாரத்தையும், படங்களுன்கூடிய நோட்டீஸ்களையும் தருவார்கள்.
மேலும் வீடு வீடாகச் சென்று மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது பற்றியும், மரங்களை வளர்ப்பது பற்றியும், விழிப்புணர்வு ஏற்படுத்துவர். “மரம் நடுவிழா” என்ற அமைப்பின்கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் தனது சொந்த செலவில் மரக்கன்றுகளை நடுவர்.
தம்பதிகள் இருவரும் பிறரிடம் எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் தானாகவே முன்வந்து உதவிகளை செய்வர். மேலும் கிராமங்களில் உள்ள நீர்நிலை பகுதிகள் அனைத்தையும் அந்தந்த பகுதியில் “நூறு நாள் வேலை” திட்டத்தின் கீழ் பொது மக்களை வைத்துக்கொண்டு அந்தந்த நீர்நிலைகளை தூர்வாரி அந்தந்தப் பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் செய்து தருவர். அதற்கு அனைத்து பஞ்சாயத்து கிளார்க்குகளும், VAO க்களும். நன்றாக உதவி செய்வர்,
இதுவரை 20 கிராமங்களுக்கும் மேற்பட்ட மக்கள் இவ்வாறு செய்து எவ்வித தண்ணீர் பஞ்சம் இல்லாமலும், மூன்று சாகுபடி விளைச்சலையும் செய்வர்.
அவர்களுக்கு மிஞ்சிய காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு தானியங்களை பக்கத்து ஊர்களுக்கு விற்பனை செய்து மகிழ்ச்சியோடு வாழும்போது பார்கவி-வசீகரன் தம்பதியினரை மனதார வாழ்த்துவர்.
“சமீபத்தில் நடந்த பார்கவியின் தம்பி திருமணத்தில் கூட தாம்பூல பைகளில் வழக்கமாக நாம் வைக்கும் தேங்காய் மற்றும் பழம் இவற்றிற்கு பதிலாக பத்து வகையான விதைகளை தனித்தனியாக பேக்கிங் செய்து சாக்லேட்டிற்கு பதிலாக கருப்பட்டியையும் நன்றி கார்டுக்கு பதிலாக மழைநீர் சேகரிப்பு, விவசாயம் மற்றும் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்யை தெளிவான படத்துடன் அச்சடித்து கொடுத்தனர்.
மேலும் மணமகன் தாலிகட்டும் தருணத்தில் அனைவரும் அட்சதை போடுவது நம் தமிழர் மரபு. இவ்வாறு போடும்போது அது மணமக்கள் மேல் விழுவதில்லை எனவே அவரவர் அட்சதையை கையில் வைத்துக்கொண்டு மணமக்கள் கீழிறங்கி வந்து ஒவ்வொரு வரிசையாக வரும்போதும் நம் கையில் இருக்கும் அட்சதையை தூவும்போது அனைவரும் மனதார வாழ்த்தி மணமக்கள் மேல் அனைத்து அரிசியும் விழும்படி செய்வர். இத்த மாற்றத்தைக் கொண்டு வந்ததே இந்த பார்கவிதான். அந்தளவுக்கு பொதுநல மற்றும் தொலைநோக்கு சிந்தனை உடையவள்.
பார்கவி மாமியார் ஓய்வு பெற்ற தமிழாசிரியை என்பதால் அவளுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவரிடமே கேட்டு தெளிவு பெறுவாள். அவரும் இவர்களுடைய சுதந்திரத்திற்கு தடை விதிப்பது இல்லை. வசியும் பார்கவியை பார்த்து “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்ற பாடலை அடிக்கடி பாடி குடும்பமே சிரித்து மகிழும்.
டாக்டர் சொன்ன தேதி வந்ததும் லேசாக பார்கவிக்கு வயிறு வலி வந்தது. காலை 5 மணிக்கு வலி வந்ததால் மருத்துவளை பக்கத்தில் உள்ளதாலும், அந்த வலியுடனேயே Two Wheeler ல் இருவரும் சென்றுவிட்டனர்.
காலை 6 மணிவரை வலித்துக்கொண்டே யிருந்தது. டாக்பர் ஊசி போட்டுவிட்டு வலி அதிகமானால் சொல்லுங்க என்று நர்ஸ்கிட்ட சொல்லிவிட்டு அவரது ரூமுக்கு போயிவிட்டார்.
வசி வெளியில் அமர்ந்து சாமியை வேண்டிக்கொண்டிருக்கும் போது உள்ளேயிருந்து பார்கவி நர்ஸிடம் பேசுறது லேசாக காதில் விழந்தது. உடனே கதவருகே போன வசி அப்படியே ஷாக் ஆகி நின்றுவிட்டார் பார்கவி பேசியதைக் கேட்டதும் அப்படியே வாயடைச்சு போயிட்டாரு.
பார்கவி நர்ஸ்கிட்ட சிஸ்டர் எனக்கு மூணாவதும் பையன் தான் பொறுக்கணும்னு சாமிகிட்ட வேண்டிக்கோங்க, அப்படி பொறந்தா நான் உங்களுக்கு என்ன வேணாலும் தருவேன். அப்புறம் கோயிலுக்கு நிறைய டொனேஷன் தருவேன். பொண்ணு வேணணாம்னு சாமிகிட்ட வேண்டிக்கோங்க என்று சொன்னதைக் கேட்டு வசி அப்படியே மணமுடைத்து ஹாஸ்பிட்டலை விட்டு வெளியேறி பக்கத்தில் உள்ள பார்க்குக்கு போயிட்டாரு.
அப்படியே கண்கலங்கிப்படி உட்கார்ந்து பழைய நினைவுகளை அசைபோடத் தொடங்கினார் வசி. பெண்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிராக எப்படியெல்லாம் குரல் கொடுக்கும் என்னுடைய பார்கவியா இன்று பெண் குழந்தை வேண்டாம் என்று கூறுவது ஏன் இப்படி மாறினார் என்று குழம்பினார்.
பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன் கொடுமைகளுக்காக ஒரு சமயம் எழுதிய கவிதைக்காக அவள் வாங்கிய பரிசு நினைவுக்கு வந்தது. பூமித்தாயை நோக்கி
“பெண்ணை போற்றிடும் பெண்ணே இங்கு பல பெண்கள் அழுவது உனக்கு கேட்கவில்லையா? இல்லை நீயும் மவுனம் சாதிக்கிறாயா?” இதுதான் அந்த கவிதை,
இன்னொரு முறை மாமியார் மருமகளுக்காக அவள் எழுதிய அத்தை அன்னையானால் மாரி ஏன் காளியாகிறாள்” என்ற கவிதைக்காக அவள் வாங்கிய பரிசு ஞாபகம் வந்தது. மிகவும் குழப்பத்திற்குப் பிறகு தனது செல்போனை ஆப் பண்ணிவிட்டு மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கத் தொடங்கினார்.
வெகுநேரமாகி இருட்டத் தொடங்கியவுடன் வாட்ச்மேன் வந்து எல்லாரும் கிளப்புங்க கேட்டை பூட்டணும் என்றதும் தான் வசி தன் சுய நினைவுக்கு வந்தார். அப்படியே வெறுத்துப் போய் தனது கெஸ்ட் ஹவுசிற்கு சென்றுவிட்டார். அங்கு சென்றும் செல்போனை ஆன் பண்ணவில்லை.
அதற்குள்ளாக காலை 7.25 மணிக்கு பார்கவி எதிர்பார்த்தது போலவே அழகான ஆண்குழந்தை பிறந்தது. உடனே டாக்டர், நர்ஸ் மற்றும் பார்கவியின் மாமியார் அனைவரும் வசிக்கு போன் செய்து பார்த்து வெறுத்துவிட்டனர். அனைவரும் மிகவும் கலங்கினர்.
வசி நான்கு நாட்கள் கெஸ்ட் ஹவுசிலேயே தங்கிவிட்டு தன் சுய நினைவிற்கு வந்து சரி நாம் வீட்டிற்கு சென்று ஹாஸ்பிட்டலில் நடந்தது அனைத்தையும் தன் அம்மாவிடம். கூறவேண்டும் என்பதற்காக வீட்டிக்கு சென்றவருக்கு அங்கே அதிர்ச்சியாக இருந்தது.
அங்கே பார்கவி தன் குழந்தையை தூங்க வைத்துக்கொண்டிருந்தாள். வசியைப் பார்த்ததும் வசி என்னாச்சு?, எங்க போனீங்க?,
இத்தனை நாளா குழந்தையை கூடப் பார்க்காம என்கிட்ட சொல்லாம கூட எங்க போனீங்க? உங்களுக்கு ஏதும் பிரச்சனை இல்லையே? என்று மிகவும் அக்கறையுடன் கேட்டாள். உடனே வசி பிரச்சனை எனக்கு இல்லை உனக்கு தான் என்னாச்சுன்னு எனக்கு புரியல நீ ஹாஸ்பிடல்ல அந்த நஸ்கிட்ட பேசிட்டு இருந்ததை நான் கேட்டதும் ரொம்ப ஷாக் ஆயிட்டேன். தெரியாம தான் கேட்கிறேன் அப்படி என்ன உனக்கு பெண் குழந்தை மேல அவ்வளவு வெறுப்பு அப்ப நீ ஊர் ஊரா பெண்களைப் பற்றி பேசுறது சும்மா வாயிலிருந்து வந்ததுதான் உள்ளத்திலிருந்து வரல… இப்படி உங்க அம்மா அப்பா நினைச்சிருந்தால் உன்னை வளர்த்திருக்க முடியுமா என்று மிகவும் கோபமாக கேட்டார்.
இல்ல வசி நீங்க என்ன ரொம்ப தப்பா புரிஞ்சுகிட்டீங்க நான் சொன்ன காரியத்தை மட்டும் கேட்டீங்க நீங்க அதற்கான காரணத்தை தெரிஞ்சுக்கல இப்ப சொல்றேன் நல்லா கேளுங்க.
நான் எப்பவுமே பெண்கள் மேல் அக்கறை உள்ளவதான். நாம என்னதான் ஒரு சீர்திருத்தவாதியா இருந்தாலும் நம்ம பெண் குழந்தைகளுக்கு கல்யாண ஏற்பாடு செய்யும்போது மாப்பிள்ளை வீட்டார் சொல்ற அனைத்தையும் கேட்டுதான் ஆகணும். நம்ம இஷ்டத்திற்கு சுயமா எதையுமே செய்ய முடியாது.
ஆனா இதே நம்ம குழந்தைகள் ஆண் குழந்தைகளாக இருந்தா கல்யாண ஏற்பாடு செய்யும்போது நம்ம விருப்பப்படி செய்யலாம். இப்போ நமக்கு இந்த குழந்தையையும் சேர்த்து மூன்று ஆண் குழந்தைகள், இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டாருக்கு பைசா செலவில்லாம நம் இஷ்டப்படி திருமணத்தை நடத்தலாம். குறிப்பாக ஆதரவற்றோர், ஏழை எளிய பெண் பிள்ளைகளாக பார்த்து நம் பசங்களுக்கு திருமணம் செய்யலாம். நம்ம பசங்களுக்கு நாம்தான் சொல்லி புரியவைக்கணும்.
நம்மால மூன்று பெண் பிள்ளைகளுக்கு வாழ்க்கைத்தரமுடியும், இப்ப நான் சொன்ன காரணம்` புரியுதா வசி என்றாள். உடனே வசி என்னை மன்னித்திடுமா, நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்.
இவ்ளோ முற்போக்கு சிந்தனையுடைய என்னுடைய பார்கவியை நான் தப்பா நினைச்சுட்டேன் என்று கதறினார். பிறகு சமாதானமாகி முதன் முறையாக சந்தோசமாக குழந்தையை தூக்கி கொஞ்சிய பிறகு, தங்கள் சந்ததியினருக்கு மழையின் அத்தியாவசியத்தை உணர்த்த குழந்தைக்கு “வருண்” என்று பெயரிட்டனர்.
அருமை தோழி
கதை அருமை கிரேஸ்… continue writing..
சீர்திருத்தவாதி பார்கவிக்கு பாராட்டுக்கள்.
Super Akka…All The best….well creative mind sister…
கதையின போக்கை விவரிக்க வார்த்தை கள் இல்லை மிகவும் அருமை வாழ்த்துக்கள் கிரேஸ்