சிறுகதை

பணத்தால் அடித்தாலும் வலிக்கும்

42views
”நீ சின்ன பொண்ணும்மா… உனக்கு அந்த பையனோட அழகும், வேலையும் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். அதுக்கு மேலயும் நிறைய விஷயங்கள் இருக்கு. அதை புரிஞ்சுக்கோ.”
“அழகை மட்டும் பார்த்து முடிவு பண்ற அளவுக்கு நான் ஒன்னும் சின்னப் பொண்ணு இல்லைப்பா. எனக்குத் தெரிஞ்ச வரை அவருக்கு பெரிசா கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது. நல்ல வேலையில இருக்கார். அவர் சொல்றத வச்சுப் பார்த்தா… நல்ல ஃபேமிலின்னுதான் தோணுது. வேற என்ன வேணும்பா…?”
 “அதெல்லாம் சரிதான்ம்மா. அந்த பையன் வேற ஜாதிங்கிறது கூட பெரிய விஷயமில்லே. ஆனா நம்ம நிலமை என்ன ? அவங்க எத்தனை வசதி? எப்படிக் கணக்கு போட்டாலும் ஒத்து வராதேம்மா.”
“அதைப் பத்தி நானே பேசிட்டேம்பா. அவரும் அவங்க வீட்டிலே நம்ம நிலமையைச் சொல்லி, அவங்க என்னை வரச் சொன்னதுனாலதாம்பா இன்னிக்கு அவங்க வீட்டுக்கு போகப் போறேன்…”
“என்னவோம்மா… நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இதுக்கு மேலே நான் என்ன சொல்லுறது? பார்த்து நடந்துக்கோ..”
“நீ கவலைப்படுற மாதிரியெல்லாம் ஏதாவது பிரச்சினை வரும்னு தோணியிருந்தா முதல்லேயே அவர்கிட்டேயிருந்து நான் ஒதுங்கி போயிருப்பேன்ப்பா..” என்று சொல்லும் போதே, ‘ஒரு தடவை கணேஷை, அப்பா பார்த்துப் பேசினால் ஒத்துக் கொள்வாரோ ?’ என்று தோன்ற ஆரம்பித்தது. ‘சரி அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று நினைத்துக் கொண்டு உடை மாற்றிவிட்டுக் கிளம்பினேன்.
அலுவலகத்தில் வேலையில் மனமொன்றாமல், கணேஷ் வீட்டுக்குப் போய் அவர் அப்பா, அம்மா முன்னால் ஏதாவது அசட்டுத் தனமாக நடந்துகொண்டு விடுவோமோ, பேசி விடுவோமோ என்று பயந்து பயந்து, விரல் நகங்களையெல்லாம் தின்று தீர்த்தாகி விட்டது.
என் கவனமின்மையை, தவிப்பை மோப்பம் பிடித்து விட்ட லக்ஷ்மி, “என்ன ஜெயா…? என்ன விஷயம் ? கால் தரையிலேயே பட மாட்டேங்குது ? சாயங்காலம் உன் ஆளோட மீட்டிங்கா…?” என்று கிசுகிசுத்தாள். லக்ஷ்மிக்கு என் விஷயம் எல்லாம் தெரியும். யோசித்துப் பார்த்தால் கணேஷ் என்னோட பழக ஆரம்பித்ததே லக்ஷ்மி மூலம்தான்.
 “வேறென்ன? இன்னிக்கு அவர் வீட்டுக்கு கூட்டிகிட்டுப் போய் அவங்க அம்மா, அப்பாவிடம் அறிமுகப் படுத்தப் போறதா சொல்லியிருக்கார். அதான் இந்த டென்ஷன்.”
 “ஒரு வழியா உங்க காதலுக்கு அவங்க ரெண்டு பேரும் சம்மதிச்சது பெரிய விஷயம்தான். சம்மதிக்க வச்ச கணேஷ் நெஜமாவே ஸ்மார்ட்தான். கவனமா நடந்துக்கோ. வசதியான வீட்டுக்கு மருமகளாப் போகப் போறே. நீ ரொம்ப லக்கிதான்பா.”
“அதைத்தான் எங்க அப்பாவாலேயும் நம்ப முடியவில்லை. ஏதேதோ சந்தேகத்துல ‘இது நடக்குமா’ என்று குழம்புகிறார். ‘கையை சுட்டுப்போமோ’ன்னு பயப்படுறார். “
“எல்லா அப்பாக்களும் அப்படித்தான்… கணேஷ் மேல இருக்கிற நம்பிக்கையில்தான் மத்த விடியங்களையும் நாம நம்பணும். எது எப்படியோ…விஷ் யூ எ பெஸ்ட் ஆஃப் லக்” என்று வாழ்த்தினாள் லக்ஷ்மி.
“தாங்க்ஸ்..”.”
                                        * * *

“இதுதாம்மா ஜெயா. நான் சொன்ன பெண்” என்று தன் பெற்றோரிடம் என்னை அறிமுகப்படுத்திவிட்டு, திரும்பி என்னிடம்,  “ஜெயா… இது அப்பா, இது அம்மா.. அப்புறம் தம்பி ஃபிரண்ட்ஸோட சுத்திட்டு எட்டு மணிக்குதான் வருவான்..”
“உட்காரும்மா…” மாமனாராகப் போகிறவர்.
“இருக்கட்டும்…ங்க…சார்…” – இது போன்ற சந்தர்ப்பங்களில் எப்பவும் எனக்கு குழறல்தான்.
“நோ ஃபார்மாலிட்டீஸ்… ஃபார்மாலிடி பார்த்தா நாங்கதான் உங்க வீட்டுக்கு வந்து உன்னைப் பார்க்கனும். அங்கிள்னு கூப்பிடு…  ஸார்லாம் வேணாம், சகஜமா இரு.. என்ன ?” என்றார் மாமனார்.
தயங்கி, அத்தனை பெரிய சோபாவின் நுனியில் ஓரமாய் அமர்ந்தது போல் உட்கார்ந்தேன். பொதுவாக சம்பாஷணைகள் துவங்குவது போல் -எங்கே பிறந்தாய்…? எங்கே வளர்ந்தாய்..? அப்பா என்ன செய்கிறார் ?- சடங்கான கேள்விகள். பதில்கள். அப்பா, அம்மா முன்பு பாலே குடித்திராத பூனை போல் கணேஷ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
மாமியாராகப் போகிற கணேஷின் அம்மா, என்னால் தூக்கவே முடியாத அளவில் ஒரு ஆல்பத்தை மடியில் வைத்துக் கொண்டு, “இதோ.. இவந்தான் சேகரோட தம்பி சந்துரு… இதோ இருக்காரே இவர் சேகருக்கு மாமா. என் அண்ணன். டி.எஸ்.பியா இருக்கார். இவர் என்னோட அக்கா புருஷன். அம்பத்தூர்ல ஒரு பெரிய எக்ஸ்போர்ட் இண்டஸ்ட்ரி வச்சிருக்கார். அவருக்கு ஆஃபீஸ் கூட நீ வேலை செய்யற இடத்துக்கு பக்கத்துலதான்னு கணேஷ் சொன்னான்….” என்று சொல்லிக் கொண்டிருந்த போது,
 ‘இது போல் பெரிய பதவியிலே உன் குடும்பத்தில் யார் யாரெல்லாம் இருக்கா..?’ என்று ஒரு கேள்வியை மாமனாரோ, மாமியாரோ கேட்டு விட்டால் என்ன செய்வது என்று தோன்றி, கலவரமாகி, கவனமில்லாமல் ஆனால் சுவாரஸ்யமான முகத்துடன் ஆல்பம் பார்த்தேன்.
“இதோ இவர் சுந்தரம். பரணி குருப் கம்பெனியோட முதலாளி. மில்லியனர். சின்ன வயசிலேர்ந்து கணேஷ் அப்பாவுக்கு பால்ய சினேகிதர். தன்னோட ஒரே பொண்ணை கணேஷுக்குதான் கட்டிக் குடுக்கனும்னு போன மாசம் வரை அடம் பிடிச்சிட்டு இருந்தார். அப்பதான் கணேஷ் வந்து உன்னைப் பத்திச் சொல்லி, அவர் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டான்…” என்று மாமியார்(?) சொல்லிய போது, சுருக்கென்று குத்தியது போல் இருந்தது.
‘அம்மா கொஞ்சம் ‘ஓபன் டைப்’. உன்னை மாதிரிதான் டக்குன்னு ஏதாவது சொல்லிடுவா. நீ பெரிசா எடுத்துக்கக் கூடாது’ என்று கணேஷ் முன்னமேயே எச்சரித்து வைத்திருந்ததால், கணேஷை ஒரு தடவை பார்த்து, புன்னகைத்து திரும்பிக் கொண்டேன்.
இன்னும் ஆல்பத்திலிருந்த பணத்திலும், பதவியிலும் பெரிய ஆட்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த போது பணிப்பெண் தேனீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
தேனீர் குடித்துக் கொண்டே கணேஷின் அப்பா பேசினார். “நிஜத்தைச் சொல்லணும்னா, முதல்ல உன்னைப் பற்றி கணேஷ் சொன்னதும் எங்களுக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்ததும்மா. இருந்தாலும் அவனோட ஆசைக்காக, அவனோட செலக்ஷனுக்கு நாங்க ஆமாம் சொல்லத்தானே  வேணும்…..” என்று சொல்லிக் கொண்டிருந்த போது, வாசலில் வேட்டி கட்டிய ஒருவர் தயங்கித், தயங்கி வந்து கொண்டிருந்ததைக் கவனித்தேன். எங்கேயோ பார்த்த முகம் போல இருந்தது. பின் ஆல்பத்தில் கண்ட மனிதர் என்று புரிந்தது.
நிறம், வழுக்கை, நரைத்த முடி, கண்ணாடி என்று எல்லாவிதத்திலும் என் அப்பாவை ஞாபகப் படுத்தினார். அப்பாவைப் போலவே – ஐம்பது வயசுக்கு மேலிருக்கும்.
”வந்தாச்சு… உறவு கொண்டாடிகிட்டு…” என்று முணுமுணுத்து கணேஷின் அம்மா முகத்தைத் திருப்பிக் கொள்ள, “ஏய்… மெதுவா பேசு. அவனுக்கு கேட்டுடப் போகுது..” என்ற மாமனார், “எத்தனை தடவை சொன்னாலும் உறைக்க மாட்டேங்குதே… இந்த சனியன் புடிச்சவனுக்கு…” என்று முனகிக் கொண்டே, வந்தவரைப் பார்த்து சத்தமாக “வா… என்ன விஷயம் திடீர்னு…?” என்று கேட்டார்.
“ஒன்னுமில்லைங்கண்ணா… சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்…” என்று அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, என்னைப் பார்த்து, “யார் இந்த பொண்ணு..? அண்ணிக்கு சொந்தமா..?” என்றார் வந்தவர், தயங்கியபடியே இருக்கையில் அமர்ந்து கொண்டு.
“அதெல்லாம் உனக்கெதுக்கு…? வந்த விஷயத்தைச் சொல்லு…” என்றார் மாமனார் கறாராக.
“வந்து… போன வாரமே போன்ல சொன்னனில்லையா… கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரி டாக்டர் கை விரிச்சுட்டார். அவளுக்கு இடுப்புல ஏதோ ஆபரேஷன் இங்க வேறொரு பெரிய ஆஸ்பத்திரில பண்ணாதான் நடக்கவே முடியுமாம்.. ரெண்டு முணு பேர்கிட்ட கொஞ்சம், கொஞ்சமா கடன் வாங்கி சேர்த்துட்டேன்.. இன்னும் ஒரு இருபதாயிரம் ருபா.. நீ குடுத்தீன்னா.. ஆபரேஷன் பண்ணிறலாம்பா…” என்று தயங்கினார்.
 “இங்கே என்ன பெட்டி நிறைய பணமா வச்சுக்கிட்டா உக்காந்துகிட்டு இருக்கோம்…? போறவங்க வாரவங்களுக்கெல்லம் எடுத்து எடுத்து குடுக்கிறதுக்கு..?” என்று கணேஷ் அம்மா பேசியதில் எனக்கே கூட முகம் மாறிப் போயிருக்கும்.
“அப்படி இல்ல அண்ணி.. அவளுக்கு நடக்க முடியாம போச்சுன்னா என் வீடே முடங்கி போயிடும். நான் வேற எங்கே போய்க் கேட்பேன்? எனக்கு வேற யார் இவ்வளவு பணம் குடுப்பா…? நான் எப்படியாவது பணத்தை திரும்ப குடுத்துடுவேன்…” என்று அவர் கேட்ட போது அவருக்கு கண் கலங்கி இருந்தது. எல்லார் முன்னாலேயும் அழுது விடுவோமோ என்று கட்டுப் படுத்திக் கொள்வது போல் உதட்டைக் கடித்துக் கொண்டார்.
“இப்படித்தான்… ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி என்னவோ வசனம் பேசி, ஆயிரம் ரூபா வாங்கிட்டு, திரும்பக் குடுத்துடறதா வேற சொல்லிட்டு போனிங்க.. என்ன ஆச்சு..? இப்ப நான் பணத்தை திருப்பிக் கேக்கலை. அது தொலைஞ்சு போச்சுதுன்னு நினைச்சுக்கிறோம். ஆனா.. இதே மாதிரி திரும்பத் திரும்ப வந்து கேட்டுகிட்டிருந்தா…” என்று பேசிக் கொண்டிருந்த மாமியாரின் பேச்சுக்கு நடுவே புகுந்த கணேஷ்,
“இப்ப எதுக்கும்மா அதெல்லாம்…? ஜெயாவையும் உக்கார வச்சுக்கிட்டு இதெல்லாம் தேவையா..? ஒன்னு பணத்தைக் குடுத்து அனுப்பு.. இல்லைன்னா இவரை அப்புறமா வரச் சொல்லும்மா…” ‘எனக்கு முன்னால் இதெல்லாம் நடக்க வேண்டாம் என்பது போலவும், அவரை இங்கிருந்து வெளியேற்றினால் போதும்’ என்பது போலவும் கணேஷின் பேச்சு இருந்தது.
“ச்சு… சும்மா இரு கணேஷ்.. உனக்கு ஒன்னும் தெரியாது..” என்றாள் அம்மா வெடுக்கென்று.
முகம் மாறிய கணேஷ் உடனே எழுந்து, “ஜெயா நீ வா. என் அறையைப் பார்க்கலாம்..” என்று கூப்பிட்டார்.
“ஐயோ.. கணேஷ்… என்னை மன்னிச்சுக்கோ.. என்னாலே உங்களுக்குள்ளே பிரச்னை வேண்டாம். நான் சந்தர்ப்பம் தெரியாம வந்துட்டேன் போலேயிருக்கு. என் நிலைமை அப்படி. நீங்க உக்கார்ந்து பேசுங்கப்பா… நான் அப்புறமா வர்ரேன்..” என்று கெஞ்சிய படி எழுந்தார் அந்த மனிதர்.
“அப்புறம் ஒன்னும் வர வேணாம். இடத்தக் காலி பண்ணினாப் போதும்…” என்றாள் மாமியார் முகத்திலடித்தாற் போல.
மாமனாரகப் போகிறவர், “நான் பணம் ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன். நீ நாளைக்கு வா” என்று சொன்னதும், அவர் ஒன்றும் சொல்லாமல் திரும்பிப் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே நான் கணேஷின் அறைக்குள் நுழைந்தேன்.
”இதுதான் என்னோட ரூம்.. இந்த டேப்ஸ், சீடி, புக்ஸ் எல்லாம் என்னோட கலக்ஷன்ஸ்… நான் படிச்ச…” என்று தன் அறையைப் பற்றி கணேஷ் விளக்க ஆரம்பித்தபோது,
“ஒரு நிமிஷம் கணேஷ். இப்போ வந்துட்டுப் போனாரே… அவர் யார்…?” என்று இடைமறித்தேன்.
”அவர்.. வந்து… சித்தப்பா…”
”சித்தப்பாவா…? உங்க அப்பாவோட பிறந்த தம்பியா? இல்லே… அவருடைய பெரியப்பா,சித்தப்பா வழியில் தம்பியா..?”
“இல்லே.. கூடப் பிறந்த தம்பிதான். சின்ன வயசிலேர்ந்து ஒழுங்கா படிக்காம, தண்ணி அடிச்சுக்கிட்டு, வேலை வெட்டிக்கு போகாம தறுதலையா இருந்தாராம். பொம்பளைங்க பழக்கம் வேற இருந்திருக்கு. யாரையோ கல்யாணம் பண்ணிகிட்டு குடும்பத்துல பெரிய தலைவலியா இருந்துருக்கார். இங்கேதான் மைலாப்பூர்ல ஒரு பெரிய கடையிலே பில் க்ளார்க்கா இருக்கார். இப்படித்தான் பெரிய பொண்ணுக்கு கல்யாணம், சின்ன பொண்ணுக்கு ஸ்கூல் ஃபீஸ் என்று அடிக்கடி வந்து பணம் வாங்கிட்டுப் போவார். அதனால அம்மா, அப்பா ரெண்டு பேருக்குமே அவரைப் பிடிக்காது. கிட்டே சேர்த்துக்க மாட்டாங்க…”
மனசுக்குள்ளும், மண்டைக்குள்ளும் பாறை விழுந்தது போல் இருந்தது. “உங்கப்பாவுக்கு சொந்தத் தம்பியா…? அவரையா இப்படி அவமானப் படுத்தி அனுப்புனாங்க..? உங்களுக்கு எத்தனை பண வசதி இருக்கு? கூடப் பிறந்தவர்தானே.. அவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்துடறதுலே உங்க அப்பாவுக்கு என்ன குறைஞ்சிடப் போவுது…?” என்று எனக்குள் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது.

 “ஷட் அப் ஜெயா. உனக்கு தெரியாது. அவரு இப்பவும் தண்ணியடிக்கிற பழக்கம்லாம் உண்டு. பணத்தை அவர் எதுக்கு யூஸ் பண்ணுவார்னு யாருக்கு தெரியும்? இப்படியெல்லாம் பணம் குடுத்து யாரையும் பழக்கப் படுத்தக் கூடாது. அம்மா திட்டி திட்டிக்  குடுத்தாலே மறுபடி மறுபடி வந்து நிக்கிறார். கேட்டவுடனே பணம் குடுத்தா… அவ்வளவுதான்..” என்று என்னை மடக்கினார் கணேஷ்.
“ஸாரி கணேஷ். நீங்களும் உங்க அம்மாவை மாதிரி பேசுவிங்கன்னு நான் எதிர்பார்க்கலை. அவர் நல்லவரோ, கெட்டவரோ… கூடப் பிறந்த தம்பின்னு கூடப் பார்க்க வேணாம். ஒரு மனுஷன், தன் மனைவியை காப்பாத்தனும்னு நினைக்கிற கவலைக்காக கொஞ்சம் அனுதாபமாகவாவது பேசியிருக்கலாம். எனக்கு பயமாயிருக்கு கணேஷ். எங்கப்பவும் இப்ப போனாரே உங்க சித்தப்பா மாதிரி
வசதியில்லாதவர்தான். எங்கப்பாவையும் நாளைக்கு எந்தக்  காரணத்துக்காகவாவது இதைப் போல அவமானப் படுத்தினீங்கன்னா அவர் தற்கொலையே பண்ணிப்பார் கணேஷ். அப்புறம் என் வாழ்க்கைக்கே கூட அர்த்தம் இல்லாமப் போயிடும்…” என்று குரல் உடைந்தேன்.
“பைத்தியமா உனக்கு…? அதுக்கும் இதுக்கும் ஏன் முடிச்சுப் போடறே..? அப்படியெல்லாம் நடக்க நான் விட மாட்டேன்… இந்த சித்தப்பாவுக்கே எங்கப்பா நாளைக்கு பணம் குடுக்கத்தான் போறார். பணத்தைக் குடுத்தாச்சுன்னா இதுக்கெல்லாம் சித்தப்பாவே வருத்தப்பட மாட்டார். நீ ஏன் அலட்டிக்கிறே…” என்று அவசரமாக கணேஷ் மறுத்தார்.
“ஓஹோ… பணத்தாலே அடிச்சா வலிக்காதுன்னு நீங்க நினைச்சுட்டீங்களா ? மோதிரக் கையாலே குட்டினாலும், பணக்கட்டால் அடிச்சாலும் வலி, வலிதான் கணேஷ்… என்னமோ தெரியலே. உங்க அம்மா அவரை அவமானப் படுத்திப் பேசுனதும், அதை எதிர்த்து நீங்களோ, உங்க அப்பாவோ ஒன்னுமே பேசாததும் திடீர்னு எனக்கு ஒரு பயத்தை உண்டாக்கிடுச்சு. அதுவும் இல்லாம ஏமாற்றத்தைவிட, அவமானப் பட்டு போகிற உங்க சித்தப்பா என்னை ரொம்பவே பாதிச்சுட்டார். எனக்கு என்னவோ தனியா போய் அழணும் போல இருக்கு. நான் கிளம்பறேன். அப்புறம் பார்க்கலாம்…” என்று கிளம்பினேன், கண்ணீரை மறைத்துக் கொண்டு.
இப்படித்தான் எனக்கு திடீர் திடீர்னு என்னவோ ஆகிப் போய் விடுகிறது. அவசரப்பட்டு விடுகிறேன். பதட்டப் படுகிறேன். கணேஷ் என்னைப் பற்றி தப்பாக நினைப்பார் என்று கொஞ்சம் கூட தோன்றவேயில்லை.
”ஸில்லி… எதுக்காக நான் உன்னை இந்த வீட்டுக்கு வரச் சொன்னேங்கிறதையே புரிஞ்சுக்காம அவசரப் படாதே…” என்று கணேஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் அறையை விட்டு வெளியே வந்தேன்.
 “என்னம்மா…? கிளம்பிட்டியா…? டிஃபன் சாப்பிட்டுட்டு போகலாமில்லே..? சரி… உங்க அப்பாகிட்டே கேட்டுட்டு நாங்க என்னிக்கு முறைப்படி உங்க வீட்டுக்கு வந்து உன்னை பொண்ணு கேக்குறதுன்னு கணேஷ்கிட்டேயே சொல்லி அனுப்பு. சரியா..?” என்று மாமனார் தப்பு.. கணேஷின் அப்பா கேட்டார்.
“அதுக்கு அவசியமே இருக்காதுன்னு நினைக்கிறேன் சார்.. அவசியமானா உங்க பால்ய ஸ்னேகிதர் வீட்டுக்குதான் நீங்க போக வேண்டியதிருக்கும்…” என்று நான் சொல்லிவிட்டு அவர்கள் பதிலை எதிர்பாராமல் வாசல் நோக்கி நடக்கையில் அவர்கள் மூவரும் கோபத்தில் குழம்பி நிற்பதை என் முதுகு உணர்ந்தது.
சாஸ்தா
சென்னை 

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!