சிறுகதை

மனசுக்கும் ஒரு பூட்டு

62views
மாத்ருபூதேஸ்வரன்
எனது உயிர் நண்பா…
நான் இங்கு நலமாக இருக்கிறேன். நீயும் நலமாக இருப்பாய் என்று நம்புகிறேன்.
நீ எனக்குக் கடிதம் எழுதமாட்டாய் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும், உனக்கு எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும் எனக்குக் குறைவதில்லை.
இந்தக் கடிதத்தைத் தொடங்கும்போது, “முதலில் கன்னத்தில் அறைவது போல ஒரு வார்த்தை சொல்லட்டுமா?” என்று ஆரம்பிக்கத் தோன்றியது. பிறகு, அதற்கு முன் ஒரு விஷயத்தை சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன்.
சில நாட்களுக்கு முன் சுப்பிரமணியன் வீட்டிற்குப் போயிருந்தேன்.
அவன் வீட்டில் தேவையான பொருட்களைவிட தேவையில்லாத பொருட்கள்தான் அதிகம். ஓடாத கடிகாரம், பழைய ரேடியோ, மை தீர்ந்த பேனா, உடைந்த நாற்காலி, வேலை செய்யாத மிக்ஸி—எதையும் தூக்கி எறியாமல் வைத்துள்ளான். “ஒருநாள் பயன்படும்” என்பதே அவன் தத்துவம். அந்த “ஒருநாள்” மட்டும் இன்னும் வரவே இல்லை.
சின்ன வீடு அது. ஆனால் பொருட்கள் மட்டும் ஒரு கிடங்கைப் போல.
பெட்டியின் மேல் பெட்டி. அதன் மேல் பை. அதன் மேல் அட்டைப்பெட்டி. சுவரோரம் மூட்டைகள். மனிதர்கள் வசிப்பதற்காக வீடு கட்டப்பட்டதா, அல்லது பொருட்கள் வாழ்வதற்காகவா என்ற சந்தேகம் வரும்படி இருந்தது.  அவன் மனைவி சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“நாங்களும் இந்த வீட்டுலதான் இருக்கோம். ஆனா எங்களைவிட பொருட்களுக்குத்தான் இங்கு அதிக இடம்.”
தேவையில்லாத பொருளாக இருந்தாலும் வாங்கிவிடுவான். வாங்கியவற்றில் பாதி திறக்கப்படவே இல்லை. பழையவற்றை அகற்றவும் மனமில்லை.
அவள் மீண்டும் கேட்டாள்.
“கதவுக்கு ஒரு பூட்டு, அலமாரிக்கு இரண்டு பூட்டு, பெட்டிக்கு மூன்று பூட்டு, பீரோவுக்கு நாலு பூட்டு… இவ்வளவு பூட்டு எதுக்கு?”
சுப்பு மிகவும் இயல்பாக, “பொருள் இருக்கிற இடத்துல பூட்டு இருக்கணும்,” என்றான்.
அதற்கு அவள் சொன்ன பதில், ஒரு வாழ்க்கைப் பாடம்.
“உங்க மனசுக்கும் ஒரு பூட்டு போட்டுக்கோங்க. அங்கதான் அதிக பயம் இருக்கு.”
அந்த ஒரு வரி இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
முன்பெல்லாம் சிலர் பணத்தை பழைய அரிசி மூட்டைக்குள் வைத்து, அதன் மேலே “பழைய வெங்காயம். எடுக்க வேண்டாம்” என்று எழுதி வைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
பணத்தைப் பாதுகாக்க மனிதன் எத்தனை அடுக்குகள்!
அலமாரிக்குள் பெட்டி.
பெட்டிக்குள் பை.
பைக்குள் டப்பா.
டப்பாவுக்குள் கவர்.
கவருக்குள் பணம்.
அதற்கு மேலே பூட்டு.
ஒரு சாவி அவனிடம்.
இன்னொரு சாவி மனைவியிடம்.
மூன்றாவது சாவி… அது எங்கே இருக்கிறது என்பது அவனுக்கே தெரியாது.
இதையெல்லாம் பார்த்தபோது என் சிறுவயது நினைவுக்கு வந்தது.
மயில் இறகை புத்தகத்துக்குள் வைத்துப் பாதுகாத்தது. மைனா முட்டையைப் பொக்கிஷமாக நினைத்தது. புதிய பென்சில், அழகான ரப்பர், மினுமினுக்கும் பேனா—யாருக்கும் தராமல் ஒளித்து வைத்தது.
அப்போது அவை உலகிலேயே பெரிய செல்வமாகத் தோன்றின.
இன்று வயது மாறிவிட்டது.
ஆனால் மனம்?
அது மாறவே இல்லை.
மாறியது பாதுகாக்கும் பொருட்கள்தான்.
பாதுகாக்கும் மனநிலை மாறவில்லை.
போன் திங்கள் கிழமை, பிராட்வே போயிருந்த போது மேம்பாலத்தில் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தேன்.
அவன் ஒரு பழைய அழுக்கு மூட்டைகயை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு இருந்தான். எங்கே போனாலும் அந்த மூட்டையைத் தோளில் சுமந்துகொண்டே சென்றான். அதை யாராவது எடுத்துவிடுவார்களோ என்ற பயம் அவன் முகத்தில் தெளிவாக இருந்தது.
அதைப் பார்த்து முதலில் எனக்குச் சிரிப்பு வந்தது.
“அந்த மூட்டையை யார் எடுத்துப் போகப் போகிறார்கள்?” என்று நினைத்தேன்.
அடுத்த கணமே, யாரோ என் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போல ஒரு உணர்வு.
அவன் காப்பது ஒரு பழைய மூட்டை.
நாம் காப்பது வீடு, நிலம், பணம், நகை, பதவி, புகழ், உறவுகள், நினைவுகள்…
வேறுபாடு மதிப்பில் மட்டுமே.
மனநிலையில் இல்லை.
அவன் தனது மூட்டையைச் சுமக்கிறான்.
நாம் நம்முடைய மூட்டைகளைச் சுமக்கிறோம்.
ஒவ்வொருவரும் தங்களுக்கான சுமையை “செல்வம்” என்று பெயர் மாற்றி சுமந்துகொண்டே நடக்கிறோம்.
அந்தப் பிச்சைக்காரனுக்கும் நமக்கும் இடையிலான தூரம், பணத்தில் இருக்கலாம்.
ஆனால் பயத்தில் இல்லை.
அதனால்தான் இந்தக் கடிதத்தை ஆரம்பிக்கும்போது, கன்னத்தில் அறைவது பற்றி சொன்னேன்.
அது உன் கன்னத்தில் அல்ல.
என் கன்னத்தில்தான்! முதலில் விழுந்த அறை.
அன்புடன்,
உன் நண்பன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!