97
” நீயும் வந்துட்டு வாயேன் பவி”.. என்றான் சந்திரன்.
‘அதெல்லாம் வேண்டாம்..நீங்க மட்டும் போயிட்டு வாங்க..’ என்றாள் பவித்ரா.
‘ஜனனியாவது கூட்டிட்டு போயிட்டு வரேன்..’
என்றான் சந்திரன்.
‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..சின்ன பிள்ளையை அங்கெல்லாம் கூட்டிட்டு போய்கிட்டு..’
வழக்கம் போல சிடுசிடுத்தாள் … பவித்ரா.
பேச ஒன்றும் வழி இல்லாமல் சரி என்றான் சந்திரன்.
புருஷோத்தமன் – மீனாட்சி அம்மாள் தம்பதியினரின் ஒரே மகன் சந்திரன். வசதி வாய்ப்புகளுக்கு கொஞ்சமும் குறைவில்லை. புருஷோத்தமன் சிறிய அளவில் ஆரம்பித்த நிறுவனம் வளர்ந்து இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் ஸ்தாபனமாக வளர்ந்து தற்போது சந்திரன் நிர்வகித்து வருகிறான்.
புருஷோத்தமன் காலமாகி நேற்றோடு ஒரு வருடம் முடிந்துவிட்டது. மீனாட்சி அம்மாளுக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை. தொடர் இருமல்.. மூச்சிரைப்பு..டி பி தற்போது தான் ஆரம்பம் என்று குடும்ப டாக்டர் அழகேசன் கூறினார்.
எங்கே அந்த வியாதி…? தன் குழந்தைக்கும் வந்து விடுமோ… என்ற பயம் தனக்கு இருப்பதாக வேண்டுமென்றே கூறினாள் பவித்ரா.
திருமணம் ஆன நாளிலிருந்தே… பவிக்கு மீனாட்சி அம்மாளை பிடிக்கவில்லை..மாமனார் இருந்ததால்..
அவரை மீறி ஒன்றும் செய்ய முடியாது என்பதாலும்.. சொத்துக்கள் எல்லாம் அவருடைய சுய சம்பாத்தியம் என்பதாலும்…எல்லாவற்றையும் மனதில் கொண்டு பவித்ரா அமைதி காத்தாள். எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்தாள். மாமனார் காலமாகி சரியாக ஒரு வருடம் ஆனதும் தன் திட்டத்தை செயல்படுத்த துவங்கி விட்டாள்.
சந்திரனும் எவ்வளவோ போராடிப் பார்த்தான்.. பவித்ராவிடம் அவன் பேச்சு எடுபடவில்லை. பவித்ராவும் கேட்பதாக இல்லை. அவள் மிகவும் பிடிவாதக்காரி. தான் பெரிய குடும்பத்தின் ஒரே மருமகள் என்ற செருக்கு வேறு. ஏற்கனவே மாமியார் மீது உள்ள வெறுப்பு…நோய் வந்ததும் அதையே முக்கிய காரணமாகச் சொல்லி
தான் தனியாக போகனும்.. இல்லையெனில் மீனாட்சி அம்மாளை இல்லத்தில் சேர்க்கனும் என்று முடிவெடுத்தாள்.
இதை ஏற்கவில்லை என்றால் தன் தகப்பன் வீட்டுக்கு நிரந்தரமாக போய் விடுவேன் என்று பிடிவாதமாகவும், வைராக்கியத்துடனும் இருந்தாள்.
சந்திரன்..டி பி ஒன்றும் தொற்று நோயல்ல..இன்றைய காலகட்டத்தில் அது ஒரு பிரச்சினையே இல்லை..மருந்திலேயே குணமாக்கி விடலாம் என்று… எவ்வளவு போராடியும் பயனில்லாமல் போச்சு. டாக்டர் மூலமாகவும் பேசி பார்த்து விட்டான்.எந்த பயனும் இல்லை.
இவ்வளவுக்கும் மீனாட்சி அம்மாள் சாந்த சுரூபி..பழைய நடைமுறையில் நடப்பவள். என்ன.. எல்லாம் சரியா இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில்…எல்லாம் நடக்க வேண்டும் என்று விரும்புவாள். பூஜை, புனஸ்காரம் விரதம் இந்த விஷயங்களில் கண்டிப்பாக இருப்பாள். மற்றபடி ஒன்றும் அடாவடி அல்ல. பவித்ரா எது பேசினாலும் கூட பதிலுக்கு சரிக்கு சரி என்று நிற்க மாட்டாள். ஒரு நாள் கூட அவளை எதுவும் சொன்னதில்லை.தன் மகனிடம் கூட குறை கூற மாட்டாள். ஆனால் பவி நேர்- எதிர். அதனால் தன் மாமியாரை
எதிரியாக பார்த்தாள்.
மீனாட்சி அம்மாளிடம் வேறு வழியில்லாமல் தயங்கி தயங்கி… சந்திரன் சொன்னபோது.. அவள் அப்போது கூட மறுப்பேதும் சொல்லாமல்.. சரியப்பா உங்கள் இஷ்டம்.. நான் அங்கேயே இருந்து கொள்கிறேன்.. என்னால் எந்த பிரச்சனையும் வேண்டாம். பவி மனசு போல எல்லாம் நடக்கட்டும் என்று கூறி விட்டாள்.
நீ உன் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டாள்.
இன்று அம்மாவை கொண்டு போய் இல்லத்தில் சேர்க்கத்தான்.. பவித்ராவையும் உடன் வர அழைத்தான்.
அதற்கு கூட அவள் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். கனத்த இதயத்தோடு தன் காரில் கூட்டிப் போகும் போது… “அம்மா என்னை தப்பா நினைக்காதீங்க அம்மா… அவ ரொம்ப பிடிவாதமா இருக்கா..என்னால ஒன்னும் பேச முடியல.. பேசினா குடும்பத்தில் அமைதி போய்டும்! வேற வழியே இல்லாம தான் இந்த முடிவுக்கு வந்தேன்”.. ஒன்றை நீ நினைவு வைத்துக் கொள் அம்மா .. நீ தான் அவளை பிடிவாதமாக எனக்கு பார்த்து கட்டி வைத்தாய்! ஆனால் அவளுக்கு இப்போது உன்னை பிடிக்கவில்லை. தயவு செய்து நீ என்னை மன்னிச்சிடுமா! என்று அம்மாவிடம் தாயிடம் சந்திரன் சொன்னான்.
‘ஒன்றுமில்லை சந்திரா.. எதற்கும் கவலைப்படாதே! என்னைப் பற்றி யோசிக்காதே! நீ எங்களுக்கு ஒரே மகன்..சொந்த பந்தமும் அதிகமில்லை.
பவி…பெரிய குடும்பத்தில் உள்ள பெண்..மூன்று அண்ணன்கள் இரண்டு அக்கா..தங்கச்சி கூட பிறந்ததால பொறுப்பா..பாசமா இருப்பாள்..தனிமையில் வளர்ந்த உனக்கு துணையாக இருக்கும்.. என்று நினைத்தேன்.
சரி..அந்தக் கணிப்பு தப்பா போச்சு..நடந்ததை பேசி இனி எந்த பிரயோஜனமும் இல்லை.. இனி உன் வாழ்க்கை ,உன் எதிர்காலம், உன்னுடைய குடும்பம்.. என்று நீ எப்போதும் நல்லா இருக்கணும்..அது மட்டும் எனக்கு போதும்டா..’
– மீனாட்சி அம்மாள்.
வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை நான் வந்து உன்ன பார்க்க வருவேன். ஜனனியையும் கண்டிப்பாக கூட்டிக்கிட்டு வருவேன். உன்னை பிரிஞ்சு…அவ எப்படி இருக்க போறாள்னு தெரியல? உனக்கு எல்லா வசதிகளும் செய்து தரச் சொல்லி இருக்கிறேன். பணத்தைப் பற்றி கவலை இல்லைம்மா.. எல்லாமே உன் காசு..உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட..அப்புறம் தான்..அப்பாவுக்கு இந்த சொத்து..சுகம்..வசதியெல்லாம்…நீ இங்கே நிம்மதியா இருக்கணும்னு தான் என்னுடைய ஆசை!..’
கண்ணீரோடு புலம்பிக் கொண்டே வந்தான் சந்திரன்.
மீனாட்சி அம்மாள் எதைப் பற்றியும் கவலைப்படாமல்..மௌனமாக வெளியே பார்த்தப்படி வந்தாள்.
பேச விரும்பவில்லை என்றால்மௌனமாகி விடுவது மீனாட்சி அம்மாள் வழக்கம். பவியிடம் கூட அப்படித்தான். ஆயிரம் கடினமான வார்த்தைகளை விட..ஒரு மௌனம் எவ்வளவு பெரிய வலியை தரும்..என்பதை அப்போது உணர்ந்து கொண்டான் சந்திரசேகர்.
கார்…அன்பு இல்லத்தின் நுழைவாயிலில் நுழைந்தது. காரில் இருந்த தன் அம்மாவை மெதுவாக கை பிடித்துக் கீழே இறக்கி.. அந்த இல்லத்தில் காப்பாளரின் அறையை நோக்கி நடந்தான்.
கே.சோமசுந்தரம்..காப்பாளர்அன்பு இல்லம்…என்று கதவில் இருந்த பெயர் பலகையை மீனாட்சி அம்மாள் பார்த்தாள்.
‘கொஞ்சம் உட்காருங்க ..சார் இப்போ வந்துருவாருன்னு’ சொல்லிவிட்டு ஒரு பெண் சென்றாள்.
அங்கிருந்த இருக்கையில் அம்மாவை..அமர வைத்து விட்டு தானும் பக்கத்திலே அமர்ந்து..அவள் கையை தன் மடியில் வைத்து பிடித்துக் கொண்டான். கண்கள் மட்டும் கண்ணீரை உற்பத்தி செய்வதை.. நிறுத்தவே இல்லை.
‘சும்மா மனசுல ஏதாவது நினைச்சுகிட்டு இருக்காதே சந்திரா..நீ நிம்மதியா-சந்தோஷமா இருந்தால் மட்டுமே தான்..நான் இங்கு சந்தோஷமா – நிம்மதியா இருப்பேன். நீ கஷ்டப்பட்டால் நான் உன்னை விட அதிகமாக கஷ்டப்படுவேன். இனி நடக்க வேண்டியது பாரு.. இதை உன் தொழிலை இன்னும் நன்றாக கவனித்து..உன் குழந்தை , மனைவியை உன்னால் முடிந்த அளவுக்கு சந்தோசமாக வைத்துக் கொள்ளப் பாரு’ -மீனாட்சி அம்மாள்.
காப்பாளர் சோமசுந்தரம் இவர்களை கடந்து போகும் போது..மீனாட்சி அம்மாளையே உற்றுப் பார்த்துக் கொண்டே தன் அறைக்குள் சென்று..பணி பெண்ணிடம் அவர்களை உள்ளே வரச் சொல் என்றார்.
உள்ளே வந்த இருவரையும் நாற்காலியில் அமரச் சொன்னார் சோமு. ஆனாலும் அவர் பார்வை மீனாட்சி அம்மாள் மேலேயே நிலை கொண்டிருந்தது. அந்தப் பார்வையை அகற்றாமல்…
‘சொல்லுங்கள் மிஸ்டர் சந்திரன் உங்களுக்கு எந்த மாதிரியான அறை ஒதுக்க வேண்டும்? இங்கு உள்ள பிரிவுகளை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் எதை செலக்ட் பண்ணி இருக்கீங்க?’
‘எல்லா வசதிகளும் இருக்கிற “ஏ “பிரிவைத் தான் நான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். அம்மாவுக்கு எந்தவித வசதி குறைவும் ஏற்படக்கூடாது. ‘
‘சரி அதையே ஒதுக்கி விடலாம். ஆனால்..அதற்கு முன்பாக உங்கள் அம்மாவிடம் நான் பேச வேண்டும்..நீங்கள் கொஞ்சம் வெளியே இருங்கள்’ என்றார் சோமு.
ஒன்றும் புரியாமல் சந்திரன் முழிக்க ….’ஒன்றுமில்லை இது வழக்கமான நடைமுறைதான்.. கொஞ்ச நேரம் வெளியில் உட்காருங்கள்’ என்றார் சோமு.
அவன் வெளியே சென்றதும் மீனாட்சி அம்மாளை பார்த்து.. ‘அம்மா என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா? எங்கேயாவது பார்த்தது போல் தோன்றுகிறதா ? ‘என்று கேட்டார் சோமு.
அவளும் மெலிதாக புன்னகைத்தபடி..’ நன்றாக நினைவிருக்கிறது.’
‘உங்களுக்கா இந்த நிலை..? என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நீங்கள் மிஸ்டர் சந்திரனிடம் ஒன்றும் சொல்லவில்லையா?’
‘அதைப் பற்றி எதுவும் பேசாதீங்க சார்..எல்லாம் நடப்பது போல நடக்கட்டும் எதையும் என் மகனிடம் சொல்ல வேண்டாம். அவன் தாங்க மாட்டான்.. உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்’ என்றாள் மீனாட்சி அம்மாள்
‘சரிங்க அம்மா..ஆனால் எனக்கும் மனசாட்சி இருக்கிறது..அதை என்னால் மீற முடியாது..’என்று மீனாட்சி அம்மாவிடம் சொல்லிவிட்டு…பணிப் பெண்னை அழைத்து இவர்களை வெளியே உட்கார வைத்துவிட்டு…’இவரது மகனை வரச் சொல்’ என்றார் சோமு.
உள்ளே வந்த சந்திரனிடம் ‘உட்காருங்கள் சார்..உங்களிடம் சில கேள்விகள் நான் கேட்க வேண்டும்’ என்றார்.
கேளுங்கள் சார்…என்றான்.
‘நீங்க உங்க பெற்றோருக்கு ஒரே மகனா..?’
‘ஆமாம்.. ஏன்?’
‘கேட்டேன்..’
‘உங்க டேட் ஆப் பர்த் என்ன ?
’12/ 5 /1970..’
‘உங்கள் பெற்றோரின் பெயர்..?’
‘புருஷோத்தமன் – மீனாட்சி அம்மாள்.’
‘உறுதியாக தெரியுமா ?..’
‘என்ன கேள்வி சார் இது ?..’
’33 வருஷமா அவங்க கூட இருக்கேன்..எனக்குத் தெரியாதா ?’
‘இவங்க பேரு தெரிந்திருக்கும் சார்…உங்களைப் பெத்தவங்க பேரு தெரியுமான்னு ? கேட்டேன்.’
தலையில் இடி இறங்கியது போல் இருந்தது சந்திரனுக்கு.. ‘என்ன சார் சொல்றீங்க ?’
‘ஆமாம் சார் நான் சொல்றத கவனமா கேளுங்க.. 33 வருஷத்துக்கு முன்னால் இந்த முதியோர் இல்லத்தின்.. தாய் நிறுவனமான அன்னை தெரசா ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில் நான் எழுத்தராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் திரு புருஷோத்தமன் -மீனாட்சி அம்மாள் இருவரும் அந்த அனாதை இல்லம் வந்தார்கள் . தாங்கள் ஒரு குழந்தையை தத்தெடுக்க வந்திருப்பதாக கூறினார்கள். அப்போது விடுதிக் காப்பாளராக இருந்த..திரு சந்தானம் அவர்கள்.. என்னை அழைத்து இல்லத்தில் இருந்த 27 குழந்தைகளை அவர்களுக்கு காட்டும்படி சொன்னார். புருஷோத்தமன் ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க விரும்பி ஒரு பெண் குழந்தையை தேர்ந்தெடுத்தார். ஆனால் மீனாட்சி அம்மாளுக்கோ ஒரு ஆண் குழந்தையை தத்தெடுக்கத் தான் விருப்பம். புருஷோத்தமனோ பெண் குழந்தையை தத்து எடுத்தால் தான்..கடைசி காலத்தில் நம்மை பத்திரமாக பார்த்துக் கொள்வாள் என்றார். ஆனால் மீனாட்சி அம்மாளோ இல்லையில்லை..ஆண் குழந்தையை தத்து எடுத்தால் தான் நம்மை கடைசி வரை வைத்துக் காப்பாற்றுவான். பெண் குழந்தை திருமணம் முடிந்தவுடன் கணவன் வீட்டுக்கு சென்று விடுவாள். ஆகவே ஒரு பையனை தத்தெடுப்போம் என்று அவருடன் போராடி ஒரு சிறுவனை தத்து எடுத்தார்கள். சட்டப்படி செய்ய வேண்டிய நடைமுறைகளை எல்லாம் அப்போது நான்தான் செய்தேன். அந்தச் சிறுவனுக்கு தன் தந்தையின் பெயரை சூட்டி வளர்க்கப் போவதாக மிகப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் என்னிடம் தெரிவித்தார் அந்த மீனாட்சி அம்மாள். அந்த அம்மாவின் தந்தை பெயர் சந்திரன்’ என்றார் சோமு.
சந்திரனுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. தன்னைச் சுற்றி என்ன இருக்கிறது..என்ன நடக்கிறது என்று புரியவில்லை.
‘என்ன சார் சொல்றீங்க..? இதெல்லாம் உண்மையா..? நீங்க சொன்னது எங்க அம்மாவையா ..? நல்லா தெரியுமா இல்ல தெரியாமல் சொல்றீங்களா?’
‘சேகர் இண்டஸ்ட்ரீஸ் புருஷோத்தமன் மகன்தானே நீங்க?’
‘ஆமா நான் தான்..’என்றான் சந்திரன்.
‘அப்போ சந்தேகம் இல்லாம.. அவங்க தான் உங்க அம்மா..! ஏன் இவ்வளவு தெளிவா சொல்றேன்னா..? உங்கள தத்தெடுத்ததோடு மட்டுமில்லாமல் அந்த இல்லத்திற்கு…அப்போதே ஒரு லட்சம் நன்கொடை கொடுத்தவர் புருஷோத்தமன்.அப்போது அந்த குழந்தைகளோடு அவர்களையும் வைத்து ஒரு புகைப்படம் எடுத்தோம் . அதை இப்போதும் எங்களது இல்லத்து ஆல்பத்தில் வைத்திருக்கிறோம்’ என்றார்..சோமு.
அத்தோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு வருடமும்… உங்கள் பிறந்த நாளன்று இங்கு வந்து குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி மகிழ்வார்கள். ஆனால் உங்களை கூட்டிக் கொண்டு வர மாட்டார்கள். உங்களுக்கு எக் காரணம் கொண்டும் இந்த விஷயம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக. நீங்கள் வளர்ந்து விட்ட பின் அவர்கள் வருவதில்லை. ஆனால் அந்த நாளில் பணம் அனுப்பி உணவளிக்க இந்த நாள் வரை தவறியதில்லை.
பின்பு இந்த முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு நான் இங்கே காப்பாளராக வந்து விட்டேன். உங்கள் தாயாரை இங்கு பார்த்ததும் எனக்கு உயிரே போய்விட்டது. இப்போதும் கூட உங்களிடம் எந்த விஷயத்தையும் கூறக்கூடாது என்று எங்களை என்னிடம் வேண்டிக் கொண்டார். இப்படிப்பட்ட ஒரு தாயாரை நீங்கள் போய்…மிஸ்டர் சந்திரன்… உங்களை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது. உங்களுக்கெல்லாம் மனிதத் தன்மை கொஞ்சம் கூட கிடையாதா? மனசாட்சி என்பது கிடையாதா?
ஆதரவற்று இருந்த உங்களை வளர்த்த பாவத்திற்காகவா.. அவர்களை இங்கே அழைத்து வந்தீர்கள்!?
பெற்றால் தான் பிள்ளை என்று இல்லாமல்..பெற்ற குழந்தையை விட சிறப்பாக வளர்த்த தாய்க்கு நீங்கள் தரும் பரிசு!.. பாராட்டுக்களுக்கு உரியது மிஸ்டர் சந்திரன்.
‘இல்லை சார் இல்லை.. என்னுடைய சூழல் அப்படி.. அதனால் தான் இந்த மாபெரும் தவறை செய்ய இருந்தேன்.’
‘என்ன சார் சூழல்? தாயை விட சூழல்தான் உங்களுக்கு முக்கியமா? அதை சமாளிக்க தெரியாதா? அந்த திறன் இல்லையா..?
‘சார் மன்னிச்சிடுங்க சார்.. என்னுடைய நல்ல நேரம் நீங்க இங்க இப்போ பதவியில் இருக்கீங்க…
இதே இடத்தில் வேறொருவர் இருந்தால் நானும் விவரம் தெரியாமல் சேர்த்து விட்டு இருப்பேன்..
என் தாயார் அப்போது கூட உண்மை சொல்லி இருக்க மாட்டார்..அப்படிப்பட்ட பெருந்தன்மை கொண்ட உத்தமி சார் அவங்க.. மீண்டும்..
‘என்ன மன்னிச்சிடுங்க சார்..! நான் என் அம்மாவை வீட்டுக்கு அழைத்து போகிறேன்…’
‘இங்கே விடுவதை விட்டுவிட்டு..வேறு எங்கேயும் கொண்டு சேர்த்து விட மாட்டீர்களே…!?’
‘இல்லை சார்..இல்லை சார்..என்னை நம்புங்கள்..இனி அந்த எண்ணம் துளி அளவு கூட எனக்கு வராது…’
‘ எனக்கு விஷயம் தெரியும் என்பதை…அம்மாவிடம் சொல்லி விடாதீர்கள் ப்ளீஸ் சார்…’ என்றான் சந்திரன்.
ரூமை விட்டு வெளியே வந்து..” அம்மா.. வீட்டுக்கு போகலாம்” என்றான்.
‘என்னப்பா… என்னாச்சு..? ஒன்றுமில்லை மா.. அறை தற்போது இல்லையாம்..பதினைந்து நாட்கள் ஆகுமாம்..இப்போ வீட்டுக்கு போவோம்..வாங்க என்று காரில் உட்கார வைத்து… காரில் ஏறினான்..சந்திரன்.
காரில் ஏறியவுடன் ஃபோனை எடுத்து ஏதோ செய்து கொண்டிருந்தான்..
‘என்ன செய்கிறாய் பா..? பவித்ராவுக்கு மெஸேஜ் அனுப்புறாயா என்று மீனாட்சி அம்மாள் கேட்க..’ஒன்றுமில்லை மா..’ என்றான்.
பின்னர் கார் கிளம்பியது..
மீண்டும் ஒரு முறை கேட்டாள்..
‘பவித்ராவுக்கு தற்போது ரூம் இல்லைனு தானே மெஸேஜ் அனுப்பினே சந்திரன்..?’
‘மெஸேஜ்..இல்லைம்மா…பவித்ராவிற்கு அவ ஊருக்கு டிக்கெட் போட்டேன்..மா ‘என்றான் தெளிவான மனதுடன்.
இப்போதும் மீனாட்சி அம்மாளின் மௌனம் தொடர்ந்தது. ஆனால் இப்போதைய இந்த மௌனம் சந்திரனுக்கு வலியை தரவில்லை.
நெல்லை கவி. க.மோகனசுந்தரம்.
add a comment