சிறுகதை

யார் அந்த கோவிந்தன்?

21views
குட்டிபாலா
பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த மணிமேகலை, கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்ப்பதும் பஸ் வரவேண்டிய திசையைப் பார்ப்பதுமாக பரபரப்பாக காணப்பட்டாள்.
காலை 9 மணிக்கு அவள் ஆஸ்பத்திரிக்குள்ளே டியூட்டிக்கு போக வேண்டும். வழக்கமாக வரவேண்டிய பேருந்து இன்றைக்கு என்ன காரணமோ இன்னும் வரவில்லையே என்று யோசித்து ஆட்டோவில் போய்விடலாமா என்று நினைத்த நேரம் பேருந்து வந்தது. வழக்கம் போல கூட்டந்தான்.ஆனாலும் ஏறிக்கொண்டாள்.
நடத்துனரிடம் “தாசன் ஆஸ்பத்திரி” என்று கேட்டு டிக்கெட் வாங்கினாள். அவளுக்கு நேராக வலப்புறம் கருப்பு கண்ணாடி அணிந்திருந்த இளைஞனும் “தாசன் ஆஸ்பத்திரி” என்று டிக்கெட் வாங்கியதும் ஒரு வினாடி அவனை திரும்பி பார்த்தாள்.
இருவரும் ஒருவர் பின் ஒருவராக ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறங்கி தாசன் கண் ஆஸ்பத்திரிக்கு நடந்தார்கள்.
மணிமேகலை டயம் பஞ்ச் செய்து உடைமாற்றும் அறைக்கு சென்று நர்ஸ் யூனிபார்ம் அணிந்து வெளியே வந்த போது அந்த இளைஞன் வரவேற்பு கவுண்டரில் இருந்த பிரியாவிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்ததைக் கவனித்தாள்.
” ஹாய் பிரியா, மார்ணிங்” என்று அவளைப் பார்த்து சொல்லிவிட்டு லிப்ட் பக்கம் ஓடினாள்.
மறுநாள் காலை வழக்கமான அதே நேரத்தில் பஸ் ஸ்டாப்புக்கு வந்த போது அதே கருப்பு கண்ணாடி இளைஞன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவனிடம் ‘கண்ணில் என்ன பிராப்ளம்’ என்று கேட்கலாமா என்று யோசித்து பிறகு ‘வேண்டாம்’ என்று விட்டுவிட்டாள். எப்போதும் போல் பேருந்தில் ஏறி ஆஸ்பத்திரியை அடைந்தாள்.
முந்தைய தினம் போல் உடைமாற்றிக் கொண்டு வரும்போது அவன் பிரியாவிடம் ஏதோ கேட்க, அவள் மணிமேகலையைக் காண்பித்து அவனிடம் ஏதோ சொன்னது போல் தோன்றியது. ஆனால் வழக்கம் போல “ஹாய் பிரியா” என்று சொல்லிவிட்டு வார்டுக்கு விரைந்தாள்.
அடுத்து வந்த மூன்று நாட்களிலுமே அவன் தன்னைத் தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு வருவதை ஏதோ சாதாரண நிகழ்வாக அவளால் ஏற்க முடியவில்லை. “கண் ஆப்பரேஷன் முடிந்தது என்றால் எப்போதும் கருப்பு கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் என்னவாக இருக்கும்? அப்படியே தினசரி சிகிச்சைக்கு வருகிறான் என்றாலும் நான் வரும் அதே டயத்திலேயே, அதே பேருந்திலேயே,எனக்கு அருகிலேயே நின்று கொண்டு வருவானேன்?” என்று யோசித்தாள்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து திங்கள் காலை அதே நேரம்; அதே பஸ் ஸ்டாப்; மணிமேகலை பஸ் ஸ்டாப்பை நெருங்கும் போது அவளையும் அறியாமல் அவள் கண்கள் அந்த கருப்பு கண்ணாடி இளைஞனைத் தேடின. அவன் அங்கு இல்லை என்று அறிந்ததும் நிம்மதியடைந்தாள்.
பேருந்து வந்ததும் அவன், அருகில் இருந்த பெட்டிக்கடையிலிருந்து வேகமாக ஓடி வந்து அவளுக்கு பின்னால் ஏறிக்கொண்டான்.
நடத்துநர் அவளிடம் “ஆஸ்பத்திரி தானே?” என்று கேட்கவும் “இல்லை அதற்கு அடுத்த பேங்க் ஸ்டாப்” என்று டிக்கட் வாங்கினாள்.
பக்கத்தில் நின்றிருந்த அவனும் “அதே பேங்க் ஸ்டாப்” என்று டிக்கெட் வாங்கினான்.
இதைப் பார்த்த மணிமேகலைக்கு பயம் தோன்றியது.
பேங்கிலும் அவன் தொடர்ந்து வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டான். கருப்புக் கண்ணாடி வழியே தன்னையே பார்ப்பது போல் அவளுக்குள் ஒரு குறுகுறுப்பு. அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ப்ரியாவிடம் பேசிவிட்டு “சரி அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவள் பக்கத்தில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டாள்.
அவனும் மற்றொரு ஆட்டோவில் தொடர்வதை கண்ணாடியில் கவனித்து விட்டு இடைவிடாமல் மொபைலில் பேசிக் கொண்டே போலீஸ் ஸ்டேஷன் வந்ததும் இறங்கி வேகமாக உள்ளே போனாள்.
தொடர்ந்து வந்த ஆட்டோவிலிருந்து இறங்கிய கோவிந்தனை இரண்டு காவலர்கள் “வாங்க சார் இன்ஸ்பெக்டர் உங்களுக்காக வெயிட்டிங்” என்று (அழைத்து) இழுத்து சென்றனர்.
ஒரு ஸ்டூலில் உட்கார சொல்லிவிட்டு “யாரப்பா நீ? ஏன் இந்தப் பெண்ணை தொடர்ந்து கொண்டிருக்கிறாய்? பார்த்தால் படித்தவன்போல் இருக்கிறாய். ஏன் இந்த கருப்பு கண்ணாடி? கண்ணில் கோளாறா?” என்று சரமாரியாக கேள்வி கேட்டார் பிரியாவின் கணவனான அந்த இன்ஸ்பெக்டர்.
கருப்பு கண்ணாடியைக் கழட்டிவிட்டு “ஸார், என் பெயர் கோவிந்தன்” என்றதும் எதிரே நாற்காலியில் உட்கார்ந்திருந்த மணிமேகலை “அய்யய்யோ அந்த கோவிந்தனா நீங்கள்?” என்று எழுந்தாள்.
இன்ஸ்பெக்டர் அவளிடம் “உனக்கு இவரைத் தெரியுமா? அப்புறம் எதற்கு புகார் செய்து எங்கள் நேரத்தை வீணடிக்கிறாய்? வெளியே போங்கள் இரண்டு பேரும்” என்று கத்தினார்.
கோவிந்தன் “ஸார், என்னால் வந்த குளறுபடி தான் இது. என் பெற்றோர் இவங்க போட்டோவையும் விவரங்களையும் அனுப்பி எனக்கு பிடித்திருந்தால் கல்யாணம் பேசலாம்; அவங்க ஏற்கனவே சம்மதம் சொல்லியாயிற்று” என்று கடிதம் போட்டிருந்தார்கள்.
இவங்க வெளிப்பழக்கங்கள் எல்லாம் எப்படி என்பதை நேரடியாக விசாரித்து தெரிந்து கொண்டால் பின்னால் பிரச்னைகள் வராது என்று ஒரு முன் ஜாக்கிரதைத்தனமாக யோசித்தேன். அதனால்தான் கடந்த ஐந்து நாட்களாக பின் தொடர்ந்தேன். தப்பு என் மேல் தான். மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றான்
இதைக் கேட்டதும் கோபம் தணிந்து சிரித்த இன்ஸ்பெக்டர் “நம்பணும் மிஸ்டர் கோவிந்தன். நம்பிக்கை தான் வாழ்வின் அடித்தளமே. சரி,உங்கள் கணிப்பின் முடிவு தான் என்ன? மணிமேகலை ஓகேவா? இல்லை,வேறு ஏதேனும் பஸ் ஏறி பழையபடி இதே மாதிரி போலீஸ் ஸ்டேஷன் வரப் போகிறீர்களா? என்று நகைத்ததுக்கொண்டே கேட்டார்.
கோவிந்தன் “நான் இப்போது குற்றவாளி ஸார். அவங்க தான் சொல்ல வேண்டும் தீர்ப்பு” என்றதும் “வாங்க போகலாம்” என்றபடி இன்ஸ்பெக்டரிடம் “தேங்க்ஸ்” சொல்லிவிட்டு அவனோடு வெளியே வந்தாள் மணிமேகலை.
மொபைலில் ப்ரியாவை அழைத்து “தேங்க்ஸ்” சொல்லிவிட்டு ஆஸ்பத்திரிக்கு லீவு சொன்னாள்.
“வாங்க கோவிந்த். ஒரே ஆட்டோவில் போகலாம்” என்று சொல்லிவிட்டு ஆட்டோ ஓட்டுநரிடம் “ஹோட்டல் பாம்குரோவுக்கு போங்க” என்றாள் மணிமேகலை.
உள்ளிருந்து ஒரு காவலர் ஓடி வந்து “இதோ உங்கள் கருப்பு கண்ணாடி. மறந்து விட்டீர்களே” என்று அவர்கள் கையில் கொடுத்தார்.
கலகலவென்று சிரித்தனர் இருவரும்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!