சிறுகதை

அன்பின் கரை

176views
சி.பூவேந்தன்.
ஞாயிறு மாலை நேரம், மெரினா கடற்கரை எப்போதும் ஒரு திருவிழாவைப் போலத்தான் அன்றும் இருந்தது.
அலைகளின் ஓயாத சத்தம், காற்றோடு கலந்த உப்பு மணம், மணலில் ஓடிப் பிடித்து விளையாடும் குழந்தைகளின் சிரிப்பு என அந்த இடமே ஒரு தனி உயிர்ப்புடன் இருந்தது.
வியன் தன் அப்பா ராமின் கையைப் பிடித்துக்கொண்டு மணலில் நடந்து கொண்டிருந்தான்.  பின்பு அங்கும் இங்கும் ஓடி விளையாடி கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்த அவனுக்கு, திடீரென ஒரு காட்சி உறுத்தியது.
ஆம்..கூட்டத்திற்கு நடுவே, சிவப்பு நிறச் சட்டை அணிந்த சிறுவன் ஒருவன், தேம்பித் தேம்பி அழுதுகொண்டே தனியாக நடந்து வந்துகொண்டிருந்தான்.
அவன் கண்களில் தெரிந்த பயம், வியனை ஒரு மாதிரி உறுத்தியது.
உடனே தன் அப்பாவிடம், “ப்பா…அங்க.. அந்தப் பையனை பாருங்க, அழுதுட்டே வர்றான். அவன் கூட யாரையும் காணோம்!” என்று வியன் பதற்றத்துடன் சொன்னான்.
வியனின் அப்பா அதை கவனித்தார். சுற்றிலும் தேடிப் பார்த்தார்கள். யாரும் பதற்றத்துடன் யாரையும் தேடுவது போலத் தெரியவில்லை.
பையனிடம் கேட்டபோதும் சரியாக சொல்ல தெரியாமல் அழுதான்.
நிமிடங்கள் நகர்ந்தன. சிறுவனின் அழுகை அதிகமானது.
என்ன செய்வதென்று தெரியாமல், அங்கிருந்த காவல் அதிகாரிகளிடம் சென்று விஷயத்தைச் சொன்னார்கள்.
“சரிங்க, நாங்க பார்த்துக்கிறோம். என்று சிறுவனை தங்கள் பக்கம் அழைத்துக்கொண்டு…நீங்க போங்க சார்,” என்று அதிகாரி சொல்ல, வியனுக்கு அங்கிருந்து நகர மனசே வரவில்லை.
“ப்பா, நம்மளும் கூடவே போவோமே… அந்தப் பையன் கூட நான் இருந்தா இன்னும் பயப்படாம இருப்பான்ல,” என்று வியன் விடாப்பிடியாகக் கேட்டான்.
தன் மகன், முன்பின் அறியாத சிறுவனுக்காக இவ்வளவு அக்கறை கொள்வதைக் கண்டு வியனின் அப்பா நெகிழ்ந்து போனார்.
‘என் மகன் சரியான பாதையில் வளர்கிறான்’ என்ற பெருமிதம் அவருக்குள் எழுந்தது.
கவலர்கள் அங்கிருக்கும் காவல்துறைஅலுவலகத்திற்குள் அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றார்கள்.
அங்கே ஒரு காவலர், அந்த சிறுவனை ஒரு தந்தையைப் போலவே அணைத்துத் தூக்கிக்கொண்டு, அவன் முதுகை மென்மையாகத் தட்டிக்கொடுத்து, “பயப்படாத தம்பி, இதோ அம்மா வந்துடுவாங்க,” என்று மிகுந்த அன்புடன் ஆறுதல் கூறினார்.
அந்த மனிதநேயம் நெஞ்சை சற்றே உலுக்கியது.
ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்த சிறிது நேரத்தில் கேட்டு, அந்தச் சிறுவனின் தாயும் குடும்பத்தினரும் ஓடி வந்தனர்.
தன் மகனைக் கண்ட அந்தத் தாய், அவனை வாரி அணைத்துக்கொண்டு கதறி அழுதார். இழந்த உயிரே திரும்பி வந்தது போன்ற அந்தத் தாயின் தவிப்பும், மகனை இறுக்கிக் கட்டிக்கொண்ட அந்தப் பிணைப்பும் அங்கே ஒரு பெரும் அமைதியை உருவாக்கியது.
அந்தத் தாய், காவலர்களை நோக்கி கண்களில் நீர் மல்க நன்றி சொன்னார். காவலர்களும் இதுபோன்ற இடங்களுக்கு வரும்போது குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சில அறிவுரைகளை அவர்களுக்கு கூறினர்.
அந்தக் குடும்பத்தினர் அனைவரும் நன்றி கூறி விடைபெற்றனர்.
வியன் அந்த நிமிடம் ஒரு பெரும் வெற்றியை உணர்ந்தான்.
அந்தச் சூழலில் இருந்த காவலர்களின் கடமை உணர்வுக்கும், அந்தப் பையனை மீட்ட அந்த நிமிடம் அவனுக்குப் பேரானந்தத்தைத் தந்தது.
திரும்பி வந்தபோது வியனின் அப்பா அவன் தோளைத் தட்டிக் கொடுத்து, “இந்த நிமிடம் நீ செய்தது ஒரு பெரிய விஷயம் வியன். இந்த அன்புதான் உலகத்தை இயங்க வைக்கிறது,” என்றார்.
மெரினா கடற்கரையின் அலைகள் அந்தச் சிறுவனின் அழுகையைத் தின்றுவிட்டு, அன்பின் கதையை மீண்டும் மீண்டும் கரைக்குத் தள்ளிக்கொண்டிருந்தன.
அன்று அந்த அலுவலகத்தில் இருந்த காவலர்களின் அன்பும், தன் மகனின் மனிதாபிமானமும் சேர்ந்து மெரினாவை அன்று மிகவும் அழகான இடமாக மாற்றியிருந்ததை உணர்ந்தனர்.
காவலர்களுக்கு நன்றி கூறிவிட்டு, வியனை உச்சி முகர்ந்து முத்தமிட்டு “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன்” என இவ்வுலகம் போற்ற வேண்டும் என வாழ்த்தி மகிழ்ந்தார் ராம்.

1 Comment

  1. அருமை! வியனைப் போல அன்புடன் சிறுவர்கள் வளர்ந்தால் எதிர்காலத்தில் அன்புசூழ் உலகம் சாத்தியமே!

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!