252views
கோ.மாத்ருபூதேஸ்வரன்
இதயநல்லூர் ஒரு மத்திமமான ஊர்களில் ஒன்று அதனை பெரிய டவுன் என்றும் சொல்ல முடியாது, அதே நேரம் சிறிய கிராமம் என்றும் கூறமுடியாது. ஊரின் நான்கு திசைகளிலும் மாவட்ட தலைநகர் இருப்பதால், இருபத்தி நான்கு மணி நேரமும் பஸ் வசதி உள்ள ஒரு முக்கிய சந்திப்பு என்றே கூறலாம். எப்போதும் வந்து போகும் வாகனங்களும், அவற்றோடு கலந்து ஓடும் மனிதர்களும் அந்த ஊருக்கு ஒரு நிரந்தர அசைவைக் கொடுத்து வந்தன.
இதயநல்லூரில் எல்லா சாதியினரும் வாழ்கின்றனர். கடைவீதி அடுத்து கோனார் தெரு, அதிலிருந்து சற்று தூரத்தில் குயவர் தெரு, அதற்கு பக்கத்தில் ஒரு குட்டை உண்டு. அது இப்போது ஆக்கிரமிப்பினால் காணாமல் போயிருந்தது. சற்று கடந்தால் வன்னியர் தெரு, பின் அக்ரஹாரம். இப்பொழுது அங்கு சிதிலமடைந்த வீடுகளே காலத்தின் சுவடுகளாக நின்றன.
அக்ரஹாரத்தைத் தாண்டினால் ஒரு பெரிய குளமும் அதன் கரையில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலும் பின்புறம் அழகான வாரியும் வயல்களும் விரிந்து ஊருக்கே ஒரு அழகான அமைதியை தந்தன. மேற்கு திசையில் முஸ்லிம் தெரு,செட்டியார் தெரு, உடையார் தெரு மற்றும் வாணிப செட்டியார் தெரு என்று சாதிக்கு ஒரு தெரு இருந்தாலும், இதயநல்லூரின் தனிச்சிறப்பு வேறு. எல்லோரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள்; தேவையில் உதவி செய்யத் தயங்காதவர்கள். தெருக்கள் பிரிந்திருந்தாலும் மனங்கள் பிரியாத ஊர் அது.
ஊரின் கடைசியில் இன்னொரு பெரிய குளம் உண்டு. இந்த இரண்டு குளங்களும் அதற்கு செல்லும் தெருக்களும் நாளெல்லாம் சற்று பிஸியாகவே இருக்கும். ஏனெனில் அங்குதான் பெரும்பாலான மக்கள் குளிப்பார்கள். சிவன் கோவிலும், இராமர் கோவிலும் ஊரில் பிரசித்தி. வடக்கே எல்லையில் முனியன் கோவில் காவல் தெய்வமாக நின்றது. கடைவீதியின் வலது பக்கத்தில் வீற்றிருக்கும் மாரியம்மன் எல்லோரையும் ஈர்த்து அருள்பாலித்துக்கொண்டிருந்தாள்.
இதயநல்லூரின் பொழுதுபோக்கில் மிக முக்கியமான இடம் ‘உதயம்’ சினிமா கொட்டகை. முன்பெல்லாம் அந்த ஊரில் பெரிய பொழுதுபோக்கு என்றால் சினிமா தான்.யார் புதிதாக ஊரிலிருந்து வீட்டிற்கு விருந்தினராக வந்தாலும் அன்றே அவர்களை கூட்டிக்கொண்டு சினிமா பார்க்க போவது என்பது ஒரு உபசார விதியாகவே இருந்தது.
இந்த சினிமா கொட்டகையின் ஓனர் முத்தையா செட்டியார். ஒரு நல்ல மனிதர். எடுத்தெறிந்து பேசாதவர். நடந்துகொள்ளும் விதத்தில் அகந்தை இல்லை. இந்த தியேட்டரில் தான் ருக்மணி டிக்கெட் கவுண்டரில் வேலை செய்து வந்தாள்.
ருக்மணியின் கணவர் மூர்த்தி, ராமன் என்ற இரண்டு பையன்களை கொடுத்துவிட்டு முப்பத்தைந்து வயதிலேயே இறந்து விட்டார். மூர்த்திக்கும் ராமனுக்கும் ஐந்து வயது வித்தியாசம். கணவர் மறைந்த பிறகு, அந்தச் சிறிய குடும்பத்தின் முழுப் பொறுப்பும் ருக்மணியின் தோள்களில் விழுந்தது.ருக்மணி தனது சொற்ப வருமானத்துடன் தியேட்டரில் டிக்கெட்டையும் நாட்களையும் ஒரு சேர கிழித்துக் கொண்டிருந்தாள். மூன்று காட்சிகளுக்கும் டிக்கெட் கொடுத்து முடித்து வீட்டுக்கு திரும்பும் போது பதினொரு மணி ஆகிவிடும். அதன் பின் குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு விட்டு எல்லா பாத்திரங்களையும் தேய்த்து விட்டு அந்த சிறிய வீட்டின் மோட்டுவெளியைப் பார்த்துக்கொண்டு படுப்பதற்குள் அடுத்த நாள் காலை வந்துவிடும். உடம்பின் ஏதோவொரு பாகம் ‘சற்று ஓய்வு எடு’ என்றுக் கெஞ்சும். ஆனால் “இந்தக் குழந்தைகளை முன்னுக்கு கொண்டுவந்தால் போதும்; என் கடமை முடியும்” என்ற ஏக்கம் அவளைத் தள்ளிச் செலுத்தும். வெறிச்சோடிய வானத்தையும், தன் வாழ்க்கையையும் பார்த்துக்கொண்டே, மீண்டும் அடுக்களை வேலையில் மூழ்குவாள்.
மூர்த்தி சற்று சிகப்பான நிறம், உயரம், மெலிந்த உடல், எப்போதும் முகத்தில் ஒரு புன்னகை. படிப்பிலும் சிரத்தையுடன் இருந்தான்.
“இவனை கொஞ்சம் படிக்க வைத்துவிட்டால், அவனுக்கு ஒரு சுமாரான வேலை கிடைக்கும். அது நமது பிழைப்பைச் சரிசெய்து, ராமனையும் படிக்க வைக்க உதவும்” என்று ருக்மணி மனதிற்குள் எண்ணுவாள்.
ராமன் சற்று மாநிறம் தான். படிப்பில் கெட்டிக்காரன். எப்போதும் முதல் ராங்க் வாங்குவான். அப்பொழுது எல்லாம் அரசு பள்ளிக்கூடம் தான். எல்லோருமே அங்கு தான் படிக்க வேண்டும். இரு பையன்களும் வீட்டின் நிலை உணர்ந்து படித்து வருவது ருக்மணிக்கு ஒரு சிறிய சந்தோஷமே.
மூர்த்தி இப்போது மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான். கணக்கு வாத்தியார் ருக்மணியை ஒரு நாள் கடையில் பார்த்து மூர்த்தியை தன் வீட்டிற்கு வரச்சொல்லி ஆங்கிலமும் கணக்கும் பணம் இல்லாமல் டியூஷன் சொல்லித்தருவதாக சொன்னார். அவர் ருக்மணியின் கஷ்ட ஜீவனத்தை நன்கறிவார். மூர்த்தியும் அவரிடம் போய் கற்றுக் கொண்டான். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். பிளஸ் ஒன் வகுப்பில் பியூர் சையன்ஸ் எடுத்தான். அந்தப் பள்ளியில் கணக்கு பிரிவு அப்பொழுது வரவில்லை. கணக்கு பாடம் எடுக்க MSc BEd படித்தவர் இல்லை.
அதே ஆண்டு ராமன் ஐந்தாம் வகுப்பு அந்த ஊர் தொடக்க பள்ளியில் முடித்து விட்டு ஆறாம் வகுப்பிற்கு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தான். அவன் நன்றாக படித்தான்.
மூர்த்தி +2 வில் வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் மாற்றலானதால் கஷ்டப்பட்டான். அவனது முயற்சி எடுபடாமல் தேர்வில் தோல்வியுற்றான். இது அவனை பெரிதும் பாதித்தது. அவன் சத்தமின்றி மனதுக்குள் அழுதான்.அந்தத் தோல்வி ருக்மணியின் வாழ்க்கைக்கும் ஒரு ஏக்கத் தொனியைச் சேர்த்தது. இருவரின் மனமும் வெவ்வேறு பாதைகளில் நிதர்சனத்தை ஏற்க முடியாமல் ஓடிக்கொண்டிருந்தது. துன்பத்தில் துவண்டு, அம்மாவின் பாரத்தை குறைக்க, மூர்த்தி டீக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான்.
விதி வலியதல்லவா? தோல்வியில் துவண்ட மனம் இறுக்கத்தில் பிறழ்ந்து மன பாதிப்பிற்கு உள்ளானான். இது ருக்மணிக்கு இடியாக வந்திறங்கியது. இது வரை வீட்டுச் செலவு மட்டும் இருந்த நிலையில் இப்போது மூர்த்திக்கான மருத்துவ செலவும் சேர்ந்தது.
கஷ்டம் தனியாக வராது என்பார்கள். அது ருக்மணிக்கு ரொம்ப பொருந்தும். சினிமா தியேட்டரும் ரொம்ப பழமையானதாகி மக்கள் வருகையும் குறைந்து கொண்டே வந்தது. முத்தையா செட்டியார் கொட்டகையை விற்று விடலாம் என்று முடிவு செய்து சினிமா காட்சிகளை குறைத்து சிறிது காலத்திற்குப் பிறகு படங்களை நிறுத்தியேவிட்டார். இதற்கிடையில் மூர்த்திக்கு வெயில் காலங்களில் மனபிறழ்வு தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாக்குவது மட்டுமல்லாமல் அவன் தாயிடம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கத்தவும் ஆரம்பித்தான்.
இந்த சங்கடங்களை மூளை உள்வாங்கும் முன்பே ருக்மணியின் மனம் உள்வாங்கி கனக்க ஆரம்பித்தது. தியேட்டர் வருமானம் இல்லாததால் ருக்மணி ஊரில் தனக்கு தெரிந்த சில வீடுகளில் சமையல் செய்ய சென்றாள்.
ராமன் பத்தாம் வகுப்பை முடித்து சில நல்ல மனிதர்களின் உபகாரத்துடன் அரசு பாலிடெக்னிக்கில் சேர்ந்தான். ராமனுக்கு அண்ணனின் மன நோயும் அம்மாவின் பரிதவிப்பும் அழுத்தத்தை ஆழப்படுத்தியதே தவிர முடக்கி விடவில்லை என்பது தான் ஆறுதல். ஆனால் எல்லோருக்கும் வாழ்க்கை சக்கரம் வேகமாக சுழன்று கொண்டிருக்கும் போது இம் மூவருக்கும் அது மிக மெல்லவே சுற்றத் தொடங்கியது.
ராமன் பாலிடெக்னிக் பட்டயத்தை சிரமங்களுக்கு இடையில் முடித்தான். ஆனால் வேலை எதுவும் கிடைக்கவில்லை. விதி அவனைப் பார்த்து சிரிப்பதாகவே உணர்ந்தான்.
ஒருநாள் நண்பன் வைத்திருந்த இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் பேசிக்கொண்டிருந்தபோது, யமஹா பைக் ஒன்று வந்தது.
ஓட்டத் தெரியாத ராமன், தற்காலிக உற்சாகத்தில் வண்டியை எடுத்தான். வேகம் கட்டுப்படவில்லை. ஸ்பீடு பிரேக்கரில் தவறி விழுந்து, தலை அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.
ஊர் உறைந்து போனது. மரணத்திற்குப் பல ரூபங்கள் உண்டு.ருக்மணி பேச முடியாமல் ஜடமாக நின்றாள். அவளது உலகம் அந்த நொடியிலேயே சிதறியது.நிச்சயமற்ற பயணத்தில் கூற்றுவன் கயிறு ஏந்தி வந்து முடிவுரை எழுதினான். ருக்மணி நிர்கதியானாள். இந்த வாழ்க்கையின் விபரீதத்தை யாரிடம் கொட்டி அழுவாள். விதியின் விசித்திர விளையாட்டுக்கு அளவுகோல் உண்டா? கனவுகள் மொத்தமும் கருகிய சோக காலம் அவளை வந்து கவ்வியது.
மூர்த்தியின் மன நோய் மட்டுப்படாமல் அதிகரித்து பல சமயங்களில் கோபத்தில் ஒன்றும் புரியாமல் அடிக்கக்கூட ஆரம்பித்தான். ருக்மணி மனவவலியும் உடல்வலியும் தாங்காது அவதியுற்று வயதான காலத்தில் காசநோயில் சிக்குண்டாள். மூர்த்திக்கும் மாத்திரைகளின் பக்க விளைவுகளால் உடல் நிலை சரியில்லாமல் போய்க்கொண்டிருந்தது. தெரிந்தவர்கள் யார் யாரோ சின்ன சின்ன உதவிகள் செய்தனர். இருவரும் துன்பக் கேணியில் விழுந்து தாம் உற்ற துன்பம் நோன்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இங்கு இலர் பலராகிய காரணம் யாரால் அறுதியிட்டுக் கூற முடியும்?
மூர்த்தியுடன் சேர்ந்திருக்க முடியாத நிலையில் பக்கத்து டவுனில் உள்ள ஒரு இலவச முதியோர் இல்லத்தில் ருக்மணி வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டாள். அங்கும் அவள் உடல்நிலை சரியில்லாது மரணக் கதவை மெதுவாக திறந்துகொண்டிருந்தாள். ஒரு மாத காலத்திற்குள் முகப்பொலிவு மங்கி இன்றோ நாளையோ என தவித்துக்கொண்டிருந்தாள். இது மூர்த்திக்கு தெரியாதது மட்டுமல்ல தெரிந்தாலும் அவனுக்கு புரியாத நிலைக்கு அவனும் சென்றுவிட்டான்.
இவள் போய் அவன் இருந்தால் என்ன செய்வான் என்று எல்லோரும் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, மூர்த்தியே ருக்மணியை முந்திக்கொண்டான். இந்த செய்தி தெரியாமலே ருக்மணியும் இரண்டு நாட்களில் முதியோர் இல்லத்திலேயே கண்மூடினாள்.
வாழ்க்கை அவர்களை கைவிட்டாலும் மரணம் அவர்களை ஏமாற்றவில்லை.
இதயநல்லூர் அமைதியாகவே இருந்தது. ஆனால் அந்த அமைதிக்குள், ருக்மணியின் வாழ்க்கை மட்டும் ஒரு நிரந்தர சோகமாக மாறி நின்றது.
add a comment







