209views
கதை : முனைவர் என்.பத்ரி
ஓவியம் : ஷ்யாம் சுந்தர்
அந்த கிராமத்தில் வசித்து வரும் ஒரே ஐயர் சாம்பசிவ ஐயர்தான். அவருடைய ஒரே மகன் சுந்தர் அடுத்த வாரம் கனடா செல்கிறான். 5 வருட பணியாக கனடாவுக்கு செல்லும் அவன் எப்பொழுது திரும்புவான் என்று அவனுக்கே தெரியாது.நன்கு படித்திருந்த அவனுக்கு இந்தியாவில் வேலை எதுவும் கிடைக்காதது அவனுடைய துர்ரதிஷ்டம்தான்.
கனடா போக அவனுக்கு விசா கிடைப்பதே பெரிய பிரச்சினையாக இருந்தது. இதில் அப்பாவை எப்படி தன்னுடன் கூட்டிப் போக முடியும்? ஒரே பாசக்கார பையன். தந்தையை தனியாக கிராமத்தில் எப்படி விட்டு செல்வது. ரொம்பவும் குழம்பிப்போய் இருந்தான்.அவனுக்கு அம்மா இறந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றது. இவனுக்கு அப்பா அம்மா எல்லாமும் சாம்பசிவ ஐயர் தான்.
இந்த 70 வயதிலும் காலையில் எழுந்து மகனுக்கு சமைத்துக் பரிமாறுவதில் அவருக்கு இருந்த மகிழ்ச்சிதான் எவ்வளவு!35 வயதானாலும் அவனுக்கு இன்னும் திருமணமும் ஆகவில்லை. இப்பொழுதெல்லாம் பையன்களை திருமணம் செய்து கொள்ள எந்த பெண்தான் தயாராக இருக்கிறாள்?.அவர்கள் நன்றாக படித்துவிட்டு நல்ல வேலையில் பணம் பார்க்கிறார்கள்.கல்யாணச் சந்தையில் 100 பையன்களுக்கு 5 பெண்கள்தான் இருக்கிறார்களாம்.
நீண்ட நாட்களின் தேடுதலுக்குப் பிறகு, வெளிநாட்டில் நல்ல வேலை இப்போதுதான் அவனுக்கு கிடைத்திருக்கிறது.அவனும் மனதளவில் புறப்படத் தயாராகி விட்டான்.
அவனுக்கு சித்தப்பாக்குளுடனும், மாமாக்களுடனும் சரியான உறவுகள் இல்லை. போக்குவரத்தும் இல்லை. பணக்கார உறவுகள் எப்போதும் அப்படித்தானே?
அப்பாவை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று யோசித்துக் கொண்டே இருந்த சுந்தருக்கு எதிர் வீட்டு கிட்டப்பா மாமாதான் அந்த ஐடியவைக் கொடுத்தார். அப்பாவை அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்து விடு’ என்று.
அப்பாவும் மகனும் முதியோர் இல்லத்தில் போய் ஆய்வு செய்தார்கள். வீட்டில் உள்ள அனைத்து வசதிகளும் இருப்பதாகத்தான் அவர்கள் மனதில்பட்டது.
அப்பாவை இங்கு கொண்டு வந்து விட்டுப் போவதை தவிர வேறு வழி அவனுக்கு தெரியவில்லை. மறுநாள் காலை அப்பாவை அழைத்துக் கொண்டு அந்த முதியோர் இல்லத்திற்கு புறப்படத் தயாராக இருந்தான். மனதளவில் சாம்பசிவ ஐயரும் முதியோர் இல்லத்தில் தங்கத் தயாராகி விட்டார்.
தனியாக ஆச்சார அனுஷ்டானம் என்று இருப்பவருக்கு அங்கு போய் இருப்பது சாத்தியமா? என்ற சந்தேகமும் அவருக்குள் இருந்தது. அங்கு அறை ஒன்றில் இருந்த 4 கட்டில்களில் ஒன்றில் போய் படுத்துக் கொண்டார். சம வயது உள்ள எல்லோருக்கும் இந்த நிலை ஏற்பட்டு விடுமோ என்ற கவலை அவர் மனது முழுவதும் வியாபித்து இருந்தது.
விதி அவருடைய வாழ்நாள் இறுதிவரை அங்குதான் வைத்திருக்கப் போகிறது என்பது அவருக்கு தெரியாது. ஐயர் முதியோர் இல்லத்துக்கு போவதற்கு முன்னால் பையனிடம் சொன்னார்,’அந்த பசுமாட்டுக்கும் வயசாகிவிட்டது. அதையும் ஏதாவது ஒரு கோசாலையில் கொண்டு போய் சேர்த்து விட்டுப் போ’ என்றார்.கண்களில் வழிந்த கண்னீரை அப்பாவும்,மகனும் மாறி,மாறி துடைத்துவிட்டார்கள்.
வெளியே வந்த சுந்தர் பால்கார பாபுடன் ஃபோனில் பேசி மாட்டை வந்து ஓட்டிக் கொண்டு போகச்சொன்னான். வீட்டுக்கு போன சுந்தர் வீட்டை பூட்டி கிட்டப்பா மாமாவிடம் சாவியைக் கொடுத்து.’யாராவது வாடகைக்கு வந்தால் வாடகைக்கு விட்டு விடுங்கள்.வீட்டில் விளக்கு எரிந்தால் போதும். இந்த கிராமத்தில் வாடகை ரொம்ப வராது’ன்னு எனக்குத் தெரியும் என்றான்.கிட்டப்பா,’தன் மகனுக்கு அடுத்த மாதம் கல்யாணத்தை முடித்துவிட்டு, அங்கு தனிக்குடுத்தனம் வைக்க வைத்திருந்த திட்டத்தை அமல்படுத்த வசதியாச்சு’ என்று மனதில் சொல்லிக் கொண்டார்.
எல்லா வேலையும் முடித்துவிட்டு சுந்தர் கனடா கனவுடன் ஏர்போர்ட்ட்டுக்கு கிளம்பினான்.வழியில் அவனுடைய கல்லூரிக் காதலி லதாவை காரில் ஏற்றிக் கொண்டான். அந்தக் கூட்டுக்களவானிகள் கனடாவில் நடத்த உள்ள அடுத்த திட்டம் அவர்களுக்குத்தான் தெரியும்.இதைத்தான் காலம் போடும் கணக்கு என்கிறார்களா?
add a comment






