182views
டாக்டர் ஆர். சிதம்பர நடராஜன்
“கட்லே, கட்லே” கூடையைச் சுமந்து கொண்டு நிலக்கடலை விற்பவர் வந்தார். பல ஐந்து ரூபாய் நாணயங்கள் கைமாறின. பதிலுக்கு கூம்பான காகித பொட்டலங்கள். நானும் வாங்கினேன். ஒரு பிளாஸ்டிக் பையில் அதன் தோலிகளை ஜாக்கிரதையாகப் போட்டு, கடலைகளை ருசித்து ரசிப்பதில் மூழ்கினேன்.
பின் எழுந்து சென்று, குப்பையை தொட்டியில் போட்டுவிட்டு வந்தேன். கம்பார்ட்மெண்டில் எல்லோரும் இந்த நடைமுறையை பின்பற்றவில்லை. சில நிமிடங்களில் குருவாயூர் எக்ஸ்பிரஸில் அந்த இரண்டாம் வகுப்பு பெட்டியின் தளம் முழுவதும் வேர்க்கடலை ஓடுகளின் மாடர்ன் ஆர்ட்டால் நிரம்பியிருந்தது. சிறிது நேரம் கழித்து, மிகவும் அழுக்கு சட்டையும் கிழிந்த அரைக்கால்சட்டையும் அணிந்த ஒரு சிறுவன் அந்த கம்பார்ட்மெண்டுக்குள் வந்தான். கையில் மேலும் அழுக்காக இருந்த துணி. அவன் குளித்து பல வாரங்கள் ஆகியிருக்கும். தலைமுடி ‘எண்ணெய் என்றால் என்ன?’ என்று கேட்டது. கம்பார்ட்மென்ட்டின் தரையை சுத்தம் செய்யத் துவங்கினான். நான் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து தன் வேலையை ஆரம்பித்தான்.
சில பயணிகள் கால்களைத் தூக்கி மடித்து வைத்துக்கொண்டனர். சிலர் தங்கள் எரிச்சலைக் காட்டினர். அவற்றால் பாதிக்கப்படாமல் அந்த சிறுவன் தன் வேலையை முடித்துவிட்டு, எங்களை ஒருவித எதிர்பார்ப்புடன் நோக்கினான். கண்களில் பரிதாபமான பார்வை. ஏழ்மையின் இயலாமை, மற்றும் சோகம். என் பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாய் நாணயத்தை அவனிடம் கொடுத்து “தேங்க்ஸ்” என்றேன். நான் கூறியதை அவன் சட்டை செய்யவில்லை. நாணயத்தை மட்டும் வாங்கிக்கொண்டு மற்றவர்களை பார்த்தான்.
“ஐயா…” ஒரு பெண் ஐம்பது பைசா கொடுத்தாள்.
“இந்த பிச்சைக்காரங்க பெரிய தொல்லை.”
“போ போ. பிச்சை எடுக்க இது ஒரு வழி.”
“குளிச்சு எத்தனை நாள் ஆச்சோ!” ஒரு பெண் தன் கைக்குட்டையால் மூக்கை மூடினாள். “இவங்கதான் அரசியல்வாதிகளுக்கு ஓட்டு வங்கி. அதனாலதான் கவர்மெண்ட்டு இவங்களை ஒண்ணும் செய்யறதில்லை.” ஒருவர் அவனை விரட்ட அடிப்பது போல் சைகை செய்தார்.
பயத்தில் அந்த சிறுவன் கீழே விழுந்தான்; அவன் தலை பக்க இருக்கையில் இடித்தது. தலையை தடவிவிட்டு மீண்டும் பிச்சையைத் தொடர்ந்தான். அவன் நிலை எனக்கு வருத்தமளித்தது. வேறொருவர் அவனிடம் ஒரு ரூபாயைக் கொடுத்து, “ஏண்டா, உடம்பு நல்லாதானே இருக்கு. என் பிச்சை எடுக்கறே? உழைச்சு சம்பாதிக்கக் கூடாது? நீயும் ஏதாவது வியாபாரம் பிழைக்கலாமில்ல?”
அவனுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. போய் விட்டான்.
சிறிது நேரம் கழித்து, நான் மற்ற கம்பார்ட்மெண்ட்டுகள் வழியே பொடிநடையாக நடந்து சென்றேன். மூன்று பெட்டிகளுக்கு அப்பால், வெஸ்டிப்யூல் மூடப்பட்டிருந்தது; அதைத் தாண்டி ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டுகள். கதவின் அருகே அந்த நிலக்கடலை வியாபாரி அமர்ந்திருந்தான். கூடை காலி.
“நல்ல வியாபாரமோ?”
“ஆமா. கொண்டாந்தது எல்லாம் காலியாயிடுச்சு.”
அவனைத் தாண்டி, அந்த பிச்சைக்கார சிறுவன் படிக்கட்டில் கால் வைத்து அமர்ந்திருந்தான்.
“எங்கே போறே?” கடலைக்காரனிடம் கேட்டேன்.
“திருச்சி.”
“அங்கேதான் வீடா?”
“ஆமா.”
“டேய் பையா, நீ எங்கே போறே?”
“அவனும் திருச்சிக்குதான் போறான்.”
“அவனுக்கும் அங்கேதான் வீடா?”
“ஆமா. என் பிள்ளைதான்.”
add a comment







