368views
கதை : பொ.வெ.இராஜகுமார்
என் பெயர் சுதாமா! குசேலன் என்றும் அழைப்பார்கள்! குசேலன் என்றால், கிழிந்து, நைந்து போன ஆடைகளை அணிந்தவன், என்று ஊரில் என் பெயர் பிரபலம்! அவ்வளவு தரித்திரம்; நானே விரும்பி ஏற்றுக் கொண்டத் திருக்கோலம்! உலகளந்தவனின் திருக்கோயிலில், வேதம் ஓதி வயிறு வளர்ப்பவன்! என்னோடு, பகவத் பிரசாதமாக, நான் பெற்றெடுத்த இருபத்தியேழு சிகாமணிகளோடு, என் பாரியாளும் சேர்ந்து, இஷ்ட ஜீவனம் புரிபவன்.
ஆனால், இந்த வாழ்க்கையில், என் மனைவிக்கு உடன்பாடில்லை. அவளுக்கு, வறுமையின் நிறம் முகத்தைச் சுளிக்க வைத்தது. வளமையின் பகட்டே வெகுவாய் ஈர்த்தது! அடுத்த வீட்டுக் கோமளம், கோடிவீட்டுக் கமலா, வளமாக வாழ்வதில் அவளுக்குப் பொறாமை! அவர்களைப் போல, நம்மாலும் பொன்னும் நகைகளும் அணிய முடியவில்லையே! அவர்களின் அகத்துக் குழந்தைகள் போல, தம்முடைய குழந்தைகளும், பட்டும், பீதாம்பரங்களும் அணிந்து வலம் வரவில்லையே என்ற மனக்குறை!
அதனால், ஒவ்வொரு நாளும், என்னுடைய நண்பன், துவாரகை நாதனிடம் சென்று, பொன்னையும், பொருளையும், கேட்டுப் பெற்றுவர வற்புறுத்தி வந்தாள். அன்று, என் மனைவியின் நச்சரிப்புகளைத் தாங்க முடியாமல், என்னுடைய ஆருயிர் நண்பன், கார்மேக வண்ணன், கண்ணன், துவாரகைச் சக்கரவர்த்தியிடம், பொன்னையும், பொருளையும், யாசிப்பதற்காகச் சென்றேன்!
நான் காண்பது கனவா! நனவா! இந்திரனின் மாளிகையே இப்படித்தான் இருக்குமோ! இரண்டடுக்குக் கோபுரம் கொண்ட ஆதிநாதன் கோயிலும், சுற்றி மண்குடிசைகளும், மாட்டுக் கொட்டில்களும் நிறைந்த சிற்றூரில் வாழ்ந்திருந்த எனக்கு, மதுராபுரியில் வாழும் பிரபஞ்ச நாயகனின் அரண்மனைக்கு வந்த போது, நம்ப முடியவில்லை.
என்னோடு, சாந்திபனி ஆசிரமத்தில், மயிற் பீலி அணிந்து, வேதம் படிக்கிற சாக்கில், தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்த என்னுயிர் நண்பன் கண்ணனின் மாளிகையா, இது? என்னுள் எழுந்த பிரமிப்பும், ஆனந்தமும், சற்றும் அடங்கவில்லை.
தேவலோகத்து இந்திர சபையைப் பார்த்ததில்லை. ஆனால் கண்ணனின் அரண்மனையைப் பார்த்த எனக்கு, இனி அந்த ஆசையே வராது. சொர்க்கலோகம் போவதற்கு நசிகேத யாகமும் இனி செய்ய அவசியமிருக்காது.
என்னுடைய கௌரவக் கூட்டம் (என் புத்திர சிகாமணிகள்), என்னுடன் அந்த மாளிகைக்கு வந்திருந்தால், வானரங்கள் புகுந்த பழத்தோட்டமாகத் திமிலோகப்பட்டிருக்கும். நானிருக்கும் கிராமத்தின் அளவிற்குப் பரந்த, பல அடுக்குமாடிகள் கொண்ட பகட்டான மாளிகை, பிரம்மாண்டமானத் தூண்கள், ஆடம்பரமான இருக்கைகள், பொன்னால் வேய்ந்த அறைகலன்கள், மணிவிளக்குகள், சுற்றிலும் மலர்வனங்கள், நீரூற்றுகள், என அப்பப்பா!
தயக்கத்தில், நான் தரையைத் தேய்த்துத் தேய்த்து, அருகில் சென்று, காவலுக்கு நின்றவனிடம், நான் மகாராஜாவின் பள்ளிக் கால நண்பனென்றும், அவனைச் சந்திக்க விரும்புவதாக, நாக்குளறித் தெரிவிக்க, அவன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, உள்ளே சென்றுவிட, அப்படியே ஓடி விடலாமா என்று நான் திவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது, படீரென்று மாளிகையின் கதவுகள் திறந்து கொள்ள, வெளியே ஓடி வந்தான்- என் அவதாரப் புருஷன்; ஒருத்திக்கு மகனாய்ப் பிறந்து, ஒருத்தியிடம் சேட்டைகள் புரிந்து வளர்ந்த கள்ளன்; உள்ளங்கவர் கள்வன்; அரக்கர்களைக் கண்சிமிட்டும் நேரத்தில், துவம்சம் செய்தவன்; மதுராபுரியை அசுரன் கம்சனிடமிருந்து மீட்டவன்; ருக்மணியை காந்தர்வ விவாகம் செய்து துவாரகையில் அரசாட்சி புரிபவன், பகைவர்களெல்லாம் அஞ்சும், பரகாலன்; பரோபகாரி; பக்தவத்சலன்; பரப்பிரம்மன்; நந்தகோபாலன், என் கண்ணபிரான்.
அவன்-
என்னுடைய நண்பன், ஆருயிர் நண்பன்., அன்றும், இன்றும், என்மேல் கொண்ட அன்பில் மாறாதவன்! என் நட்பு வானத்தில் நிலைத்த ஆதவன்! நித்திலமாய் என் நெஞ்சில் குடிகொண்ட ஆத்ம நண்பன்! நட்பின் இலட்சியமாய் இருப்பவன்!
என்னை நெடுநாள் கழித்துப் பார்த்ததும், என்னை விடப் பரவசமும், ஆனந்தமும் கொண்டு ஓடி வந்தான்! அழுக்கு வேட்டியை இடுப்பிலும், கிழிந்த துண்டைத் தோளிலும், போர்த்திய என்னை, அப்படியே ஆலிங்கனம் செய்து, உச்சிமுகர்ந்துக் கொண்டாடினான்! அவன் துவாரகையின் சக்கரவர்த்தி- என்னுடைய நண்பன், பாசத்தைக் கண்களால் தேக்கி, என் கன்னங்களில் பொழிந்தான்.
உடனே, மாளிகைக்கு அழைத்துச் சென்று, தன் மனைவி ருக்மணியை அழைத்து, என்னைத் தன்னுடைய பேரன்புக்குரிய நண்பன் சுதாமா என அறிமுகப்படுத்தினான். “நெடுந்தூரம் நடந்து வந்து என்னைப் பார்க்க வந்திருக்கிறான்- உடனே விருந்துக்கு ஏற்பாடு செய்!” என அவளிடம் சொல்லிவிட்டு, என்னை அணைத்தவாறே தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றான்.
தங்க நாற்காலியில், என்னை அமரவைத்து, தங்கத் தாம்பாளத் தட்டிலே என்னுடைய சேறு ஒட்டிய கால்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தன் தொடையில் மேல்வைத்து, ரோஜா இதழ்கள் மிதக்கும் பன்னீரிலே என்னுடைய கால்களைச் சுத்தமாகக் கழுவித், துடைத்து, சந்தனத்தைத் தடவி, மெதுவாகப் பிடித்துவிட்டான்.
நான் எவ்வளவோ தடுத்தும் அவன் கேட்கவில்லை, அவனுடைய சேவைகளைத் தொடர்ந்து செய்தான். நான் ஆசுவாசப்படுத்திக் கொள்ள, பட்டுத் துகில் வேய்ந்த பெரிய விசிறி கொண்டு மெல்ல வீசினான். அவனின் பணிவிடையில், ருக்மணியும் சேர்ந்து கொண்டு, கற்கண்டும், தேனும் கலந்த பாலை, அருந்தக் கொடுத்தாள். என் கண்களில் பொங்கிய நீரை, ஆதுரமாய்த் துடைத்துவிட்டு, அவனின் கிரீடம் என் நெற்றியில் பட, என் கன்னத்தோடுத் தன் கன்னத்தை ஒற்றிக் கண்களைமூடி, என்னைத் தாலாட்டினான்.
“நண்பா! விருந்து தயாராகிவிட்டது! நெடுந்தூரம் நடந்து வந்திருக்கிறாய், உணவு உண்டு சற்றே இளைப்பாறுவாய்!” என அழைத்த அவனுடன், தங்கம் வேய்ந்த மேஜை முன்னால் அமரத் தானும் அருகில் அமர்ந்து, அவன் உண்ணாமல், எனக்குப் பிடித்த உணவையெல்லாம் ஒவ்வொன்றாகப் பரிமாறி, நான் சாப்பிடும் அழகைக் கண்டவாறே, அந்த நாள்கதையைப் பேச ஆரம்பித்தான்.
நான் உணவருந்தி முடித்ததும், “நண்பா உனக்கு நினைவிருக்கிறதா. ஆசிரமத்திற்காக சுள்ளிகளைப் பொறுக்கக் நாம் காட்டிற்குச் செல்லும் போதெல்லாம், நீ வெல்லப் பாகில் தோய்ந்த அவல் பொரிகளை, உன் இடுப்புத் துணியில் முடிந்து கொண்டு வருவாய். எனக்குப் பசியெடுத்து, நான் கேட்டால் கூட, சாப்பிட நீ எதையும் கொண்டுவரவில்லை, எனச் சாதித்து, அனைத்தையும் என் முன்பாகவே உண்டுவிடுவாய்!
இன்றும் கூட, அந்த அவல் பொரியை எடுத்து வந்திருக்கிறாயா? உன் சகதர்மினி எனக்காக அதை நிச்சயம் கொடுத்து அனுப்பியிருப்பாளே! எங்கே எடு! எடு! ஏன் மறைக்கிறாய்? அதையும் முன்பு போல நீயே சாப்பிடலாம் என நினைத்தாயா? ” என்று என் இடுப்பினில் கட்டி வைத்திருந்த, துண்டைப் பிடித்திழுத்து, அதில் முடிந்து வைத்த நைந்து போயிருந்த அவல் பொரிகளை அள்ளி எடுத்து, ஆசையுடன் உண்டான்.
“கண்ணா! கண்ணா! விளையாட்டுப் பருவத்தில், பசியோடு நீ கேட்டாலும், பிடி அவல் பொரியைக் கூட, தர மனமில்லாத என்னைப் பாராளும் சக்கரவர்த்தியாகவும், பிரபஞ்சங்களின் நாயகனாகவும் விளங்கும் உனக்கு ஈடாக, என்னை அமரவைத்து, எனக்குப் பாதவேவைகள் செய்து, என்னை சீராட்டிப் பாராட்டுகிறாயே! நான் என்ன தவம் செய்து விட்டேன், கண்ணா! உன்னை நண்பனாக நான் அடைய என்னத் தவம் செய்தேன்!” எனக் கதறி அழுதேன்.
“சுதாமா! சுதாமா! நீ உன் உயிர் நண்பன்! நானும் நீயும், குருகுலத்தில், ஆடிப் பாடி, கவலையற்றுத் திரிந்த நாட்களை நான் எப்படி மறப்பேன், சுதாமா! உன்னைப் பற்றியும், நமது குருகுலத்தின் இனிய நண்பர்களைப் பற்றியும் அடிக்கடி நினைவு கூர்ந்து, ருக்மணியிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறேன்! காலத்தின் சுழற்சியில் நீயும் நானும்பிரிந்தாலும், என் நினைவு வானத்தில் என்றும், நம் பள்ளிக்காலக் குறும்புகளையும், நாம் அடித்த லூட்டிகளையும், அவ்வப்போது நினைந்து மகிழ்ந்திருப்பேன், சுதாமா!
இத்தனைக் காலம் கழித்தாவது, என்னைச் சந்திக்க வேண்டும் என்று என்னைத் தேடி வந்தாயே! அதற்கு நான் தான் உனக்கு நன்றி கூற வேண்டும்! ” என்றபடி, அவலோடு, எங்களின் பால்ய காலத்தையும், நினைந்து அசைபோட்டான்.
வேகவேகமாய்ச் சாப்பிட்ட அவனுக்குப் புரையேறி, அவன் கண்களில் நீர் திரள, நட்புக்கு இலக்கணமாய்- அல்ல, அல்ல, நட்பென்றால் கண்ணனாய் உருவெடுத்து, எனக்கு வாய்த்திருக்கிறானே! இவனல்லவோ பேரன்பின் பேரம்சம்! இவனல்லவோ பெருங்கருணையின் அழகோவியம்! இவனிடமா பொன்னையும், செல்வத்தையும், யாசகமாகப் பெற்று வர, என்னை அனுப்பிவைத்தாள், என் மனைவி?
இவனிடம் நான் என்ன கேட்பேன்? கணக்கில்லாமல் குழந்தைச் செல்வங்களை அளித்து, கண்ணனின் நாமத்தை, அவன் கோயிலில் ஓதினாலே, வயிறுமுட்ட பிரசாதத்தைக் கொடுத்து, நாளும் அவனின் நினைவில் வாழும், என்னையும், என் குடும்பத்தையும், இவன் தானே காப்பாற்றிக் கொண்டிருக்கிறான்! இன்னமும் பேராசையுடன், பொன்னுக்காகவும், செல்வத்திற்காகவும், என் நட்பை விலைபேசி, அவனின் கொடையைப் பெறுவதா?
இத்தனைக் காலம் அவனைப் பார்க்காமல் தான் இருந்திருக்கிறேன்! ஆனாலும், எங்களின் இருவரிடையே, வாடாத நட்பு மலர் என்றும் மணம் வீசிக் கொண்டுதானே இருந்தது, இப்போதும் இருக்கிறது. ஒவ்வொரு பக்தனும், ஒவ்வொருநாளும் தாம் வணங்கும் இறைவன் நேரில் வந்தால் தான், பூஜையை நடத்துவேன் என்றா காத்திருக்கிறான்.
அவனின் நெஞ்சத்தில் என்றுமே மலர்ந்திருக்கும் இறைவனைத் தானே அவன் தினமும், பூஜிக்கிறான்!
அப்படித்தானே என் மனத்தில் அவனையும், அவன் மனத்தில், என்னையும் போற்றி வந்திருக்கிறோம், வளர்ந்திருக்கிறோம்! நேரில் வந்து பார்க்கவேண்டிய அவசியமென்ன? விடைபெறும் நேரம் வந்தது. இருவரும் மீண்டும் ஆறத் தழுவிக் கொண்டோம். ஆனந்தக் கண்ணீரில் நனைந்தோம்!
அவன் மக்களைத் தன் தெய்வமாகப் போற்றிப் பாதுகாக்கிறான். நானவனைத் தெய்வமாக மனதில் பூஜித்து, அவனருளாலே வாழ்கிறேன்! இங்கு தேவை என்ன இருக்கிறது? கேட்பதற்கு என்ன இருக்கிறது?
ஊர்த் திரும்பிச் செல்லத் தங்கத் தேரில் என்னை அனுப்புகிறேன், என்றான், கண்ணன். நான் மறுத்தேன், நடந்து பழக்கப்பட்டக் கால்கள், நயந்து பவனி போனதில்லை, எனக்கூறினேன். இருந்தும், இரண்டு நாள் பயணத்திற்கு உண்டான கட்டுச்சோற்றை துணியில் முடிந்து கொடுத்தான். நான் பிரியாவிடை பெற்றேன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை நான் போவதைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான், என்னுயிர் நண்பன், அவனுடன் என் சகோதரி, ருக்மணியும்..
என்ன தவம் செய்துவிட்டேன் நான்! இப்பிறவியிலேயே, அந்தக் கருணைச் சாகரம் பொழியும் பேரன்பு மழையில் திளைத்து, உருகி, என்னைத் திக்குமுக்காடச் செய்த அந்தப் பரந்தாமனை, என் நண்பனாகப் பெற, நான் என்ன தவம் செய்துவிட்டேன்!
பாராளும் சக்கரவர்த்தி, வறுமையில் புரளும் என்னைத் தன்னுடைய நண்பன் என்று உலகறியச் செய்து, சீராட்டியவனை, என் நண்பனாகப் பெற நான் என்ன தவம் செய்துவிட்டேன்! வானாளும் வரம்பிகந்து, மனிதர்களைத் தானாளும், ஆணவ, கன்ம, மாயையை, அழித்தொழித்து, சீராளும் பெரு வைகுந்தத்தில் கரைசேர்க்கவே, மனித உருவில் தெய்வமாய் வந்திறங்கிய கோலாளும் மன்னவனை என் நண்பனாகப் பெற்றதற்கு, நான் என்ன தவம் செய்துவிட்டேன்!
அவதரித்தநாள் முதல், தன்னை அழித்தொழிக்கக் கிளம்பிய அவுணர்களுக்கும், துறக்கம் திறந்து, முக்தியளித்த கருணைச் சாகரனை, என் நண்பனாகப் பெற, நான் என்ன தவம் செய்துவிட்டேன்!
என் பாவங்கள் அனைத்தையும், துடைத்தெறிந்து, எனை ஆட்கொண்டு, அவனின் பிறபிறப்பற்ற நித்திய ஆனந்தலோகத்தில், நாளும் அவனைத் துதிக்கும், பெருவரத்தை அளிக்கப் போகும், அந்தக் கலியுக வரதனை நான் நண்பனாகப் பெற என்ன தவம் செய்துவிட்டேன்!
ஊர் நிறைய மக்கட் செல்வங்களைப் பெற்றெடுத்து, அவனை நினைந்தே ஓதி, அவனின் பிரசாதத்தை உண்ணும் உஞ்சவிருத்தி பிராமணன், நான் என்ன தவம் செய்திருக்க முடியும்! அது என்னைப் பெற்றோரின் தவப்பயனால் விளைந்த நற்பேறன்றி வேறென்ன நான் தவமாகச் செய்து அடைந்திருக்கமுடியும்?
அடுத்த இரண்டு நாட்கள், பஞ்சு மெத்தையில் நடப்பதைப் போல, ஊர்செல்லும் பாதையில், துள்ளிக் கொண்டு நடந்தேன்! வீட்டிற்குப்போனவுடன், மனைவி, குழந்தைகளுக்கும், ஊராருக்கும் சொல்ல வேண்டிய என் கண்ணனுடைய புராணங்கள் நிறைய இருந்தன. சட்டென்று மனைவி ஞாபகம் வந்தவுடன், அவள் கேட்பாளே! தனக்கும், குழந்தைகளுக்கும், மதுராபுரி சக்கரவர்த்தியிடமிருந்து என்ன பரிசுகளை வாங்கி வந்தாய் எனக் கேட்பாளே! அதற்கு நான் என்ன சொல்வேன்!
வண்டி வண்டியாக அவனின் பேரன்பின் இறகுப் பொதிகளை என் நெஞ்சில் சுமந்து வந்ததைச் சொல்வேனா, அவனின் பெருங்கருணையில் நனைந்த கண்களின் ஈரத்தை தொட்டுக் காட்டி உரைப்பேனா! நானென்ன சொல்வேன்! இதோ ஊர் வந்துவிட்டது! தொலைவில் இருந்து பார்க்கும் போதே, தன்னுடைய வீடு இருந்த வீதியில், கூட்டம் கூடியிருப்பதைப் பார்க்க முடிந்தது.
என் குடிசை இருந்த இடத்தில் அதைக் காணவில்லை, ஒரு அழகிய சிறு மாளிகை எழுந்து பிரகாசித்துக் கொண்டிருந்தது! என்னாயிற்று என நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே என் பிள்ளைகளில் மூத்தவன், வீடணன், என்னைப் பார்த்துவிட்டு, “அப்பா!” எனக் கத்தியவாறே ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டான். அழுக்கில் தோய்ந்த கச்சையை உடுத்தியிராமல், அவன் பட்டுப் பீதாம்பரங்களையும், பொன்னும், மணிகளும் கொண்ட ஆரங்களையும் அணிந்திருந்தான். இவனைப் பார்த்துவிட்டு, ஓடிவந்த என் மற்றபிள்ளைகளும், செல்வச் செழிப்பில் ஜொலித்துக் கொண்டிருந்தார்கள்.
பெருவியப்பும், பயமும் ஒருசேர என் தொண்டையை அடைத்தபோது, வெளியே வந்த என் மனைவி, ஒரு ராஜகுமாரியைப் போல உருமாறியிருந்தாள். அவள் அருகில் வந்து, “நாதா!” ஜன்ம ஜன்மமாய் நம்மைப் பீடித்திருந்த வறுமை நோய், நம்மைவிட்டு அகன்றுவிட்டது! உங்களுடைய உயிர் நண்பன், கண்ண பகவான், கண் திறந்துவிட்டான். உங்களுக்காக, நமக்காக, நான் கனவு கண்டிருந்த சொர்க்கலோக வாழ்க்கையை அளித்துவிட்டான். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை! இங்கே பாருங்கள்!”, என அவள் அணிந்திருந்த தங்க வளையல்களையும், நவமணிகள் கொண்ட அட்டிகைகளையும் காட்டினாள்.
ஒரே நாளிரவில், என்னுடைய உயிர் நண்பன், நிகழ்த்திய பேரதிசயத்தின் வண்ணங்கள், மெல்ல மெல்ல என் உள்ளத்தில் படிய ஆரம்பித்தது. ஆஹா! அவன் வீடு தேடிச் சென்ற என்னை என்னவேண்டும் என அவன் கேட்கவில்லை! அவனை நாடிச் சென்ற நானும், எனக்கு இது வேண்டும் எனக்கேட்கவில்லை!
ஆனால், அவன்., அவன்., கொடுத்தான், நான் கேட்காததை எல்லாம் கொடுத்தான்! நான் கேட்க நினைத்து, நட்பின் கற்பை அது கெடுத்துவிடக் கூடாதென நினைத்து, நான் கேட்காததைக் கொடுத்தான்!
அவன் கொடுப்பதை, வெளிப்படையாகச் சொன்னால், நட்பு வெற்பின் மேல், கழிவிரக்க மேகம் கவிந்துவிடக் கூடாதே என அவனும் சொல்லாமலே கொடுத்தான்! என்னுடைய பிறப்பே ஆதிபிரானை வழுத்தி, பிச்சை எடுத்து உண்ணும் மரபாயிருந்தாலும், நட்பின் பேரால் அவனிடம் நான் பிச்சை எடுக்க விரும்பவில்லை!
அவனின் வள்ளல் குணமே, வறியவருக்கு ஈவதே என்ற நிலையிலும், தன்னுடைய நண்பன், தன்னிடம் இரந்து, செல்வத்தைப் பெறமாட்டான், என நினைந்து, வளத்தை உவந்து , மறைமுகமாய் அளித்தான், மகா பிரபு!
என்னே, அவனின் தயாளகுணம்! என்னே அவனின் பெருங்கருணை! என்னே அவனின் வாத்ஸல்யம்! என்னுடைய தாஸ்ய பக்திக்குத் தம்மையேத் தந்தருளும் அவனின் பேரருள் தான் என்னே! கண்ணா ! கண்கண்ட தெய்வமே! வாசுதேவா! ஜகன்னாதா! ஜனார்த்தனா! என் ஆருயிர் நண்பனே! என அரற்றி, அரற்றி, மெய்சிலிர்த்தேன்!
கதை : பொ.வெ.இராஜகுமார் ஓவியம் : ஷ்யாம் சுந்தர்
add a comment





