சிறுகதை

நல்ல வேளை.. தப்பித்தேன்!

283views
முனைவர் என் பத்ரி
இராம் என்கிற இராமன், சீதாவுக்காக வழக்கமாக அவர்கள் தினமும் வரும் இராமர் கோவிலின் வாசலில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சீதாவுக்காக காத்துக் கொண்டிருந்தான்.
அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகி ஒரு வாரம்தான் ஆகிறது. அவர்களுக்குள் என்னதான் பெயர் பொருத்தம்…. இருவீட்டு குடும்பத்தாரும் ரொம்பவுதான் சிலாகித்துக் கொண்டார்கள். இருவரும் பார்ப்பதற்கு இலட்சனமாக இருப்பவர்கள்.
திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெற்ற அன்று அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம்.அதன்படி தினமும் காலை 8 மணி முதல் 8. 15 வரை இராமன் சீதாவுக்காக ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் அருகிலுள்ள அவளுடைய இஷ்ட தெய்வமான இராமர் கோவிலுக்கு அவளை அழைத்துச் சென்று அவளுடைய வீட்டினில் திரும்பவும் விட்டுச் செல்ல வேண்டும். இராமன் தேவையில்லாமல், இனிமேல் பிற பெண்களுடன் பேசக்கூடாது. இரு வீட்டாரின் ஒப்புதலுடனும் இந்த ஒப்பந்தம் நிறைவேறியது.கையெழுத்து எதுவும் போடாததுதான் பாக்கி…
இராமன் தினமும் இரவு அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்துதான் படுக்கிறான்.அதனால். காலையில் சீக்கிரம் எழுந்து அவனால் குளிக்க முடிவதில்லை.ஒப்பந்தத்தில் இதற்கு இராமனுக்கு விலக்கு கிடைத்து விட்டது. எனவே, அழுக்கு இராமன் கோவிலுக்கு உள்ளே செல்வதில்லை. சீதா மட்டும் அவன் இரண்டுசக்கர வாகனத்தின் பின்னால் சற்று விலகி உட்கார்ந்து கொள்வாள்.இராமனிடம் கார் இருந்தாலும் அதை ஒரு நாளும் ஓட்டி வந்ததில்லை.காரணம் உங்களுக்குத் தெரியாதா என்ன?
சீதாவை பொருத்தவரை இராமன்,’ தான் கொடுக்கும் வாக்குகளில் எவ்வாறு சரியாக நடந்து கொள்கிறான்?’ என்பதை சோதிக்கவே இந்த சோதனை. அவனுக்கான நன்னடத்தை சோதிக்கும் காலமாகும் இது.
இன்று காலை இராமனுக்கு அந்த சோதனைக்காலம்… போலிருக்கிறது.
கோவிலுக்கு உள்ளே சென்றாள் சீதா. போகும்போதே யாருடனோ தொலைபேசியில் பேசினாள். ’யாருடன் ?’என்று யூகித்த இராமன் யாராவது அலுவலகத் தோழியாக இருக்கும் ..’என தன்மனதை ஆசுவாசிப்படுத்திக் கொண்டான்.
மணி 8.05 இருக்கும். சீதாவைப் போன்றே அழகான யுவதி ஒருத்தி அவனுடைய இருசக்கர வாகனத்தின் அருகே வந்து நின்றாள். ’பேருந்துக்கு நேரமாகிவிட்டது. தயவுசெய்து என்னை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடுங்களேன்’ என்று அன்புடன் வேண்டினாள்.
இவனுக்கும் அவளை அழைத்துக் கொண்டு போய் விட வேண்டும் என்ற ஆசைதான். பார்க்க அந்தப் பெண் மூக்கும் முழியுமாக அழகாகத்தான் இருந்தாள். ஆனால் அவசரப்பட்டு, இவன் இப்படி கிளம்பிவிட்டால், உடனே சீதா அப்படி வெளியே வந்து பார்த்துவிட்டால் என்ன ஆகும்? எண்ணும் போதே ரொம்பவும் பயந்து தான் போய்விட்டான். ’வெகு நாட்களுக்குப் பிறகு திருமணம் நிச்சயமான பெண்ணுக்கும் தனக்கும் இடையில் பிரச்சனை வந்து விடுமோ?’ என்ற பயம் அவனுக்கு.
‘வண்டியில் பெட்ரோல் இல்லை.சாரி’ என்று சொல்லி சமாளித்து அவளை அனுப்பி விட்டான். சிறிது தூரத்தில் அந்தப் பெண் யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டே நடந்து செல்வதை இவன் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
அடுத்த 10 நிமிடத்தில் வழக்கமாக வரும் சீதா வந்துவிட்டு, ’போகலாம்’ என்று சொல்லி இருசக்கர வாகனத்தில் அவன் பின்னால் அமர்ந்து கொண்டாள்.
போகும் வழியில் போக்குவரத்து சிக்னலில் இராமன் இருசக்கர வாகனத்தை நிறுத்த வேண்டியிருந்தது. அப்பொழுது அவனைக் கடந்துச் சென்ற அந்தப் பெண் ’இப்பொழுது மட்டும் வண்டியில் பெட்ரோல் இருக்கிறதா?’என்னை விட அவங்க ரொம்ப அழகாக இருக்காங்கா. அதானே விஷயம்.’ என்று அவனைப் பார்த்து கேட்டாலே பார்க்கலாம். ஆடித்தான் போனான் இராமன். ’யார் அந்த பொண்ணுங்க? அவ்வளவு உரிமையுடன் உங்களிடம் பேசுகிறாள்.’ என்று கேட்டுக் கொண்டே இருந்த பொழுது பச்சை நிற சிக்னல் விழுந்தது.

’அம்மாடி தப்பிச்சோம்.’ என்று வண்டியை கிக் செய்து அந்த இடத்தை விட்டு அவசர அவசரமாக புறப்பட்டான். பின்புற கண்ணாடியில் பார்த்தால், சீதா அவளுக்கு கையசைத்து நன்றியை தெரிவித்துக் கொண்டிருந்தாள். இவளும், அவளும் கூட்டுக் களவாணி என்பதை புரிந்து கொள்ள அவனுக்கு வெகுநேரமாகவில்லை.
நல்ல வேலை சீதா வைத்த சோதனையில் இராமன் தப்பித்து விட்டான். ’இனி வரும் காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’என தீர்மானித்த இராமன், சீதா சாதாரணமான ஆள் இல்லை என்பதை மனதில் இருத்திக் கொண்டான்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!