சிறுகதை

திரும்பிப் பார்க்காதே!

370views
முனைவர் என். பத்ரி
முரளி அந்தக் கல்லூரியில் மூன்றாம் வருடம் யு ஜி படிக்கிறான். கமலா அந்தக் கல்லூரியில் முதல் வருடம் யூ.ஜி. படிக்கிறாள். கமலாவும் முரளியும் ஒரே ஊர். அது ஒரு கிராமம். பக்கத்து பக்கத்து வீடு. அவர்களின் பெற்றோர்களும் நண்பர்கள். எனவே தினமும் பேருந்தில் ஒன்றாகத்தான் கல்லூரிக்கு செல்வார்கள். ஒன்றாகத்தான் திரும்புவார்கள்.
கமலா முரளியிடம் அடிக்கடி சொல்லுவாள்’முரளி, வாழ்க்கையில் நீ எப்போதும் திரும்பிப் பார்க்காதே. அது உன்னை பயமுறுத்தும். எதிரே உள்ளவற்றை மட்டும் பார். எல்லாவற்றையும் வெல்லும் ஆற்றல் உன்னிடமே இருக்கிறது.’ ஏன் இதை அடிக்கடி அவனிடம் அவள் சொல்லுகிறாள் என்று அவனுக்கு நெடுநாள் புரியவில்லை.
காலம் போகப் போகத்தான் அவள் இவனை விரும்புகிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டான். நட்பாக இது நாள் வரை பழகிவிட்டு திடீர்னு, ’நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்’னு பெற்றோர்கள் முன்னே போய் நின்றால் அவர்கள் ஆடிப்போய் விடமாட்டார்களா?’இந்த யோசனை இருவர் மனதிலும் ஓடிக்கொண்டே இருந்தது. இருந்தாலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் அவர்கள் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.
அவர்கள் திருமணத்தை மனதில் கொண்டுதான் கமலா இதை அடிக்கடி சொல்லுகிறாள் என்பதை முரளி புரிந்து கொண்டான். இருந்தாலும் புரிந்ததை வெளியில் சொல்லாமல் நடித்துக் கொண்டு வந்தான்.
அன்று அவர்கள் படிக்கும் கல்லூரியில் விளையாட்டுப் போட்டி. ஓட்டப்பந்தய போட்டித் தொடங்கியது. ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முரளி கலந்து கொண்டான். ஒலிபெருக்கி கமலாவின் கையில்தான் இருந்தது. விளையாட்டு விழாவில் அங்கும், இங்கும் இயங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு கட்டளைகளை கொடுத்தும் விளையாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தும் அழகு தமிழில் அந்த அழகான பெண் கமலாதான் பேசிக் கொண்டிருந்தாள்.

ஓட்டப்பந்தயம் தொடங்கியது. முரளி பந்தயத்தில் ஓடிக் கொண்டு இருந்தான். அப்போதுதான் இதையும் சொன்னாள், ’முரளி, நீங்கள் பந்தயத்தில் இரண்டாம் இடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னால் சென்றுக் கொண்டிருக்கும் பாபு 10 மீட்டர் தூரத்தில் முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறார். பின்னால் உங்களைத் தொடரும் குமார் 5 மீட்டர் தூரத்தில் இருக்கிறார். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் வெற்றி பெற வேண்டும். இது உங்களுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும். நாளை இந்த விளையாட்டு போட்டி வெற்றிச் சான்றிதழ் உங்கள் மேல் படிப்புக்கும் வேலைக்கும் உதவும்’ என்று சொல்லிக் கொண்டே போனாள்.
பொதுவெளியில் முரளிக்கு மட்டும் இதைச் சொன்னால் எல்லோரும் தவறாக நினைத்துக் கொள்ளுவார்கள் என்பதை புரிந்து கொண்ட கமலா, அடுத்து வந்த குமாருக்கும் சில ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி சகஜ நிலைக்கு திரும்ப சில நிமிடங்கள் ஆயின.
அளவுக்கு மீறி முரளியின் வெற்றியின் மீது ஆர்வம் காட்டியதற்கு தன்னைத் தானே கடிந்துக் கொண்டாள். கமலாவைக் கடந்து போன புவனா அவளைப் பார்த்து நக்கலாக சிரித்து விட்டுப்போனாள். அவளுக்கும் முரளியின் மீது ஓர் ’இது’ உண்டு. ஆனால் முரளி மனதில் கமலா முழுவதுமாக வியாபித்து இருந்தாளே?
கமலாவின் இனிய குரல் கொடுத்த ஊக்கத்தால் இன்னும் வேகமாக மூச்சை பிடித்துக் கொண்டு ஓடினான் முரளி. ஓட்டப்பந்தயம் முடியும் இடத்தில் தனக்கு முன்னே சென்ற பாபுவை இரண்டு மீட்டர் வித்தியாசத்தில் முந்திச் சென்று முரளி முதல் பரிசு பெற்றான்.
முரளி தன் கண்களாலே தன்னை ஊக்கப்படுத்திய கமலாவுக்கு நன்றி சொன்னான்.’இது முதல் வெற்றி தான். நீங்கள் படிப்பை முடித்து என்னை திருமணம் செய்து கொள்ளும் வரை இந்த வெற்றிக்கான முயற்சி தொடரட்டும்’ என்று அவன் பரிசு வாங்க செல்லும் பொழுது அவன் காதில் கிசுகிசுத்தாள் கமலா.
மிகக் கம்பீரமாக சென்று மேடையில் தனக்கான பரிசை பெற்றுக் கொண்டான் முரளி. இனிமேல் அவன் வாழ்க்கையில் ஏற்றமே தவிர இறக்கமே இல்லை நம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இப்படி ஒரு கமலா அமைந்து விட்டால் நாம் என்றுமே கவலைப்பட தேவையில்லை தானே? கவலைப்படாதீர்கள் உங்களுக்கென்று ஒரு கமலா காத்திருப்பாள்.போய்த் தேடிப் பாருங்கள்.
’கமலா,இதோ வந்துட்டேன்’ன்று காத்திருந்த கமலாவுடன் பேருந்தில் ஏறினான் முரளி.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!