33
த்ரில்லர் சிறுகதை
க.மோகனசுந்தரம்
பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் தணிகாசலம் தனது செல்போன் ஒலிக்கவே எடுத்துப் பார்த்தார்.
வெறும் எண் மட்டும் வந்திருந்தது.
எனினும் எடுத்து ஹலோ..
என்றார்.
Anesthesiologist ( மயக்க மருந்து நிபுணர்) டாக்டர் தணிகாசலம் தானே..?…
எதிர் முனையில்.
எஸ்…ஹோல்டிங் என்றார் தணிகாசலம்.
உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்…
முதலில் நீங்கள் யார் என்று சொல்லுங்கள்…
அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். மேட்டருக்கு வாரேன்..
சரி சொல்லுங்க… என்றார் தணிகாசலம்.
நாளை மறுநாள் பிரபல தொழில் அதிபர் சிவராமனுக்கு செய்யப்படவிருக்கும் இதய அறுவை சிகிச்சைக்கு நீங்க தானே மயக்க மருந்து தருகிற டாக்டர்…?
அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?
ஆமாம்…
இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்..?
அதெல்லாம் கேட்காதீர்கள்.. நாளை நடக்கும் ஆபரேஷனில் நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது அவர் பிழைக்கக் கூடாது.
அதை எப்படி என்னால் தீர்மானிக்க முடியும்..?
டாக்டர் மயக்க மருந்து கொடுப்பதற்கு என்று ஒரு அளவு உண்டல்லவா..?
அதன் அளவை மாற்றி அதிகமாக கொடுங்கள்… யாருக்கும் எந்த சந்தேகமும் வராது.
உங்கள் பெயரும் வெளி வராது.
நான்சென்ஸ் … இதெல்லாம் சொல்ல நீ யாரு என்றார் கோபமாக!
நோ…நோ…டாக்டர் கோபப்படுவதால் எந்த பயனும் இல்லை… என்றான் பேசியவன்.
சொன்னதைக் கேட்டால் நீங்கள் சொல்கிற தொகை உங்களை வந்து சேரும் என்றான்.
இல்லையென்றால்…
ஸ்டுபிட்! யூ ராஸ்கல்…
என்னை யாருன்னு நினைச்ச?டேமிட் இன்னொரு முறை போன் பண்ணுனா போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்!
கூல்…கூல்…
போலீசுக்கு போனா பயந்து விடுவோமா டாக்டர்…
எல்லாத்துக்கும் தயாராத்தான் இதில் இறங்கி இருக்கோம்.
சும்மா பூச்சாண்டி காட்டாதீங்க!
நான் நாளைக்கு போன் பண்றேன்…
நல்லா யோசிச்சு முடிவெடுங்கள்.
ஆத்திரத்தில் போனை கட் செய்தார் தணிகாசலம்.
மறுநாள் காலை 7 மணி
காந்தி பூங்காவில் நடைப்பயிற்சியில் இருந்த தணிகாசலத்தின் போன் ஒலித்தது…
எடுத்துப் பார்த்தார்…
புது நம்பர்…
எடுத்து ஹலோ… என்றார். என்ன டாக்டர் சார் ?
நேற்று சொன்ன விஷயத்தை யோசனை பண்ணிங்களா ? என்ன முடிவு எடுத்தீங்க? எங்களுக்கு சாதகமா பண்ணுனா உங்களுக்கு லாபம் இல்லைன்னா…
இல்லைனா என்னடா செய்வாய்?
என்னைக் கொன்றுவிடுவாயா?
நோ…நோ டாக்டர் உங்களைக் கொன்று எங்களுக்கு என்ன லாபம்?
எங்களுக்கு போக வேண்டியது சிவராமன் உயிர்! அவ்வளவுதான்.
எங்க இருந்துடா பேசுற ? தைரியம் இருந்தா நேர்ல வந்து பேசுடா !
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நம்பர்ல இருந்து கூப்பிடுற!
என்ன டாக்டர் சின்னப் புள்ள மாதிரி…
நேர்ல வந்து
எஸ் யுவர் ஹானர் என்று சொல்லச் சொல்றீங்களா?
இன்று இரவு 7 மணி வரைக்கும் தான் உங்களுக்கு டைம்…
அதற்குள் எங்களுக்கு சாதமாக பதில் சொல்லல…
நடக்க இருக்கும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
போலீசுக்கு போனீங்க…
இன்னும் விளைவுகள் ரொம்ப அதிகமாக இருக்கும்.
என்று எச்சரித்து போனை கட் செய்தான்!
தணிகாசலத்திற்கு என்ன செய்வதென்று புரியவில்லை! போலீசுக்கு போகவும் தயக்கம்.
குடும்பத்தினருக்கு அவனால் எதுவும் ஆபத்து வருமோ என்று பயமும் கூட.
அதே நேரத்தில் அதை எளிதாகவும் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
ஏனென்றால் தொழில் அதிபர் சிவராமனுக்கு நிறைய போட்டியாளர்கள் உண்டு என்பது ஊருக்கே தெரியும்.
அன்று இரவு மணி 6.50.
ஒருவித பரபரப்போடு இருந்தார் தணிகாசலம்.
சரியாக ஏழு மணிக்கு போன் ஒலித்தது !
இப்பொழுது வேற நம்பர்!
ஆனால் அதே குரல்…
என்ன டாக்டர் காயா ? பழமா?
முடியாது….
என் தொழிலுக்கு நான் துரோகம் பண்ண முடியாது.
அதுவும் நான் உயிரைக் காக்குகிற டாக்டர்.
இதை நிச்சயமாக பண்ண முடியாது.
நாளை காலையில் 10:30 மணிக்கு ஆப்ரேஷன் சிவராமன் நல்லபடியாக வருவார்.
உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்..
எதையும் சந்திக்கவும் அல்லது எதையும் இழக்கவும் நான் தயாராகி விட்டேன் என்றார் கோபமாக.
ஓகே…
டாக்டர்
நாளை கந்தசஷ்டி…சிவராமன் நேரா சொர்கத்தில் முருகன் கிட்ட போவார் என்று எதிர்பார்த்தேன்…
பரவாயில்லை…
இனி நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை பொறுத்திருந்து பாருங்கள்… என்று போனை கட் செய்தான்.
மறுநாள் காலை 7.30 மணி. தணிகாசலம் வீட்டில் பூஜையை முடித்துவிட்டு மருத்துவமனை கிளம்பத் தயாரானார்.
அப்பொழுது வாட்ஸ்அப் ரிங்டோன் அடித்தது.
இம்முறையும் புது நம்பர்.
வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து பார்த்தபோது ஒரு வீடியோ டவுன்லோட் ஆகி கொண்டிருந்தது.
வீடியோவை பார்த்தவர் அப்படியே அதிர்ந்து…ஆடிப் போய்விட்டார்.
அப்பொழுது போன் அடிக்கவே…எடுத்து யூ ராஸ்கல் என்றார்.
நோ…டாக்டர் கோவப்படுவதில் எந்த லாபமும் இல்லை.
நான் எவ்வளவு சொன்னேன் கேட்டீங்களா…
இப்போது
போனில் பார்த்தீர்களா? முருகன் கோயிலுக்கு வந்த உங்க மனைவியை கிட்நாப் செய்து விட்டோம்.
கந்த சஷ்டி என்பதால் தினமும் உங்கள் மனைவி கோவிலுக்கு வருவதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து தான் உங்கள் மனைவியை தூக்கினோம் என்றான்.
முடிவு எங்களுக்கு சாதமாக வந்தால்…
அந்த சிவராமனுக்கு நீங்கள் டிக்கெட் கொடுத்தீர்கள்… என்றால் உங்கள் மனைவிக்கு விடுதலை -இல்லையென்றால் ஹா..ஹா…என்று சிரித்தான்.
நீ எப்படி மிரட்டினாலும் சரி.. நான் எதற்கும் அடிபணிய மாட்டேன்.
என் மனைவிக்கு என்ன ஆனாலும் சரி !
நடப்பது நடக்கட்டும்.
நான் எதற்கும் துணிந்து விட்டேன் என்று ஆவேசமாக கத்தினார்.
ஓகே டாக்டர் பார்க்கலாம்… அதையும் பார்க்கலாம் என்றான் அவனும் கோபமாக!
அன்று மதியம் 2:30.
சிவராம கிருஷ்ணனுக்கு நல்லபடியாக ஆபரேஷன் நடந்து முடிந்தது.
போனை எதிர்பார்த்து காத்து இருந்தார் டாக்டர் தணிகாசலம்.
அதே நேரம் போனும் சரியாக ஒலித்தது.
வாட்ஸ் அப் வீடியோ வந்த அதே நம்பர்.
என்ன டாக்டர் ஆபரேஷன் முடிந்ததா? சொல்றவங்களுக்கெல்லாம் சொல்லிவிடச் சொல்லியாச்சா என்றான்.
போடா முட்டாள்…
அவருக்கு நல்லபடியாக ஆப்ரேஷன் நடந்து அவர் நன்றாக இருக்கிறார் என்றார் தணிகாசலம்.
உங்க மனைவிய் பத்தி நீங்க கொஞ்சம் கூட கவலைப்படவில்லை…அப்படித் தானே என்றான்.
என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று கத்தினான்.
டாக்டர் தணிகாசலம் ரொம்ப கூலாக டேய் முட்டாள்…
கேளுடா…
நீ கடத்தியது என் மனைவியே அல்ல.
நீ கடத்தியது யாரைத் தெரியுமா!
நம்ம ஊர் காவல்துறை டிஜிபி மனைவியை.
என்னது…?
இன்னும் கேளுடா எனது மனைவியும் டிஜிபி மனைவியும் ஒன்றாக பிறந்த இரெட்டைச் சகோதரிகள்.
பார்க்க ஒன்று போல தான் இருப்பார்கள்.
நானும் நம்ம ஊர் டிஜிபியும் சகலைகள்.
அவர் மூத்த பொண்ணைக் கட்டி இருக்கிறார்.
இது உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
என் மனைவிக்கு இன்று கடுமையான தலைவலி.
கோவிலுக்கு வர முடியலை.
அவள் வீட்டில் தான் இருக்கிறாள்.
அந்த நேரத்தில் இன்று தான் ஊரிலிருந்து வந்த எனது அண்ணி கோயிலுக்கு வரும் போது நீங்கள் கடத்தி போயிருக்கிறீர்கள்.
நீ அனுப்பிய வாட்ஸ் அப் நம்பரை டிஜிபிக்கு அனுப்பினேன்.
அவர்தான் ஆப்ரேஷன் முடியும் வரை அவர்களுக்கு எதுவும் ஆகாது.
மத்ததை நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் தைரியமாக ஆபரேஷன் செய்யுங்கள்…
அவனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
அவரும் உன் லொகேஷனை கண்டு பிடித்து விட்டார்.
என்னிடம் அங்கே வந்து இருப்பார்.
நீயும் உன் கூட்டாளிகளும் கைது செய்யப்படும் காட்சியைக் கண் குளிர காண காத்திருக்கிறேன்…
போன வைடா… முட்டாள் அடி முட்டாள்.
நானெல்லாம் அச்சம் தவிர் ஆண்மை தவறேல் என்ற பாரதியின் பாடல் படித்து வளர்ந்தவன் டா!
பெட்டர் லக் தென் நெக்ஸ்ட் டைம் என்று போனை கட் செய்து விட்டு கந்த சஷ்டி கவசம் பாட ஆரம்பித்தார் டாக்டர் தணிகாசலம்.
க.மோகனசுந்தரம்
ஊரப்பாக்கம்.
9865782742
add a comment