சிறுகதை

உணர்வுகள்

19views
துர்கா ஐம்பதை கடந்த ஒரு பெண்மணி.  நல்ல கணவர் நல்ல குடும்பம் அவளுக்கு ஒரே மகள் ரம்யா. அந்த மகளும் இப்பொழுது திருமணத்திற்கு ஏற்ற வயதில் இருக்கிறாள்.
ரம்யாவுக்கு நல்லதாக ஒரு வரன் அமைந்தது. பிள்ளை வீட்டுக்காரர்களும் மிகவும் நன்றாக பழகும் இயல்புடையவர்கள். பிள்ளையும் நன்றாக படித்தவர். நல்ல ஒரு தகுதியான குடும்பம் இவர்கள் குடும்பத்திற்கு ஏற்ற மாதிரி அமைந்தது.
தடபுடலாக எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கையில், நிச்சயதார்த்த தேதி குறிக்கப்பட்டு அதுவும் நன்றாக நடந்த காலகட்டத்தில் கல்யாணத்திற்கும் தேதி குறிக்கப்பட்டது. சீரும் சிறப்புமாக கல்யாணத்தை நடத்த வேண்டும் என்பதற்காக துணி வாங்குதல் நகை வாங்குதல் மண்டபம் பார்ப்பது போன்ற அனைத்து ஏற்பாடுகளும் நடத்தப்பட்டது.
கேட்டரிங் காரரிடம் பேசப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இது ஒரு திசையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கையில் திருமணப் பெண் ரம்யாவின் அம்மா வழி பாட்டிக்கு ஓர் இரண்டு மாதங்களாக உடம்பு சரியில்லை. கல்யாண தேதி குறிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாவின் உடல் நலம் குறித்து துர்காவுக்கு சற்று பயமாகத்தான் இருந்தது.
கல்யாணத்திற்கு இன்னும் ஒரே வாரம் தான் இருக்கிறது. அனைத்து சொந்தக்காரர்களும் துர்காவின் வீட்டிற்கு வந்தடைய, திருமண வேலை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கும் பொழுது, தொலைபேசி அடித்தது. துர்காவின் அம்மா இறந்து விட்டதாக செய்தி வந்தது. துர்கா இடிந்துபோய் உட்கார்ந்து விட்டாள். ஏனென்றால் ஒரு வாரத்திற்குள் பெண்ணுடைய திருமணம் இருக்கிறது ஆனால் தன்னுடைய அம்மா இயற்கை எய்திவிட்டார்.
இப்போது துர்காவின் மன நிலை என்னவென்றால் இறந்து போன அம்மாவை தாண்டி கல்யாணம் ஆக வேண்டிய பெண் இருக்கும்பொழுது கல்யாணம் தடைபட்டால் என்ன நடக்கும் என்பதுதான். பாவம் துர்காவின் உணர்வு இங்கே மிகவும் கவலைக்கிடமானது ஏனென்றால் ஒருபுறம் அம்மா மறுபுறம் திருமணம் ஆகவேண்டிய அவளுடைய பெண். பிள்ளை வீட்டுக்காரர்களிடம் கேட்க வேண்டிய பொறுப்பில் இவர்களது குடும்பம் இருக்கிறது. துர்காவின் உணர்வு பெரிய அளவில் சம்பந்தப்பட்டு இருந்தாலும் துர்காவின் உள்ளே இருக்கிற பயம் என்னவென்றால் மாப்பிள்ளையாக வரப்போகிறவர் அந்த குடும்பத்திற்கு தலைச்சன் பிள்ளை ஏதாவது ஒன்று சொல்லி திருமணம் நின்று விட்டால் அது அச்சானியம் ஆகிவிடும் என்பது தான் அவளுடைய மிகப்பெரிய கவலை.
பிள்ளை வீட்டுக்காரர்கள் இது உங்கள் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் நாங்கள் இதில் தலையிட மாட்டோம் நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம் என்ற அளவுக்கு நல்லவர்களாக அமைந்தனர்.
இரவெல்லாம் துர்கா தூங்கவில்லை தீர்க்கமாக யோசித்தாள். அவளது கணவரிடம் கூறினாள், பெண்ணின் திருமணத்தை நடத்துவதற்கு எனக்கு மனப்பூர்வமான சம்மதம் என்றும், வாழ்ந்து முடித்த அம்மாவை தாண்டி வாழவேண்டிய மகளின் வாழ்க்கை தான் முக்கியம் என்ற தீர்க்கமான முடிவை எடுத்தாள். திருமணத்தில், சிரிப்பதற்கு சிரமமாக இருந்தாலும் வாழ்க்கையை வாழ்வது மிகவும் அவசியம். பாட்டிக்கு ரொம்ப செல்லமாக இருக்கும் ரம்யாவுக்கும் இதில் இஷ்டம் இல்லை. ஆனால் பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக அவளும் ஒப்புக்கொண்டாள்.
துர்கா மனதில் நினைத்துக் கொண்டாள், இந்த பேத்தியின் கல்யாணத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைத்த பாட்டி, பேத்தியின் கல்யாணம் நின்று போயிருந்தால் அவளின் ஆத்மா சாந்தியடையாது என்று எண்ணினாள். பாட்டி சொர்க்கத்திலிருந்து ஆசிகள் வழங்க கல்யாணம் இனிதாக நடந்தது.
இப்படித்தான் இந்த வாழ்க்கையே நிலையில்லாதது. அதுவும் இந்த கொரோனா காலத்தில், ஆயிரம் பேர்கள் இருந்து நடத்தவேண்டிய திருமணத்திற்கு வெறும் 30 பேர்தான் வரமுடிகிறது. மரணம் ஜனனம் இரண்டையுமே அதன் போக்கில்தான் விட வேண்டி இருக்கிறது. ஒரு சமயம் இந்த மாதிரி அதிரடி முடிவுகள் உணர்வுபூர்வமாக எடுக்க இயலவில்லை என்றாலும் தீர்க்கமாக யோசித்து இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டியது தான் இருக்கின்றது இந்த நிலையில்லா வாழ்க்கையில். அதுதான் இயல்பானது. தன் தாயின் மரணத்தையும் கடந்து தான் ஒரு தாய் என்பதுதான் துர்காவை இயக்கியது.
ஒரு தாய் இறந்த நேரம் இன்னொரு தாய் பிறந்தாள்.
ஸ்ருதி பிரகாஷ்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!