தமிழகம்

சாத்தூரில், அடுத்தடுத்து 2 கடைகளின் மேற்கூரையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

123views
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள படந்தால் பகுதியைச் சேர்ந்தவர் சமுத்திரராஜ் (58). இவர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் இரும்புப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார். இவரது கடையின் அருகில், வெங்கடாசலபுரம் பகுதியைச் சேர்ந்த அழகுராஜ் (50), இருசக்கர வாகனங்கள் உதிரிபாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். நேற்று இரவு இருவரும் வழக்கம் போல வியாபாரம் முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டனர். இன்று காலையில் சமுத்திரராஜ் கடையை திறந்தபோது, அவரது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு கடையின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருட்டு போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். சற்று நேரத்தில் அழகுராஜ் தனது கடைக்கு வந்து கடையை திறந்தபோது, அவரது கடையின் கூரையும் உடைக்கப்பட்டு கடையில் வைத்திருந்த பணம் மற்றும் பொருட்கள் திருடு போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து இருவரும் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு, விருதுநகரில் இருந்து மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். சாத்தூரின் முக்கிய பகுதியில், எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு கடைகளின் மேற்கூரையை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போன சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!