தமிழகம்

சிவகாசியில், நிருபர் மீது கொடூர தாக்குதல். லேப்டாப், கேமிரா உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து அராஜகம்.

63views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (50). இவர் நியூஸ் தமிழ் செய்தி தொலைக்காட்சியின் சிவகாசி பகுதி நிருபராக வேலை பார்த்து வருகிறார். நேற்று, சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் திருத்தங்கல் பகுதி 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் திமுக கட்சியைச் சேர்ந்த இந்திராதேவி என்பவர், தனது வார்டு பகுதி மக்கள் வீட்டுத்தீர்வை பெயர் மாற்றம் மற்றும் தண்ணீர் வரி பெயர் மாற்றம் செய்வதற்கு மனு கொடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொரு வேலைக்கும் லஞ்சம் கேட்கிறார்கள். எனது வார்டு மக்களுக்காக நான் பணம் தருகிறேன். 1 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எந்த அதிகாரியிடம் கொடுக்க வேண்டும் என்று கூறி, கட்டாக பணத்தை எடுத்துக் காண்பித்து மாமன்ற கூட்டரங்கில் பேசினார்.  இதனை, அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர் வைத்தியலிங்கம் வீடியோவாக எடுத்து தனது நிறுவனத்திற்கு செய்தியாக அனுப்பியுள்ளார். சிவகாசி மாநகராட்சியின், பெண் மேயராகவும், பெண் துணை மேயராகவும் திமுக கட்சியினர் இருந்துவரும் நிலையில், அதே திமுக கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக குரல் எழுப்பிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் நகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள அறை ஒன்றில் வாடகைக்கு வசித்துவரும் நிருபர் வைத்தியலிங்கம் மீது, சில சமூக விரோதிகள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துமீறி அவரது அறைக்குள் புகுந்த ஆசாமிகள் அங்கிருந்த லேப்டாப், கேமிரா உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து தூக்கி வீசிச்சென்றனர். காயமடைந்த நிருபர் வைத்தியலிங்கம் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது குறித்து சிவகாசியைச் சேர்ந்த செய்தியாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரிடமும் புகார் தெரிவித்தனர். நிருபரை தாக்கிய சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. மனோகர் உறுதியளித்துள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!