தமிழகம்

குழந்தைகளே கொண்டாடிய குழந்தைகள் தின விழாவில் மு.முருகேஷ் எழுதிய குழந்தைகளுக்கான கதை நூல்கள் வெளியீடு

83views
புதுக்கோட்டை :
நவம்பர் 14 குழந்தைகள் தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்திலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேனிலைப் பள்ளியில் முழுக்க குழந்தைகளே பங்கேற்றுக் கொண்டாடிய குழந்தைகள் தின விழாவில் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய இரு குழந்தைகளுக்கான இரு கதை நூல்கள் வெளியிடப்பட்டன.
ஆண்டுதோறும் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேனிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தன்று ‘புத்தமில்லா தினமும்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் குழந்தைகள் பள்ளிக்குப் புத்தகங்களைக் கொண்டுவராமல், பள்ளியிலுள்ள நூலகப் புத்தங்களைப் படிப்பது, படித்த புத்தகங்களைக் குறித்து பகிர்ந்துகொள்வதுமாக அன்றைய தினத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பது வழக்கம். இந்த ஆண்டு அதோடு சேர்த்து நூல்கள் வெளியீட்டு விழாவும் நடைபெற்றதே இன்னொரு சிறப்பு.
இவ்விழாவிற்கு பதினோறாம் வகுப்பு மாணவி அ.அ.அட்சயாஸ்ரீ தலைமை ஏற்றார். ஒன்பதாம் வகுப்பு மாணவி ச.தாரிகா அனைவரையும் வரவேற்றார்.  மு.முருகேஷ் எழுதிய ‘எட்டுக்கால் பூச்சிக்கு ஏழு கால்கள்’ மற்றும் ‘படித்துப் பழகு-2’ ஆகிய குழந்தைகளுக்கான கதை நூல்களை பதினோறாம் வகுப்பு மாணவி மா.பா.நெகாசினி வெளியிட, ஒன்பதாம் வகுப்பு மாணவி த.மதுஸ்ரீ
பெற்றுக்கொண்டார்.
இரு நூல்களையும் பற்றிய மதிப்புரைகளை எட்டாம் வகுப்பு மாணவி அகல்யா மற்றும் எட்டாம் வகுப்பு மாணவன் அ.அ.அதியன் ஆகியோர் வழங்கினர்.  நூல்களுக்கு ஓவியம் வரைந்த பள்ளி மாணவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
குழந்தைகளுக்கான கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் முனைவர் இளையராஜா கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். நூலாசிரியர் மு.முருகேஷ் ஏற்புரையாற்றினார்.
விழாவை மிக நேர்த்தியாக ஒன்பதாம் வகுப்பு மாணவி சா.கசானா இஜ்ஜத் தொகுத்து வழங்கினார். நிறைவாக, எட்டாம் வகுப்பு மாணவி சை.அஸ்மித்தா ரிபானா நன்றியுரை கூறினார்.
இவ்விழாவில் பள்ளி முதல்வரும் கவிஞருமான தங்கம் மூர்த்தி, கவிஞர்கள் ராசி.பன்னீர்ச்செல்வன், ஆலங்குடி கே.வெள்ளைச்சாமி, மகா.சுந்தர், முனைவர் ஜா.சலேத், முருகபாரதி, புதுகை புதல்வன், மலையப்பன், ஓவியர் ராசப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாட்டு, பேச்சு, நடிப்பு, படிப்பு என அனைத்திலும் தங்களது திறன்களை வெளிப்படுத்திவரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேனிலைப்பள்ளி மாணவர்களே நடத்திய இந்தக் குழந்தைகள் தின நூல் வெளியீட்டு விழா, உண்மையில் குழந்தைகளைக் கொண்டாடிய ஒரு திருவிழாவாக அமைந்தது எனில் மிகையில்லை.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!