தமிழகம்

சென்னையில் உலகப் புத்தகக் கண்காட்சி பதிப்பாளர்களிடையே கலந்தாய்வு

139views
சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் உலகப் புத்தகக் கண்காட்சி குறித்த கருத்து பரிமாற்றம் நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் தலைமையில் இன்று (23-11-2022 ) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், சென்னையில் முதன் முதலாக உலகப் புத்தகக் கண்காட்சி வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இப்புத்தகக் கண்காட்சி வழக்கம் போல் நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியுடன் இணைந்து நடத்தப்பட இருக்கிறது. இப்புத்தகக் காட்சியில் உலகளவிலிருந்து பல்வேறு நாட்டு பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழில் வெளிவந்த நூல்களை மற்ற மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யவும், வெளிநாட்டு நூல்களை தமிழில் மொழி மாற்றம் செய்யவும் பதிப்பாளர்களுக்கிடையே ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள இந்த உலகப் புத்தகக் கண்காட்சி வழிவகுக்கும்.
நமது தமிழ் இலக்கியங்களை உலகளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இப்புத்தகக் கண்காட்சியின் நோக்கம். அதுபோல் உலக இலக்கியங்களை நம் தமிழில் கொண்டு வரவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதிப்பாளர்கள் தாங்கள் வெளியிடும் நூல்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமல்லாது அயல்நாட்டு மொழிகளிலும் பதிப்பிக்க வழிவகை செய்ய வேண்டும். நமது தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் உலகளவில் போய் சேர வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டு இந்தப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பை தமிழ் பதிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தாங்கள் வெளியிட்ட நூல்களில் சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து, அந்நூல் குறித்த சுருக்கத்தை ஆங்கிலத்தில் தயார் செய்து வருகின்ற உலகப் புத்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தும்போது, அந்நூலுக்கு உலகளவில் வரவேற்பு கிடைக்கும். இதன்மூலம் நமது தமிழ் கலாச்சாரமும், தமிழ் எழுத்தாளர்களும் உலகளவில் சென்றடைவர். அத்துடன் தமிழ் பதிப்பாளர்களுக்கு நல்ல வணிகம் இருக்கும். இதற்கு தேவையான ஆலோசனைகளை உலகப் புத்தகக் கண்காட்சி குழு செய்ய தயாராக உள்ளன. முழு விவரங்கள் சென்னை உலகப் புத்தகக் கண்காட்சி இணையதளத்தில் வெளிவரும். தங்கள் புத்தகங்களை உலகளவில் எடுத்துச் செல்லவிரும்பும் பதிப்பாளர்கள் தங்கள் வெளியீடுகளை இணையதளம் வாயிலாகவோ அல்லது புத்தகக் கண்காட்சி குழு வாயிலாகவோ அரசுக்கு தெரிவிக்கலாம் என்றார்.
சமீபத்தில் நடைபெற்ற ஷார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்ட பதிப்பாளர்கள் ஷாஜகான், புகழேந்தி, இராம.மெய்யப்பன், வேடியப்பன், எழுத்தாளர்கள் நாகா, முத்துகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் அனுபவங்களை இந்நிகழ்வில் பகிர்ந்து கொண்டனர்.
இந்த கலந்தாய்வில் தமிழ்நாடு பாடநூல் நிறுவன இணை இயக்குனர் சங்கர சரவணன், பபாசி தலைவர் வைரவன், மேனாள் தலைவர் காந்தி கண்ணதாசன், ஆழி செந்தில்நாதன் மற்றும் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: இராம.மெய்யப்பன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!