தமிழகம்

சிவகாசி அருகே, தேமுதிக கட்சி சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி – பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்

72views
சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியில், தேமுதிக கட்சி சார்பாக பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, கேப்டன் விஜயகாந்த் நலமாக இருக்கிறார். தேமுதிக கட்சி சார்பில், தமிழர் திருநாளான பொங்கல் விழா எப்போதும் சிறப்பாக நடத்தப்படும். இந்த ஆண்டும் கேப்டனின் விருப்பப்படி இந்த பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் மற்றும் பொது மக்களை கேப்டன் விரைவில் சந்திப்பார் என்று கூறினார்.
பின்னர் தேமுதிக சார்பாக பொங்கல் பரிசு அரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை தொகுப்புகளை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார். முன்னதாக பொங்கல் பரிசுகளை பெறுவதற்கான நபர்களை தேர்வு செய்து, அவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. பிரேமலதா விஜயகாந்த் பொங்கல் தொகுப்பை கொடுக்க ஆரம்பிதத்தவுடன், பெண்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு முன்னே வந்தனர். கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. உடனடியாக 10 பேருக்கு மட்டும் பொங்கல் தொகுப்பை வழங்கிவிட்டு, பிரேமலதா விஜயகாந்த் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். மேலும் பொங்கல் தொகுப்பை பெறுவதற்கு நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தால் அந்த இடமே கூச்சலாக இருந்தது. குழந்தைகள் மற்றும் முதியோர்கள் கடும் அவதியடைந்தனர். தொடர்ந்து கூச்சல் இருந்து வந்ததால், பொங்கல் தொகுப்பு வழங்குவது நிறுத்தப்பட்டது. டோக்கன் கொடுக்கப்பட்டவர்களுக்கு, அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர். இதனையடுத்து பொங்கல் தொகுப்பு பெற வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!