விளையாட்டு

PAK vs WI| ரிஸ்வான், பாபர் ஆசம் சாதனை டி20 சேசிங்- மே.இ.தீவுகளுக்கு பாகிஸ்தான் 3-0 ஒயிட் வாஷ்

62views

கராச்சியில் நேற்று நடைபெற்ற 3வது டி0 போட்டியில் மே.இ.தீவுகள் நிர்ணயித்த 208 ரன்கள் இலக்கை 18.5 ஓவர்களில் பாகிஸ்தான் அனாயசமாக ஊதித்தள்ளி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றியது பாகிஸ்தான்.

ரன் மெஷின் மொகமது ரிஸ்வான் இந்த ஆண்டின் 12வது அதிரடி அரைசதத்தை எடுத்தார். இவர் 45 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 87 ரன்களையும், கேப்டன் பாபர் ஆசம் 53 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 79 ரன்களை எடுக்க இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்காக 15 ஓவர்களில் 158 ரன்களை விளாசித்தள்ளினர். இதனையடுத்து 18.5 ஓவர்களில் 208/3 என்று சாதனை சேசிங்கை செய்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால் அந்த அணி மேலும் பின்னடைவு கண்டது. மொத்தம் 6 வீரர்கள், 3 உதவிப்பணியாளர்களுக்கு கொரோனா. ஆனாலும் நிகலஸ் பூரன் 37 பந்துகளில் 64 ரன்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்கள் எடுத்தது. அருமையாக வீசிவந்த இடது கை ஸ்பின்னர் அகீல் ஹுசைனுக்குக் கொரோனா பாசிட்டிவ். ஷேய் ஹோப், ஆல்ரவுண்டர் ஜஸ்டின் கிரேவ்ஸ் ஆகியோருக்கும் கொரோனா பாசிட்டிவ்.

மைதானத்தில் பவுண்டரி எல்லைகளை கண்ட படி முன்னே நகர்த்தி வைத்திருந்தனர், எச்சில் துப்பினாலே பந்து சிக்சருக்குப் போய்விடும் போல் இருக்கும் குறுக்கப்பட்ட கராச்சி பவுண்டரியில் அனுபவமற்ற மே.இ.தீவுகளின் பந்து வீச்சை பாபர் ஆசம், ரிஸ்வான் இருவரும் குழந்தைப் பிள்ளைகளை ஆடுவது போல் விளையாடினர். பாபர் ஆசமும் ரிஸ்வானும் 6வது சதக்கூட்டணி அமைத்து ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் சாதனையை முறியடித்தனர்.

16வது ஓவரில்தான் கேப்டன் பாபர் ஆசம், ஓடியன் ஸ்மித்தின் ஸ்லோயர் ஒன்னில் கேட்ச் ஆனார். ரிஸ்வான் பூரானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிய போது பாகிஸ்தான் வெற்றிக்குத் தேவை 24 ரன்கள்தான். ஹார்ட் ஹிட்டர் ஆசிப் அலி 21 நாட் அவுட், இவர் 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் விளாசி 7 பந்துகள் மீதமிருக்கும் போது வெற்றியைச் சாதித்தார்.

முன்னதாக ஹாரிஸ் ராவுஃப், ஷாகின் அஃப்ரீடி ஆகியோர் இல்லாததை வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாகப் பயன்படுத்தியது. ஷமர் புரூக்ஸ் (49). பிராண்டன் கிங் (43) சேர்ந்து 6 ஓவர்களில் 66 ரன்களை விளாசினர். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் 49 ரன்கள் வாரி வழங்கினார். பூரான் 37 பந்துகளில் 64 விளாசினார், பாகிஸ்தானின் புதிய பவுலர் ஷாநவாஸ் தஹானி தன் 4 ஓவர்களில் 1 பவுண்டரியையே கொடுத்தார். மொத்தமே இவர் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!