தமிழகம்

நெல்லை சதக் கல்லூரியில் நூலகத்துறை நிறைவு விழா கருத்தரங்கம்; கல்வியாளர்கள் பங்கேற்று சிறப்புரை

138views
நெல்லை பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் “நூலகத்துறை நிறைவு விழா கருத்தரங்கம்” நடந்தது. இதில் கல்வியாளர்கள் பலர் பங்கேற்று உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில், தென்காசி வட்டார மைய நூலகத்தின் நல்நூலகர் சூ. பிரம நாயகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். அப்போது மாணவ மாணவிகள் தலைசிறந்து விளங்கிட விடாமுயற்சி அவசியம் என குறிப்பிட்டார். பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை மற்றும் மத்திய நூலகம் சார்பில் “நூலகத் துறை நிறைவு விழா கருத்தரங்கம்” 28.04.2023 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கல்லூரியின் அனைத்து இளங்கலை நூலகத்துறை மாணவ மாணவிகள் மற்றும் நூலகவியல் சான்றிதழ் படிப்பில் பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.எம்.அப்துல் காதர் தலைமை வகித்தார். துணை முதல்வர் முனைவர். எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது காஜா முன்னிலை வகித்தார். இவ்விழாவில் கல்லூரி நூலகர் முனைவர். இரா.இரா. சரவணக்குமார் வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது உரையில், மாணவர்கள் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கை, உழைப்பு போன்றவற்றில் நம்பிக்கை வைத்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்றார். கல்லூரியின் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையின் தலைவர் முனைவர் எம்.பாத்திமா பீவி பேசுகையில், எந்தவொரு விஷயத்தையும் மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் செய்தால் வெற்றி நிச்சயம் என்றார்.
தென்காசி வட்டார மைய நூலகத்தின் நல்நூலகர் சூ. பிரம நாயகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் “தற்போது தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சியினைச் சிறப்பாக நடத்தி வருகின்றது. மேலும், மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் தவிர தென்காசியில் சுமார் 6 கோடி செலவில் மிகப் பெரிய அளவிலான மாவட்ட மைய நூலகம் கட்டப்பட உள்ளது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே டிஜிட்டல் நூலகம் ஒன்று அமைய உள்ளது. திருநெல்வேலியிலும் கலைஞர் நூலகம் கட்ட அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு அதுவும் பரிசீலனையில் உள்ளது. இந்த நூலகங்கள் அனைத்திலும் நூலகவியல் பயிலும் மாணவ மாணவியருக்கு பணிக்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. எனவே, மாணவர்கள் அனைவரும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் வேண்டும் என்றார். நூலகத்துறையில் சாதித்த நூலகர் பாலம் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது கொடுத்து மத்திய அரசு கௌரவித்துள்ளது. இதனைப் போன்று அனைத்து மாணவ – மாணவியரும் தலைசிறந்து விளங்க கடுமையாக முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.
முன்னதாக கல்லூரியின் நூலகத்துறை மாணவர் எம்.பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். நூலகத்துறை மாணவி கே. சுப்புலெட்சுமி நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை நூலகத்துறைத் தலைவர் முனைவர்.எம். பாத்திமாபீவி, நூலகர் சரவணக்குமார் மற்றும் உதவி நூலகர் ஜாஸ்மின் ஜமி, நூலக உதவியாளர்கள் பஷீர் அகமது, இம்ரான், கௌபா, அப்சர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். மாணவர் பாலச்சந்தர் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!