தமிழகம்

காரைக்கால் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து துவங்குகிறது.

37views
காரைக்கால் துறைமுகத்திலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறைக்கு ஏப்.29 முதல் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட உள்ளது.
சிக்கலான பல சர்வதேச அரசியல் காய்நகர்தலின் அடிப்படையில் இந்திய அரசு 44.5 மில்லியன் டாலர் செலவில் இலங்கையின் காங்கேசன்துறை துறைமுக புனரமைப்புக்கு வழங்கியுள்ளது.
இந்த கப்பல் போக்குவரத்து மூலம் இரண்டு பகுதியிலும் பலதரப்பட்ட வணிகமும் சுற்றுலா தொழிலும் பெருக வாய்ப்புள்ளதை நாம் கூர்ந்து கவனிக்க கடமைப்பட்டுள்ளோம்.
வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக கடலூர், பரங்கிப்பேட்டை, திருமுல்லைவாசல், காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம்,தோப்புத்துறை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரைப் பட்டினங்கள் இலங்கை மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் முதன்மை நகரங்களாக விளங்கியதை வரலாற்று அறிவுள்ள மக்கள் தங்களது நினைவுகளில் இன்றும் ஆதங்கமாக வைத்துள்ளனர்.
அந்த மகத்தான கடல் வாணிப காலத்தின் மிச்சம் சொச்ச அடையாளங்கள் அந்தப்பகுதி முஸ்லிம்கள் சிலரின் பெயர்களிலும் குடும்ப பாரம்பரியத்திலும் மட்டும் தான் இப்போது ஒட்டிக் கொண்டிருக்கிறது.
அந்த வரலாற்று நினைவுகளை நெஞ்சில் சுமந்து இப்போது துவங்கப்பட இருக்கும் காரைக்கால் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்தின் மூலம் கிடைக்க இருக்கும் தொழில் வணிக வாய்ப்புகளை மிகச் சரியாக கண்டறிந்து நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
55 கடல் மைல் தூரம். 4 மணிநேர பயண நேரம். சுமார் ஐந்தாயிரம் ரூபாய் தான் கட்டணமாக இருக்கும். நூறு கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்லலாம்.
ஜவுளி காலணிகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட தமிழக உற்பத்தி பொருட்கள் அனைத்துக்கும் இலங்கையில் தேவை இருக்கிறது. அதேபோன்று இலங்கையின் உற்பத்தி பொருட்கள் அனைத்துக்கும் தமிழகத்தில் நல்ல சந்தையிருக்கிறது.
வாய்ப்புகள் எல்லோருக்கும் பொதுவானது. சரியான வியூகத்துடன் கூட்டு முயற்சியாக வணிகம் செய்பவர்களால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்.
ஆரம்பகட்டமாக இருப்பதால் ஒரு கவன ஈர்ப்புக்காக மட்டும் தான் இதை எழுதுகிறேன். கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டு அது எப்படி முன்னெடுக்கப்படுகிறது என்பதை பொருத்தே மேலதிக வாயப்புகள் பற்றிய விவரங்கள் தெரியவரும்.
இந்த கப்பல் போக்குவரத்தை துவங்குவதின் மூலம் பலருக்கு பலவிதமான சமூக அரசியல் பொருளாதார சூழ்ச்சிகள் மற்றும் உள்நோக்கங்கள் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
நாம் என்ன செய்ய வேண்டும்….?
இந்த கப்பல் போக்குவரத்து மூலம் பெருக இருக்கும் வணிக வாய்ப்புகளையும் அதற்கான சட்டதிட்டங்களையும் சாதக பாதகங்களையும் துல்லியமாக ஆராய்ந்து அவற்றை துறைசார்ந்த தொழில் திட்டங்களாக வடிவமைத்து தொழில் ஆர்வமும் நேர்மையுமுள்ள உம்மத்தின் இளைஞர்களுக்கு பயிற்றுவிக்கும் ஒரு அறிஞர்கள் குழு வேண்டும்.
தமிழகம் இலங்கை ஆகிய இரண்டு தரப்பு வணிகர்களும் நம்பிக்கை மற்றும் இஸ்லாமிய உடன்படிக்கையின் அடிப்படையில் இயங்கினால் இரண்டு தரப்பும் மேன்மையடையும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!