தமிழகம்

கப்பலூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்திச் சென்ற சென்னையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரை பெண் உட்பட டோல்கேட் ஊழியர்கள் 4 பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

43views
சர்ச்சைக்குப் பெயர் போன திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை உள்ளூர் வாகன உரிமையாளர்கள் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில்., அவ்வப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகன ஓட்டிகளை தாக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் இன்று சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர்கள் விடுமுறைக்காக திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக கோவில்பட்டி, விருதுநகர் நான்கு வழி சாலை வழியாக திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்த போது பாஸ்ட்டேக் 4 வதுபாதையில் இயந்திர கோளாறு காரணமாக பிரபு வாகனத்தை மூன்றாவது பாதைக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளனர். அப்போது மூன்றாவது பாதைக்கு பிரபு காரை எடுத்து சென்றார் அங்கு அவரின் கார் முன்னால் நின்றிருந்த வாகனம் பாஸ்ட் டேக் கணக்கில் பணம் இல்லாததால் வெகு நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் அந்த வாகனம் புறப்பட்டுச் சென்றது. அதனைத் தொடர்ந்து சென்ற பிரபுவின் வாகனம் பாஸ் டேக் கட்டணம் எடுப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கட்டணம் எடுக்கப்பட்ட பின்னர் வெகு நேரம் கார் நிறுத்தி வைக்கப்பட்டதால் சுங்கச்சாவடி ஊழியர்களை பிரபு சத்தம் போட்டதாக கூறப்படுகிறது சத்தம் போட்டு விட்டு அங்கிருந்து வாகனத்தை எடுக்க முற்பட்டபோது சுங்கச்சாவடி பெண் ஊழியர் ஒருவர் பிரபுவை தகாத வார்த்தைகளால் திட்டி வாகனத்தை நிறுத்துமாறு அங்கிருந்த ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
பெண் ஊழியர் தகாத வார்த்தையால் திட்டியதால் பிரபு காரில் இருந்து கீழே இறங்கி சுங்க சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது திடீரென சுங்கச்சாவடி ஊழியர்கள் பிரபுவை தாக்கி உள்ளனர். இதை தடுக்க முற்பட்ட பிரபுவின் குடும்பத்தார் மீதும் சுங்க சாவடி பெண் ஊழியர் உட்பட நான்கு பேர் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சென்னையைச் சேர்ந்த பிரபு மற்றும் அவர் குடும்பத்தாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை பின்னால் வாகனத்தில் வந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தற்போது சம்பவம் தொடர்பான காட்சி வைரல் ஆகி வருகிறது தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளான விதிமுறைக்கு புறம்பாக செயல்படும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற தமிழக அரசும்,மத்திய அரசும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது திருமங்கலம் பகுதி வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!