தமிழகம்

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கன்னடத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை போற்றுவோம்! வாழ்த்துவோம்! : கோவையில் நடைபெற்ற ஆட்சிமொழிச் சட்டவார விழாவில் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!

49views
கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டவார விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு நிகழ்வாக 26.12.2024 அன்று காலை 10.30 மணிக்கு சூலூர் பேரூராட்சி அலுவலகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் முனைவர் இரா. அன்பரசி வரவேற்றுப் பேசினார். சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் சோலை பா. கணேசு ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
மேனாள் மாவட்ட நீதிபதியும் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினருமான நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 12.12.2024 அன்று ஆங்கிலம் மட்டுமின்றி கன்னட மொழியிலும் தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதிகள் கிருஷ்ணா எஸ். தீட்சித் மற்றும் சி.எம்.ஜோஷி ஆகியோரை போற்றுவோம்! வாழ்த்துவோம்! என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:-
உலகத்தில் ஏறத்தாழ 6800 மொழிகள் இருப்பதாகவும் அவற்றில் பல மொழிகள் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் 1961ல் 1100 மொழிகள் இருந்தன என்றும் அதில் 220 மொழிகள் அழிந்துவிட்டன என்றும் மொழியியல் குறித்த அறிக்கை பதிவு கூறுகிறது.
உலகம் முழுவதும் வாழுகிற கிரேக்கர்கள் தங்கள் குழந்தைகளை கிரேக்க மொழியைப் படிக்க வைக்கிறார்கள் விடுமுறையில் தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்று தங்கள் கலாச்சாரத்தை கற்றுக் கொடுக்கிறார்கள்.
தற்போது தொழில் ரீதியாக சீனர்களும், ஜப்பானியர்களும் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கே எந்த நிலையில் வாழ்ந்தாலும் தங்கள் மொழியையும், கலாச்சார அடையாளத்தையும், இழக்காமல் பாதுகாத்து வருகிறார்கள். தங்கள் நாட்டில் இருந்து மொழி அறிஞர்களை அவர்கள் வாழுகிற நாடுகளுக்கு வரவழைத்து தாய் மொழியை கற்றுக் கொடுக்கிறார்கள். அதுதான் அவர்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்ற போராட்டம் நூறாண்டுகளுக்கு மேல் நடந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக ஆட்சி மொழிச் சட்டம் 27.12.1956 அன்று நிறைவேற்றப்பட்டு 19.1.1957 அன்று ஆளுநரின் இசைவு பெற்று, 23.1.1957 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சி மொழிச் சட்டம் 1956 இல் நீதிமன்றங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
அதன் பிறகு இராமாயி எதிர் முனியாண்டி என்ற உரிமையியல் வழக்கில் இராமநாதபுரம் மாவட்ட முன்சீப் தீர்ப்பை தமிழில் எழுதியுள்ளார்.  இவ்வழக்கில் தோற்ற பிரதிவாதிகள் தீர்ப்பு தமிழில் வழங்கப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் அத்தீர்ப்பு செல்லாது எனக்கூறி இராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சார்பு நீதிமன்றம் தமிழில் இருந்த தீர்ப்பை ரத்து செய்து ஆங்கிலத்தில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்சீப் நீதிமன்றத்திற்கு வழக்கை திருப்பி அனுப்பி இருக்கிறது.
அதனை எதிர்த்து வாதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட முன்சீப்புக்கு தமிழில் தீர்ப்பு வழங்க அதிகாரம் இல்லை என்று கூறியதோடு சட்டத்தின் அடிப்படையில் பார்க்கும் போது 1969களின் அரசியல் சூழலால் உந்தப்பட்டு இத்தீர்ப்பினை முன்சீப் தமிழில் எழுதியிருப்பதாகவும், தமிழில் இருப்பதால் இந்தத் தீர்ப்பு, தீர்ப்பே இல்லை என்றும் காகித குப்பைக்கு சமமானது என்றும் கூறி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதன்பிறகு உரிமையியல் மற்றும் சார்பு நீதிமன்றங்களில்  ஆட்சிமொழி மற்றும் அலுவல் மொழியாக தமிழை அங்கீகரித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சி மொழி என்று அறிவிக்கப்பட்ட பின்னர் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுத ஒருசில கீழமை நீதிமன்ற நீதிபதிகள் வைத்த கோரிக்கையால் சென்னை மாண்புமிகு உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் கே.ஏ. சாமி அவர்கள் காலத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
1957 இல் தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வந்ததற்கு பிறகு 1976 இல் இருந்து குற்றவியல் நீதிமன்றங்களிலும் 1982 லிருந்து உரிமைகள் நீதிமன்றங்களிலும் தமிழ் ஓரளவு ஆட்சி மொழியானது.
ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் வரவேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்தோடு கூடுதல் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 342(2)இன் கீழ் அந்தந்த மாநில சட்டமன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றினால் அதன் அடிப்படையில் அந்த மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரின் இசைவுடன் அந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வரையறை செய்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 இல் நடைமுறைக்கு வந்த 18 நாட்களுக்குள் ராஜஸ்தான் மாநிலம் இந்தி மொழியை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அறிவித்தது. அதனை தொடர்ந்து உத்தர பிரதேசமும், மத்திய பிரதேசமும், பீகார் மாநிலமும் தங்கள் உயர் நீதிமன்றங்களில் ஆட்சி மொழியாக இந்தியை அறிவித்துக் கொண்டன. அதற்கெல்லாம் அந்தந்த மாநில ஆளுநர்கள் குடியரசுத் தலைவரின் இசைவுடன் அனுமதி அளித்துள்ளனர்.
ஆனால், 6.12.2006ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏக மனதாக ஒரு நிறைவேற்றப்பட்டு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழில் வரவேண்டும் என்று தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை.  அதேபோல கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக வங்காள மொழி இருக்க வேண்டும் என்று மேற்கு வங்காள சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கடந்த 12.12.2024 அன்று தாங்கள் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை என்று கூறி தீர்ப்பை ஆங்கிலத்திலும் கன்னட மொழியிலும் வழங்கியிருக்கிறார்கள்.
நஞ்சாவுதூத சுவாமிஜி //எதிர்//லிங்கண்ணா என்ற உயில் அடிப்படையிலான வழக்கில் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் மற்றும் நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங்கிய ஈராயம் அமர்வில் (டிவிஷன் பெஞ்ச்), மாநில மொழிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்த்தி
இருக்கிறார்கள். நீதிமன்ற தீர்ப்புகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் சாதாரண குடி மக்களை அந்நியப்படுத்துகிறது என்றும் கன்னடம் வாழ வேண்டுமானால் அதற்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு தாங்கள் இந்த தீர்ப்பின் மூலம் புதிய போக்கை அமைக்க விரும்புகிறோம் (if Kannada is to survive it must be given its do you recognition we want to set a new trend) என்று அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆட்சி மொழிக் கருத்தரங்கம் நடைபெறுகிற இந்த நேரத்தில் கர்நாடக நீதிபதிகள் கிருஷ்ணா எஸ். தீட்சித் மற்றும் சி.எம். ஜோஷி ஆகியோரை போற்றுவோம் வாழ்த்துவோம்.
அந்த நீதிபதிகளின் உணர்வை நாமும் பெற வேண்டும்.  காரணம், எந்த ஒரு மனிதனும் தனது எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு, முழுமையாக புரிந்து கொள்வதற்கும் அவனது தாய்மொழி மட்டுமே மிகச்சிறந்த வழியாக இருக்கும்.
உலகப்புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரும், கவிஞருமான ரசூல் கம்சதோவ் தனது தாய்மொழியான “அவார்”மொழி நாளை அழியும் என்றால் நான் இன்றே இறந்துவிடுவேன் என்று எழுதியிருக்கிறார்.
நமது தாய்மொழியான தமிழைப் காப்பாற்றி வளர்ப்பதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும். காரணம் ‘தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல, அது நமது அடையாளம், நமது உணர்வு, நமது உயிர்’ என்று பேசினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!