கவிதை

உலகச் சிரிப்பு தினம்…!

12views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
விலங்குகளின்றும்
வித்தியாசமாக இறைவன்
மனிதனுக்குச் செய்த
பெருங்கருணை இதுதான்…
பூக்களோடு
பொருத்திப் பார்க்கும்
ஒரு புண்ணியார்த்தமம்….
உலகில் மனிதனை
அடையாளப்படுத்துகின்ற
அலங்கார ஆசனம்….
சிலரைப்
பார்த்த உடனேயே
மனதில் பச்சென்று
ஒட்டிக் கொள்கிற
ஓர் இச்சை சுவாசம் …
சிலரைப்
பார்த்த உடனே
பக்கத்தில் நெருங்காமலே
விலகிப் போகவும்
மனம் எண்ணுகிறது….
புன்னகை
வஞ்சகனுக்கும்
கை வருகிறது…
வள்ளல்களுக்கும் வருகிறது
எல்லோருக்கும் வருகிறது…
மென்மையானவர்களால்
குழந்தைகளாலும் முடிகிறது
முகத்தின் புன்னகைக்
கதவுகளை திறக்கும்போதே
ஆயிரம் அர்த்தங்கள்
உலகுக்குக் கிடைக்கிறது…
புன்னகைக்கென்று உயிரிருந்தது …
புன்னகை என்றால்
ஒரு சுகம் இருந்தது…
ஆனால் அது
இப்போதெல்லாம்
மெல்ல மெல்லச்
சிதைந்து வருகிறது….
மனிதர்களை புன்னகைப்
பூக்க வைக்கும்
சிசுக்களைக் கருவிலேயே
கொன்று விடுகிறார்கள்…
உயிர்களை
இரக்கமின்றியே
கொளுத்தி விடுகிறார்கள்….
அங்கங்கே
பள்ளிவாசல்களை
இடித்து விடுகிறார்கள்….
தேவாலயங்களைத் தகர்த்து
சொரூபங்களைச்
சிதைத்து விடுகிறார்கள்…
ஆனாலும்
ஆன்மீகக் காவலர்போல்
அறப்பணிகளை
அறிவித்து விடுகிறார்கள்….
இப்போது
பல் முளைக்காத
மூன்றாம் வகுப்பு
ஐந்தாம் வகுப்பு
எட்டாம் வகுப்புக்கும்
பொதுத்தேர்வுகள் எழுதி
பிள்ளைகளை எப்போதும்
சிரிக்க விடாமலேயே
பற்களைப்
பிடுங்கி விடுகிறார்கள்….
வேறென்ன ?
அறிஞர்கள் அன்று
கல்விகளைக் கொண்டு குழந்தைகளை
செதுக்கச் சொன்னார்கள்…
இவர்களோ
கல்வியைப் பிடுங்கி குழந்தைகளைச்
சிதைக்க வைக்கிறார்கள்
எப்படி வரும் புன்னகை?

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!