24views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
புன்னகைகளைக் கொண்டும்
புத்துணர்வுகள்- மனங்களின்
புரிந்துணர்வுகளைக் கொண்டும்
புதுப்பிக்கப்படுகின்றன
மானுட நேயத்துக்கான
மகத்தான பொழுதுகள் ….
எந்தச் சங்கிலிகளைக் கொண்டும்
சத்தியங்களைக்
கட்டிப் போட வேண்டிய தேவையில்லை….
புறாக்களின்
சிறகுகளைப் போல அவை
மிக மிக மென்மையானவை…
மனிதாபிமானச் சிறகுகள்
வானங்களின் எல்லைகளைத்
தொட்டு விடுகின்றன ….
எல்லாப் பூஞ்சோலைகளுக்குள்ளும்
புன்னகை மலர்ந்திருப்பதைப் போல
மனிதன் கால் வைக்கும்
எல்லா தலங்களுக்குள்ளும் எப்போதும்
கண்ணுக்குத் தெரியாத கண்ணியம்
கை நனைக்கிறதுதான்
ஆனால்
மத எல்லைகளுக்குள்
அதனை
நிறுத்தப்பார்ப்பவர்கள்
அல்லது
நிறுத்துப் பார்ப்பவர்களாலும்தான்
தேசம் தீ பிடிக்கிறது…
அவரவருக்கான உணவு
விதிக்கப்பட்டுவிட்டது…
எடுத்துண்ண வேண்டியது
மட்டும் தான் வேலை…
எல்லா உயிர்களுக்குள்ளும்
ஜோதியின் சுடர்…
எல்லா மனிதருக்குள்ளும்
சுவனத்தின் வேர்…
எல்லா ஆன்மாக்களுக்குள்ளும்
பூரணத்தின் சிறு துளி…
பூக்களைக் கொண்டுதான்
புன்னகைகள் …
அதை ஏன்
புல்லட்டுகளில் தேடுகிறீர்கள்?
கண்களில் ஈரம்
கருணைகளின் சுரப்புத்தான் …
ஈரங்களை ஏன்
இரத்தத்தில் நனைக்கிறீர்கள்
எங்கேயும் எப்போதும்
ஓர் உயிர் என்பது
ஓர் உயிர்தான்….
add a comment