16views
அத்தாவுல்லா
நாகர்கோவில்.
ஒரு பிடி சோற்றுக்கும்
ஒரு சின்னப் பொருளுக்கும்
ஆசைப்படும்
ஆசாபாசங்களிலிருந்து
இந்த உலகம் இன்னும்
முழுதுமாக விடுபடவே இல்லை…
வாழ்வைப் பிரசவித்த உலகம்
ஆசைகளைக் கொண்டு
மானுடத்தைப் போர்த்துகிறது…
மானுடத்தின் மேல் தேசங்கள்
வரிகளைப் போட்டு
மூச்சு முட்ட வைக்கிறது….
சுமந்து திரியும்
சமாதானத்தின் எடைகளில்
எல்லாவற்றையும்
விஞ்சி விடுகிறது
வெண்புறாக்களின்
வான்தொடும் சிறகுகள்…
எங்கெல்லாம் புறாக்கள்
பறக்கின்றனவோ
அங்கெல்லாம் சமாதானம்
சிறகு விரிக்கிறது …
ஆனாலும்
இந்தப் புறாக்களின்
சிறகுகளை
எங்கிருந்தோ
பறந்து வந்து
சிதைக்கப் பார்க்கின்றன
கனத்த
இரும்புத் துண்டுகளின்
புல்லட்டுகள்….
காயம் பட்டால்
காணாமல் போய்விடும்…
சிறகுகள் மட்டுமல்ல
சிறகுகளைச்
சுமந்து இருக்கும்
சின்னச்சின்ன தேசங்களின்
பொருளும்தான்
பொருளாதாரம்தான் ….
கட்டுப்படுத்தப்பட முடியாத
காட்டு மாடுகளாய்
வளர்ந்து விட்ட பெருமிதத்தில்
வல்லரக்கர்களாய் நிமிர்ந்து
புறாககளின் சிறகுகளை
சிதைக்கப் பார்க்கிறார்கள்
பசும்புல்லின் இதழ்களை
பொசுக்கப் பார்க்கிறார்கள்
சில வல்லரக்கர்கள் …
தங்கள் வலிமையின்
திறமை காட்ட இவர்கள்
தேர்ந்தெடுப்பதெல்லாம்
வளர்ந்து வரும் தேசங்களின்
பொருளாதாரங்களில்தான் …
நீ பெரியவனா
நான் பெரியவனா
என்கிற சர்ச்சைகள்
சின்னச் சின்ன
விஷயங்களில் ஆரம்பிக்கின்றன…
எல்லாவற்றையும்
தங்களுக்கு
சாதகமாக்கிக் கொண்டு
சிறைக்கதவுகளுக்குள்
சின்னக் கம்பிகளை
பொருத்துவதைப் போல
தந்திர நுட்பங்களில்
தேச எல்லைகளை விரிவாக்குகின்றன…
மற்றவர் கோள்களிலும்
கால் வைக்கும்
எல்லைகளாகின்றன…
வரிகளுக்கு மேல் வரிகளைப் போட்டு
மக்களை மூச்சுத் திணற வைகக்கும்
இந்த இரண்டாம் கெட்டான்
பொருளாதாரப் போராட்டம்
உலகின் மூச்சுக்காற்றையே
நிறுத்தி விடப்போகிறது…
ஒவ்வொன்றாக ஆரம்பிக்கிறார்கள்
இறுதியில் அது
அணுகுண்டில் வந்து நிற்கிறது…
அதன் தொடக்கம் தான்
இன்று வணிகத்தில் ஏற்படுகின்ற
வரி உயர்வுகள்…
சிக்கல்கள்…
சீரழிவுகள்… விபரீதங்கள்…
பொருள் மட்டுமே குறிக்கோள்.
யாருக்கும் தேவையில்லை
மக்கள் மகிழ்ச்சியும்
மானுடமும்…
மனித நேயமும்….
add a comment