7views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
கதவுகள் திறந்து வைத்துப் பேசினாலும் சரி
மூடி வைத்து ஏசினாலும் சரி
உங்கள் மனசாட்சிகளை மட்டும்
எப்போதும் பத்திரமாகக்
கழற்றி வைத்து விடுகிறீர்கள்…
மனிதர்களைக் கொன்று
மாடுகளைப் போற்றுகிற
நாட்டின் சட்டங்களால்
அரசியல் சட்ட திருத்தங்கள்
அதோகதிகள் ஆகி விடுகின்றன
புனிதங்களின் மேல்
போர்வைகளையும் தார்ப்பாய்களையும்
போட்டு மூடிவிட்டு
இங்கே ஒரு தரப்பார்
பிரார்த்தனை நேரங்களையே
மாற்ற வேண்டி இருக்கிறது…
மானுடரை சமம் என்னும்
மார்க்க போதனைகள் மறுத்து
வானரங்களோடும் வனமிருகங்களோடும்
வாழப்பழகிவிட்ட நீங்கள்
நரமாமிச அகோரிகளைப்போல
மானுடம் இழந்து வருகிறீர்கள்…
அன்பும் கருணையும்
மனிதமும் நட்பும்
இரத்தத் தீட்டுகளைப்போல
கங்கை யமுனையில்
கரைக்கப்படுகின்றன…
பகுத்தறிவு என்பதே சிறிதும்
இல்லாத செல்லரித்தச்
சிறு புழுக்களின்
சீழ் பிடித்த சிந்தனைகளை
மதங்களின் பெயரால்
மகத்தானதாய் போற்றுகிறீர்கள் …
பாபரி மஸ்ஜிதைக்
களவாடி விட்டும்
முஸ்லிம்கள் நலன்
என்று தான் சொன்னீர்கள்…
முத்தலாக் பர்தாவுக்கும்
அதே ஒப்பாரிதான் ..
இப்போதும் அதுதான் …
எங்களுக்காக
இவற்றை செய்யச் சொல்லி
யார் உங்களிடம் அழுதார்கள்?
ஒரு தரப்பாரைக் குறிவைத்தே
உங்கள் அம்புகள்
எய்யப்படுகின்றன…
ஒரு தரப்பாருக்கான
நீதிகள் மட்டுமே
உங்கள் மன்றங்களில்
பேசப்படுகின்றன…
கோவில் இறையில்லம்
தேவாலயம் என்று
ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுக்கும்
தனித்துவம் உண்டுதான்..
உனக்குரியவை உனக்கும்
எனக்குரியவை எனக்கும்
என்பதுதான் பொதுநீதி …
உனக்குள்ளதும்
அவனுக்குள்ளதும்
எனக்குள்ளதும் எல்லாம்
எனக்கு என்பது என்ன நீதி?
சிவன் சொத்தே குல நாசமாம்…
நீங்கள் –
அவன் சொத்துக்கே
ஆசைப்படுகிறீர்கள்…
உங்கள் மனம்
நாசமாகிவிட்டது
உங்களால் இந்த நாடும்
நாசமாகி விடக்கூடாது…
இந்த நிலம்
எல்லோருக்குமானது
இந்த நாடும்
நாசமாகி விடக்கூடாது…
ஆனாலும் எப்போதும்
ஒன்று மட்டும் நடந்து கொண்டே
இருக்கிறது …
எத்தனை அதர்மங்கள் நடந்தாலும்
அத்தனை அதர்மங்களையும் தாண்டி
ஒரு தர்மம் மட்டும்
எப்போதும் பிழைத்து வருகிறது …
அது அத்தனை அதர்மங்களையும்
பின்னர் அடித்து
துவைத்து போட்டு விடுகிறது…
காலம் கொஞ்சம் எடுக்கலாம்
என்றாலும்
உங்கள் அழிவு நிச்சயம்…
add a comment