20views
நிஜங்கள் எல்லாம்
நிழலாய் மாற
நிகழ்வுகள் என்றும்
மனதினுள் சேர
காலம் கடந்து
உண்மை விளங்க
கலைந்த கனவால்
கண்கள் கலங்க
வாழ்க்கை என்பதோ
குறுகிய வட்டம்
வாழும் நாட்களில்
எதற்கு வாட்டம்
தேவை எதுவோ
அதனைத் தேடு
தேகம் கூட
மறையும் கூடு
இருக்கும் நிமிடம்
உனதென நம்பு
இருப்போர் இடத்தில்
பகிர்ந்திடு அன்பு
வேண்டும் வேண்டாம்
என்ற சிந்தை
மாய வலையை
அறுக்கும் விந்தை
தெளிந்த மனமும்
புரிந்த குணமும்
வாழ்வில் நம்மை
வாட விடாது
வாழ்க்கை முழுதும்
வீழ விடாது
கண்முன் வாழும்
உயிர்கள் நாளை
கானல் ஆவதும்
இயற்கையின் லீலை
இனிப்போ கசப்போ
இரண்டையும்
ருசிப்போம்
இதுதான் வாழ்க்கை
இருக்கும் வரை
(வ)ரசிப்போம்
கற்றுக் கொள்ள
ஆயிரம் உண்டு
கற்பவை வாழ்வில்
துணையாய் கொண்டு
ஏற்றம் பெறுமோ
இகழ்ச்சி தருமோ
நாளை எல்லாம்
கடந்து விடுமோ
அறிந்தோர் தெரிந்தோர்
அவணியில் இருக்க
அண்டத்தின் உண்மை
எவரிடம் மறைக்க
எ(ன)வர்க்கும்
ஒர் நாள்
நிச்சயம் உண்டு
அதுவரை கற்போம்
மன மகிழ்ச்சி
கொண்டு
கரு சந்திரசேகரன்,
தலைவர் உலகத் தமிழின பேரியக்கம்.
add a comment