24views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
வாழ்க்கைக்கான அர்த்தம் கண்டுபிடி …
அது உன்னை வாழ வைக்கும்..
வாழ்க்கை அர்த்தம் நிறைந்தது..
அர்த்தப்படுத்துவது…
நீ வாழ்ந்து – அதை அர்த்தப்படுத்து …
முகம் தெரியாதவர் பலருக்கும் கூட –
உழைப்பு முகவரிகளைக்
கொடுத்து இருக்கிறது…
அழகான முகம் உடையவன் நீ –
பிறகு ஏன் வீணாகக்
கவலைப்படுகிறாய்?
தவழ்ந்து கிடக்கும்
ஒருவரைப்பார்க்கையில்
நீ நிமிர்ந்து நிற்கிறாய் என்பது
நிறைவாய் இல்லையா ?
கால் கைகள் இழந்த
ஒருவரைக் காணுகையில்
உன் கால் கைகள் உன்
முதலீடாய்த் தெரியவில்லையா?
பார்வைகளும் கேள்விகளும்
அற்றுப்போனவர்கள் மத்தியில்
உன் பார்வைகளும் கேள்விகளும்
கோடிகளை விட
பெறுமானம் உடையதில்லையா?
இரத்தல்தான் இழுக்கு…
அடுத்தவரிடம் கைநீட்டி
இரத்தல்தான் இழுக்கு..
முயற்சிகள் இன்றிச்
சோம்பிக்கிடப்பதுதான் அழுக்கு…
ஓர் எட்டு வைத்து நடந்து பார் …
உலகம் உன் முன் சுருங்கி வரும்..
உன் சிறப்புகள்
சிறகுகள் விரித்துப் பெருகி வரும்..
வேண்டிய உயரம்
பறக்கும் துணிவு வரும்…
விழுவது இயல்பு..
அதற்காக விழுந்து கிடக்காதே …
அதுதான் குற்றம்..
எழு ..
நீயே எழு ..
சுயமாக எழு …
சுயமாக எழுந்து நில்..
சுயமாகத்தொடர்ந்து செல்…
நீயே முயன்று வெல் …
உன் பின்னால் பலர்
தொடர்ந்து வர பார்ப்பாய்.
மனிதர்கள் நேசி..
மானுடம் நேசி..
அன்பும் கருணையும்
இரு கண்களால் வாசி…
உலகம் உனக்காக..
ஆகின்ற அனைத்தையும்
அழகாகப் பயன்படுத்து….
ஒருபோதும்
வரம்பு மீறாதே..
வாழ்க்கையின் நல்ல
வழிமுறைகள் மாறாதே…
நிகழ்காலத்தில் இரு..
நிகழ்காலத்தில் எழு ..
நிகழ்காலத்தில் வாழ்…
இதுதான் உன் புகழ் காலம்…
எதிர்காலம் –
உன் நிகழ்காலத்தைப் புகழும்
சாதனைக்காலமாய் மாறட்டும்..
பேரிறைப் பெருங்கருணை ஆளட்டும்..
அது என்றும் நமதாகட்டும்…
add a comment