23views
அத்தாவுல்லா,
நாகர்கோவில்
அந்தந்த நதிகளை
அவ்வவற்றின் திசைகளிலேயே நடக்க விடுங்கள்…
நதிகள் நடப்பதுதான்
நாட்டிற்கு அழகு…
அவற்றை வலிந்து
திருப்ப முனையாதீர்கள் …
அது ஒரு வகையில்
வம்படி வழக்கு…
தாய் முலைக்காம்பில் சுரப்பதெல்லாம்
பிள்ளைகளுக்குத்தான் ..
நீங்கள் ஏன்
கள்ளியின் பாலை
புகட்டச் சொல்கிறீர்கள்? கருத்தடையில் கொன்றது இல்லாமல்
மீறிப் பிறந்த பிறகு ஏன்
இன்னொரு பிள்ளைவதை செய்கிறீர்கள்….
மாடுகளை மட்டும் சுற்றி வராமல்
உலக மாநாடுகளையும்
சுற்றி வாருங்கள் …
அப்போது அறிய வருவீர்கள்
தாய்மொழியின் மகத்துவம்…
தனித்துவ மொழிகளின்
இமயச் சிகரம்…
உலகத் தலைவர்களில் உயர்ந்தவர்கள்
எல்லோரும் அவரவர்
தாய்மொழியில் கற்றவர்கள்தான்…
விருதுகள் வென்ற விஞ்ஞானிகளின்
அதிசய அறிவியல் பூர்வீகம் அவரவர்
அன்னைத் தாய் மொழிதான்…
அவர்கள் மின்விளக்கு இல்லாத
காலத்திலும் படித்தவர்கள்…
விண்மீன்களையே மின்மினிகளாய்
தங்கள் கண்டுபிடிப்புகளுக்குள்
முடிந்தவர்கள்…
உலகாளும் எங்கள் தமிழர்களைப் போல
எங்களுக்கா நீங்கள் பாடம் நடத்துகிறீர்கள்?
அவர்களுக்கு இன்னொரு மொழி என்பது
நெற்றியில்
வலிந்து வைக்கும் வைக்கும்
மூன்றாவது விழி…
குயிலின் இசை வேறு காக்கையின்
மொழி வேறு
மயிலின் நடம் வேறு
வான் கோழியின் நடை வேறு…
ஒவ்வொன்றும்
ஒவ்வொன்றின் மூலக்கூறு…
அவரவர்
வாயும் வயிறும்
வேறு. வேறு…
காட்டுக்குள் இருந்தாலும்
அவை இணங்கி இருக்கும் …
ஒரே கூட்டுக்குள் இருந்தாலும்
பிணங்காமல் இருக்கும்…
தாய் மொழியை நேசிப்பவர்க்கெல்லாம்
ஒரே கவலை
உலக சுபிட்சம்தான்..
உங்களுக்கோ மனிதர்களிலும் பாரபட்சம்தான்…
கொஞ்சம் வரலாறு படியுங்கள்…
உலகத்தின் மூத்த மொழி எதுவென்று பாருங்கள்…
தமிழென்று
அறிய வந்தால்
அரியாசனம் ஏற்றுங்கள்…
எங்கள் மொழியின்
ஒரு சொல்லுக்கு
ஒரு நூறு பொருள்…
பூ விரும்புவோம்
தீ விரும்ப மாட்டோம் …
தேன் விரும்புவோம்
தேள் விரும்ப மாட்டோம்…
நாங்கள் உலகுக்கே
பாடம் சொல்பவர்கள் …
எங்களுக்கு
இரு மொழிக்கொள்கை
ஏற்கனவே இருக்கு …
வேண்டாம் இந்த
மும்மொழி வழக்கு….
add a comment