கவிதை

புனித நதிகள் ?

40views
அத்தாவுல்லா,
நாகர்கோவில்.
தரிசனங்களின் திருமுகங்கள் என்கிறார்கள் …
புனிதங்களின் நீர்த்துறைகள் என்று பூசுகிறார்கள்… உங்களுடைய
சுவனங்களின் கடைதிறப்பு அகோரிப் பிணங்களின் ஆடம்பர ஆட்டங்களிலா ஆரம்பமாகிறது ?
ஆன்மீகம் சுமந்த ஆற்றுப்படுகைகள் எல்லாம் இப்போது இங்கே
பிணம் சுமந்த சேற்றுப்படுகைகளை விட
மோசமான
நாற்றப்படுகைகள் ஆகிவிட்டன …
உங்கள் புனித நதிகளில்
புனிதர்கள் வந்து நீராடிப் போகட்டும் பாவம் மனிதர்கள்…
இந்த அப்பாவிகள் விட்டு விடுங்கள்….
கூழானாலும் குளித்துக் குடி கந்தையானாலும் கசக்கி கட்டு எனும் போதனைதான்
எங்கள் தமிழில் …
அழகாய் ஓடிய அந்தக் கால நதிகள்
இன்று கொஞ்சம் அழுக்காய் ஓடலாம்தான்…
ஆனால் உங்களைப்போல
அத்தனை அவலங்கள் இங்கே இல்லை…
காலம் கடந்தவனை கைரேகைகளைக் கொண்டு என்று கணிக்க ஆரம்பித்தார்களோ
அன்றே ஆரம்பமானது அவர்களின் ஆன்மீகப் புழு… மனங்களில் துரு …
எந்தச் சாமியும் மனிதக் கறி கேட்கவில்லை…
எந்தத் தாயும் தன் பிள்ளைகளைப் பலி வாங்குவதில்லை ..
புழு புழுத்த மூளைக்காரர்களே! உங்களுக்கு
மட்டும் எப்படி அசிங்கங்கள் எல்லாம் அழகாயின ?
நிர்வாணங்கள் எல்லாம் நிம்மதியாயின ?
அகோரிகள் ஆன்மீகத்
தந்தையர் ஆயினர்?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
உங்களுக்கு மட்டும் பேதகப்பட்டது எப்படி ?
ஒன்றே குலம் ஒருவனே தேவன் உங்களுக்கு மட்டும் ஊருக்கு ஒரு நூறு சாமிகள் எப்படி?
வணிகம் தானே மானுட வாழ்வாதார முதலீடு?
உங்களுக்கு மட்டும் அது குலத்துக்குள் கல்வியாய்
கொடி நாட்டியது எப்படி ?
எலி வளை என்றாலும் தனிவளை என்றது
தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும் என்பதற்குத்தான்…
உங்களுக்கு மட்டும் அது எப்படி
தலித்துகளின் குடிசைகளானது ?
அவர்களின் மாளிகை உயரங்களை
உங்கள் மதங்களா அளந்து சொல்லுவது?
எச்சரிக்கை அயோக்கியர்களே! மானுடன் உழைப்பு மகத்தான எந்திரம்
அது சந்திரன் நெற்றியிலேயே தன் கையை வைக்கும் ..
பிறகு அதுவே முக்கண்ணாக மாறி உங்களை எரிக்கும்… எச்சரிக்கை
கொஞ்சம் ஓலைக் குடிசைக்குள் உற்றுப் பாருங்கள்…
கொஞ்சம் மருத்துவமனைகளுக்குள் நின்று கேளுங்கள்
எந்த ரத்தத்தில் நீங்கள் வித்தியாசம் பாராட்டுகிறீர்கள்? சுடுகாட்டு எலும்பைக்
கொஞ்சம் சோதியுங்கள் …
எந்த எலும்பில் நீங்கள்
வருண சாத்திரம் பூசுகிறீர்கள்?
கொஞ்சம் சொல்லுங்கள்
எங்கே கற்றீர்கள்
இந்த அதர்மப்பாடம்…
விட்டு விடுங்கள் வீணர்களே வேண்டாம் விபரீத விளையாட்டு
மனிதனை மனிதனாகவே மதியுங்கள் …
அதுதான்
மிருகங்களில் இருந்து உங்களை பிரித்துக் காட்டும்
அது எப்போதும்
எல்லோருக்கும் நல்லது….

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!