30
ராசி அழகப்பன்
நகர்ந்து கொண்டே இருக்கிறது
நதியும் வாழ்வும் ..
சில சமயம்
நதிகளில் மலர் கொள்ளை
வாழ்வில் மனக் கொள்ளை..
இழக்காமல்
எதுவும்
கிடைப்பதில்லை என்கிறது
நீதி
தானே இழப்பின்
அது என்ன நீதி
என்கிறது மனிதம்
பூக்கும் மரங்களில்
வண்டுகள் முற்றுகை…
வண்டுகளை ஆராய
பூவுக்கில்லை
வேற்றுமை..
வாழ்க்கையே
அனுமதிக்காமல்
வந்தேறி
வலுப்பெறுகிற
எண்ணங்களால் வேதனை
நதிகள்…
திசைகளை தேடி
பயணிப்பதில்லை..
தானே
திசையாகி
தடம் பதிக்கிறது..
என்ன சொல்வது
காற்றின் போக்கே
நியதி என அறியாமல்
காற்றையே
களவாடுகிறது
செயற்கை…
பட்டுப் பட்டு
சிலையாகும் சொற்களை
மீண்டும் உச்சரிக்காதீர்..
எல்லா கற்களும்
வாழப் பிறந்தவையே!
நீரில் என்ன
தகுதிச் சான்று…
உயிர் காப்பதே
நீரின் தத்துவம்..
தத்துவத்தை
விற்க
தலை நீட்ட வேண்டாம்.
நதியின் துவக்கம்
துளிகளின் இணக்கம்.
துளிகளின்
அரவணைப்பே
நதி
நதியின்
விதியே
அடைப்புக்குள்
அடங்காதது.
வாழ்க்கையும்
அவ்வாறே!
விதிகளற்ற நதி
வாழ்க்கை
கறைகளுக்குள்
அடங்காத-
அன்பின் துகள்
வாழ்க்கை!
நதியோடு போகும்
மலராவதே-
பயணத்தின் அழகு!
வாழ்வும் அப்படித்தான்…
இதயம் விதைக்கும்
நானிலத்தில் விளையும்..
விளைந்த சொற்களின்
வழியே-
நனவாக்கும் பயணம்
முன்னும் பின்னும்
தடைகள்
அவசியப்படாதது
நதி!
வாழ்க்கையும்
நதி தான்…
தனக்கான பயணத்தை
தானே செய்யும்!
add a comment