கவிதை

உடைக்க முடியாத பெரியார்…

14views
உடைத்துப் போடுவதற்கு
நீயென்ன வெறும்
வண்ணக் கலவையா…?
அழுக்கு சித்தாந்தங்களின்
ஆரியக் கொழுப்பை
உருக்கி எடுத்தத் தமிழரின்
உடைவாள் அல்லவா …?
சாதிகளை உடைத்து
சனாதனத்தின் மேல்
போர் தொடுத்து
சண்டாளத்தனங்களைத்
தகர்த்தெறிந்து
சிறுமைகளைக் கண்டு
செருப்பாலடித்துச் சீர்படுத்தி
மதக் கீழ்மைகளை
மாண்டழியச் செய்து
மக்கள் மனங்களில்
புரட்சிக்கனல் ஏற்றிய நீயென்ன
வெறும் வண்ணக் கலவையா?
தமிழர் மனங்களின்
என்றென்றும் மாறாத
எண்ணக்கலவை அல்லவா …?
உன்மீதா கோபம் அவர்களுக்கு ..
இல்லை…இல்லை…
அது இன்றும் வாழும்
சித்தாந்தங்களின் மீது…
எவராலும் தகர்க்க முடியாத
உன் தனித்துவம் மீது…
தத்துவங்கள் மீது…
சுய சிந்தனைகளாலும்
தேர்ந்த பகுத்தறிவாலும்
பக்குவப்பட்ட
மன உணர்வுகளாலும்
குழைத்துக் கட்டப்பட்ட
நூறாண்டுப் பாரம்பரியமிக்க
திராவிடக் கோட்டை நீ…
உன்னை, சிறுமைகளா
சிதைக்க முடியும்…?
இன்றைக்கு
வீறாப்போடு
வெறுப்பரசியல் நடத்தும் எதிர்கட்சியினரின்
பெண்குலத்துக்கும்
மாராப்பு தந்த மாண்பாளன் நீ…
தமிழகத்தின்
மூலை முடுக்கெல்லாம்
மேலோர்களாய்க்
காலூன்றிக் கிடந்த
நூலோர்களின் காலொடித்துத்
தலையெடுக்க முடியாமல் கிடந்த
ஒடுக்கப்பட்டவரையும் தடுக்கப்பட்டவரையும்
காலூன்ற வைத்தவன் நீ…
நூலோர் காலொடித்தவன் நீ…
அப்படிக் காலூன்ற
முடியாதவர்களா
உன் தலையெடுக்க முடியும்…?
அந்தக்கோபம்தான்
அவர்களுக்கு …
வேறென்ன…
பாகப் பிரிவினை
பஞ்சாயத்துகளுக்காகவா
பகை காட்டுகிறார்கள்… ?
அத்தாவுல்லா
நாகர்கோவில்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!